“அரசியலை அதன் தோற்றத்தில் அல்ல, அதன் உள்ளடக்கத்தில் புரிந்து கொள்ள வேண்டும்” என்ற மேதமைமிக்க கூற்று ஒன்று உண்டு. கொலைக் களத்திற்கு கருணை இல்லம் என்று பெயரிடுவார்கள். சித்தரவதை முகாமிற்கு அன்பு மாடம் என்று பெயரிடுவார்கள். சிறைச்சாலைக்கு தர்மசாலை என்று பெயரிடுவார்கள். என்பதையொத்த தீர்க்கதரிசனம் 1940களின் பிற்பகுதியில் உரைக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக ஜோர்ஜ் ஓவல் எழுதிய “1984” என்ற தலைப்பிலான கருத்துருவ நாவல் இதற்கு சிறந்த உதாரணம். இந்தவகையில் தமிழின அழிப்பிற்கு “நல்லிணக்கம்” என்று பெயரிட்டுள்ளார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
இலங்கை அரசியலில் இலங்கையர் தேசியவாதம், இனஐக்கியம், நல்லிணக்கம் என்பன தோல்வி அடைந்துவிட்டமைக்கான வரலாற்றுச் சின்னமாக எஸ். ஹன்டி பேரின்பநாயகம் விளங்குகிறார். காலனிய ஆதிக்க எதிர்ப்பு, இலங்கையர் தேசியவாதம், பூரண பொறுப்பாட்சி, சமூக சமத்துவம் என்பன இவர் முன்வைத்த அரசியல் கொள்கைகளாகும். 1931ஆம் நடைமுறைக்கு வந்த டெனாமூர் அரசியல் யாப்பு மேற்படி கூறப்பட்டதான பூரண பொறுப்பாட்சியை வழங்கவில்லை என்று கூறி அந்த யாப்பின் கீழான முதலாவது பொதுத் தேர்தலை (1931) முன்னின்று பகிஷ்கரித்த முன்னணித் தலைவர்களில் எஸ். ஹன்டி பேரின்பநாயகம் முதன்மையானவர்.
இத்தேர்தல் பகிஷ்கரிப்பு பற்றிய அழைப்பிற்கு அப்போது தென்னிலைங்கையில் காணப்பட்ட அனைத்து முன்னணிச் சிங்களத் தலைவர்களும் வரவேற்பும் ஆதரவும் அளித்திருந்தனர். ஆனால் யாழ்ப்பாண குடாநாட்டின் நான்கு தொகுதிகளிலும் தேர்தல் வெற்றிகரமாக பகிஷ்கரிக்கப்பட்ட போது அதில் எந்தொரு சிங்களத் தலைவரும் தமது பகுதிகளில் பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவில்லை. ஆனால் அக்காலத்தில் பகிஷ்கரிப்பு பற்றி சிங்களத் தலைவர்கள் வரவேற்று வாழ்த்தத் தவறவில்லை. குறிப்பாக அப்போது மிகப்பெயர் பெற்ற சிங்கள அரசியல் தலைவர்களில் ஒருவரான திரு. பிலிப் குணவர்த்தன லண்டனில் இருந்து Searchlight, 20-27.6.1931 என்ற பத்திரிகைக்கு எழுதிய கடிதம் பின்வருமாறு அமைந்தது.
“கடந்த சில வருடங்களாக இலங்கையில் யாழ்ப்பாண காங்கிரஸ் மட்டுமே அரசியல் விவேகத்தை வெளிப்படுத்திய அமைப்பாகும். யாழ்ப்பாணம் இப்பொழுது வழிகாட்டியுள்ளது. நாட்டின் சுதந்திரத்திற்காக முழக்கம் செய்யுமாறு அவர்கள் தமது தலைவர்களுக்கு கடும் அழுத்தம் கொடுத்துள்ளனர். அது பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலிருந்து உடனடியாக முழுமையான சுதந்திரம் பெறுவதற்கான அழுத்தமாகும். எப்போதும் உச்சமான துணிச்சலை வெளிப்படுத்தும் சிங்களவர்கள் அதனை புரிந்துகொண்டு பின்பற்றுவார்களா. ஒரு பிரமாண்டமான போராட்டத்தை நாம் எதிர்பார்க்கிறோம். தேர்தல்களை பகிஷ்கரிப்பது என்பது ஒரு சமிஞ்சை மட்டுமே."
மேற்படி தேர்தல் பகிஷ்கரிப்பு பற்றி சிலோன் டெய்லி நியூஸ் 4-5-1931 பத்திரிகை எழுதிய ஆசிரியர் தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் பொதுமக்களின் அபிப்பிராயமானது சக்திவாய்ந்ததாகும். ஆதனை எதிர்ப்பவர்கள் அழிந்து போவார்கள். என்றுமே பலமான அரசியலை தன்னகத்தே கொண்டுள்ளதாகிய யாழ்ப்பாணம் தனது பிரஜைகள் எந்தொரு நெருக்கடியையும் எதிர்கொள்வதற்கான பொதுநல மனப்பாங்கு உள்ளவர்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்கு உறுதிபூண்டு நிற்கின்றது.
தேர்தல் பகிஷ்கரிப்பை ஆதரித்து அகில இலங்கை லிபரல் லீக் தனது ஆதரவைத் தெரிவித்தது. பிரான்சிஸ் டி சொய்ஸா, ஈ.டபுள்யூ.பெரேரா, ரி.பி.ஜெயா ஆகிய தலைவர்கள் கூட்டாக அனுப்பிய தந்தியில் தெரிவித்ததாவது:-
அற்புதமான சாதனை படைத்ததையிட்டு யாழ்ப்பாணத்தை மனமார வாழ்த்துகிறோம். இங்கே தென்னிலைங்கையில் அவ்வாறு செய்யத் தவறியமையானது சிறிதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததும் விமர்சனத்திற்குரியதுமாகும்.” {சிலோன் டெய்லி நியூஸ் 6-5-1931}
இவ்வாறு எஸ். ஹன்டி பேரின்பநாயகம் முன்னின்று தலைமைதாங்கி அரங்கேற்றிய தேர்தல் பகிஷ்கரிப்பை சிங்களத் தலைவர்கள் முதலில் வரவேற்றிருந்தனர் என்பதே உண்மையாகும். ஆனால் பின்பு இந்த உண்மைக்கு மாறாக மேற்படி பகிஷ்கரிப்பை மேற்கொண்டமையானது தமிழினவாதத் தன்மை கொண்டதென்றும் அது வகுப்புவாத நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒன்றென்றும் அதற்கு இனவாத சாயத்தை சிங்களத் தலைவர்கள் பூசத் தொடங்கினர். இதன் மூலம் எஸ். ஹன்டி பேரின்பநாயகத்தையும ஒரு வகுப்புவாதியாக சித்தரித்தனர்.
இதுபற்றி எஸ். ஹன்டி பேரின்பநாயகம் குறிப்பிடுகையில்:- “பல பொறுப்புவாய்ந்த சிங்களத் தலைவர்கள் பகிஷ்கரிப்பு மற்றும் அதன் பொருட்டு எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு விடாப்பிடியாக இனவாத அர்த்தம் கற்பித்து வந்துள்ளனர். ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு மாநாட்டில் காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்காவும் நான் சந்தித்தபோது பகிஷ்கரிப்பு நடவடிக்கை இனவாத நோக்கங்களினால் உந்தப்பட்டதென என்னிடம் அவர் கூறியவேளை அது அப்படியல்ல என நான் மறுத்தது ஞாபகமாக இருக்கிறது.
அண்மையில் திரு. எச்.எ.ஜே. ஹலுஹல்ல எழுதிய விஜயவர்த்தன வாழ்க்கை வரலாற்று நூலில் அதே பழியை சுமத்தியுள்ளார். எமது வாழ்க்கை வரலாற்றையும் ஒரு ஐக்கியப்பட்ட சுதந்திரமான இலங்கை என்ற இலட்சியத்திற்கு நாங்கள் இடையறாது அர்ப்பணித்து நின்றதற்காக கொடுத்த விலையையும் கணக்கில் எடுத்தால் எவராலுமே அவ்வாறான கருத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது.
டொனமூர் சீர்த்திருத்தங்கள் முழுமையான சுதந்திரத்திற்கு முழுமையான சுதந்திரத்திற்கு மிகவும் குறைவாய் இருந்ததன் காரணமாகவே பகிஷ்கரிப்பு இயக்கம் முடுக்கிவிடப்பட்டது.” [A Tribute to C. Sundaralingam, the Skanda, April 1966. இவை பற்றிய விவரங்களை “யாழ்ப்பாணம் இளைஞர் காங்கிரஸ்” என்ற தலைப்பில் சீலன் கதிர்காமர் எழுதிய தமிழ், ஆங்கில நூல்களில் காணலாம்.}
எஸ். ஹன்டி பேரின்பநாயகம் ஓரு தமிழ்த் தேசியவாதியல்ல. அவர் ஓர் இலங்கையர் தேசியவாதி. அவர் தன் வாழ்நாளில் ஒருபோதும் தமிழ்த் தேசியக் கட்சிகளோடு தன்னை அடையாங்காட்டிக் கொண்டவரோ அல்லது இணைந்து செயற்பட்டவரோ அல்லர். அவர் ஈழத் தமிழர் பிரச்சனையை அடிப்படையில் ஒரு தேசிய இனப்பிரச்சனையாக புரிந்து கொண்டதைவிடவும் ஒரு மொழிப் பிரச்சனையாகவே அதிகம் புரிந்திருந்தார் எனத் தெரிகிறது.
அவர் மொழி சமத்துவத்திற்காக விட்டுக் கொடுப்பின்றி போராடியவர் என்பதில் சந்தேகமில்லை. இனஐக்கியத்துடன்கூடிய இலங்கையர் தேசியவாதம்தான் அவரது ஆத்மாவாக இருந்தது. இறுதிவரையும் அவர் அப்படித்தான் செயற்பட்டார். ஆனால் சிங்களத் தலைவர்கள் அப்படிப்பட்ட ஒரு நல்லிணக்க கொள்கையுடன் செயற்பட்ட ஒரு தமிழ் அரசியல் தலைவரை இனவாதியாக சித்தரித்தமை என்பது இனஐக்கியம், நல்லிணக்கம் என்பன ஒருபோதும் சாத்தியமில்லை என்பதற்கான ஒரு நினைவுச் சின்னமாக அவரை வரலாற்றில் நிறுத்தியிருக்கிறது.
இதன் பின் தமிழ் மக்களின் தலைவராய் திகழ்ந்த திரு. ஜி.ஜி.பொன்னம்பலம் சிங்களத் தலைவர்களுடன் நல்லிணக்க அரசியலில் ஈடுபட்டார். சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் தலைவர் திரு, ஜி.ஜி. பொன்னம்பலம் ஓர் அங்கமாக இணைந்து கொண்டார்.
ஆனால் எத்தகைய நல்லிணக்கங்களுக்கும் அப்பால் பிரதமர் டி.எஸ்.செனநாயக்க இன அழிப்புவாதக் கொள்கையை தெளிவாக முன்னெடுக்கத் தவறவில்லை.
டி.எஸ்.செனநாயக்கவின் மரணத்தைத் தொடர்ந்து பதவிக்கு வந்த டட்லி செனநாயக்க மற்றும் சேர்.ஜோன் கொத்தலாவல அரசாங்கங்களுடன் பொன்னம்பலம் இணைந்து நல்லிணக்க அரசியலை மேற்கொண்டார். ஆனால் மேற்படி மூன்று பிரதமர்களையும் உள்ளடக்கிய ஓன்பது ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் நல்லிணக்கம் தோல்வியுற்று இனஒடுக்குமுறை வெற்றிவாகை சூடியது.
தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம், மலையக தமிழர்களின் குடியுரிமை, வாக்குரிமை என்பனவற்றை பறித்தமை, களனி மாநாட்டின் மூலம்;; (1955) தனிச் சிங்கள சட்டத்துக்கான தீர்மானத்தை ஐதேக நிறைவேற்றியமை என்பன இனநல்லிணக்கத்திற்கு எதிரான சிங்களத் தலைவர்களின் அரசியலை பறைசாற்றி நிற்கின்றது.
மேற்படி காலத்தில் தமிழ்க் காங்கிரஸ் மட்டுமன்றி வேறு தமிழ்த் தலைவர்களும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைநது அமைச்சரவையில் பங்குவகித்து தமது நல்லிணக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும் அவற்றையெல்லாம் மீறி ஐக்கிய தேசியக் கட்சி இனவாதத்தை தெளிவாக முன்னெடுத்தது.
1965ஆம் ஆண்டு திரு, எஸ்.ஏ.வி. செல்வநாயகம் தலைமையிலான தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சியோடு கூட்டரசாங்கம் அமைத்து இன நல்லிணக்கத்திற்கான அனைத்து கதவுகளையும் திறந்து செயற்பட்டது. ஆனால் தன் பதவிக் காலத்தை தக்கவைக்கும் வரை தமிழரக் கட்சியுடன் காலபோக உறவைக் கொண்டிருந்த ஐதேக அனைத்துவகை நல்லிணக்கங்களுக்கும் மாறாகவே செயற்பட்டது.
இவ்வகையில் தமிழ்த் தலைவர்களுடன் இணைந்து நல்லிணக்கத்தை நிரூபிக்க முடியாதுபோன சிங்கள ஆட்சியாளர்களிடம் இருந்து “நல்லிணக்கத்தை” எவ்வகையிலும் எதிர்பார்க்க முடியாது.
அடுத்து அமிர்தலிங்கம் காலம் இங்கு நோக்கத்தக்கது. ஜெவர்த்தன 1977ஆம் ஆண்டு யூலை மாதம் பதவிக்கு வந்ததும் ஓகட்ஸ் மாதம் தமிழருக்கு எதிரான ஒரு பாரீய இனப்படுகொலை கலவரத்தை அரங்கேற்றிக் காட்டினார்.
ஓகட்ஸ் 16ஆம் தேதி இனப்படுகொலை கலகம் வெடித்துவிட்டது. அன்று மாலை இலங்கை வானொலியில் அப்போது பிரதமராக இருந்த ஜே.ஆர்.ஜெவர்த்தன நாட்டு மக்களுக்கு உரைநிகழ்த்தினார். எங்கும் சிங்கள காடையர்களினால் தமிழர்கள் அழிக்கப்படும் நிலை ஆரம்பமாகிவிட்ட வேளையது.
“போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்ற போர் அறைகூவலை வானொலி வாயிலாக தமிழ் மக்களை நோக்கி விடுத்தார். அதேவேளை அந்த அறைகூவலானது தமிழ் மக்களை அழிப்பதற்கான சிங்கள மக்களுக்கு விடப்பட்ட ஆணையாகவும் அமைந்தது. இதன் பின்புதான் இனப்படுகொலை கலகம் மேலும் உக்கிரமடைந்தது என்பது உண்மை.
பீரங்கிக் கப்பலுடன் நின்ற டச்சு கடற்படைத் தளபதிக்கு எதிராக கண்டி மன்னன் விமலதர்ம சூரியன் விடுத்த “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்ற அந்த அறைகூவலைத்தான் அப்பாவித் தமிழ் மக்களை நோக்கி அன்றைய பிரதமர் ஜெயவர்த்தன 1977ஆம் ஆண்டு விடுத்தார்.
இப்படிப்;பட்ட இனப்படுகொலையை நடாத்திய, அதனை ஊக்குவித்த ஜெயவர்த்தனவுடன் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் 1979ஆம் ஆண்டிலிருந்து 1982ஆம் ஆண்டு முடியும் வரை கைகோர்த்து தன் நல்லிணக்கத்தைக் காட்டினார். குறிப்பாக அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெவர்த்தனவும், பிரதமர் பிரேமதாஸாவும் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜே.ஆர். வெற்றி பெறுவதற்கு வாய்ப்பாக அந்த ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரித்து அதன் மூலம் அவரை மீண்டும் ஜனாதிபதியாக ஆக்கியதற்கான தமது பக்க நல்லிணக்கத்தை அமிர்தலிங்கம் நிரூபிக்கத் தவறவில்லை.
ஆனால் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு முழு அளவில் இராணுவ பரிமாணம் கொண்ட தமிழின ஒடுக்குமுறையை ஜெயவர்த்தன தீவிரமாக முன்னெடுத்தார் என்பதே உண்மையான அரசியல் வரலாறாக அமைந்தது. இதனை மிக நுணுக்கமாக புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இலங்கையர் தேசியம் ஒன்றுபட்ட இலங்கை, இன ஐக்கியம் என்பனவற்றின் மீது தீவிரமான பற்று வைத்து செயற்பட்டு இறுதியில் சிங்களத் தலைவர்களாலேயே இனவாதியென மகுடம் சூட்டப் பட்ட கண்டிப் பேரின்பநாயகத்தின் அரசியல் தோல்வியை சரிவர மதிப்பீடு செய்வதன் மூலம் அதன் பின்பு நிகழ்ந்த மேற்படி அரசியலுக்கான புரிதலையும் இனிமேல் நிகழப் போகும் அரசியலுக்கான புரிதலையும் பெற்றுக் கொள்ள முடியும்.
வரலாறானது சமூக இரத்தோட்டத்தை அடையாளங்காட்டவல்ல ஓர் உயிரோட்டம் கொண்ட அறிவியலாகும். இலங்கையின் வரலாற்று உள்ளடக்கத்தை புரிந்து கொள்ளாமல் இனப்பிரச்சனையை புரிந்துகொள்ள முடியாது. இந்த வகையில் சிங்கள ஆட்சியாளர்களின் தனிவிசேட இயல்புகளை புரிந்துகொள்ள ஒருசில புள்ளிகளே போதுமானது.
மேலைத்தேச கல்வி கற்றிருந்த கிறிஸ்தவரான எஸ்.டபுள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க திடீரென டொனமூர் பௌத்தரானார். இது ஒரு விபத்தல்ல. ஒரு வரலாற்றுப் போக்கின் குறிகாட்டி. பண்டாரநாயக்கவின் பாதையில் கிறிஸ்தவத்தை தழுவியிருந்த சிங்களத் தலைவர்கள் பௌத்தர்களாக மதம் மாறும் படலம் மேலெழுந்தது.
செனநாயக்க குடும்பத்தவர்கள் சேர்.ஜோன் கொத்தலாவல குடும்பத்தவர்கள், ஜெயவர்த்தன குடும்பத்தவர்கள் என இவர்கள் அனைவர்களினது பெயர்களுக்கு முன்னால் உள்ள முதலெழுத்துக்கள் கிறிஸ்தவ பெயர்களைக் குறிப்பனவாக இருப்பது கவனத்திற்குரியது.
ஆதியில் பௌத்தம், பாதியில் கிறிஸ்தவம், அரசியல் வீதியில் மீண்டும் பௌத்தம் என உருத்திரியும் சிங்களத் தலைவர்களின் வரலாற்றைப் பார்த்தால் இந்த மாற்றங்கள் எதுவும் வெறும் விபத்தானவையல்ல. மாறாக சிங்கள-பௌத்த இன உணர்வு உள்ள வரலாற்றுப் போக்கின் வெளிப்பாடுகளாகும். இது ஏனைய இனங்களுக்கு எதிரான உணர்வுகளுக்கான விளைநிலமாகவும் காட்சியளிக்கிறது.
7 பிரதமர்களின் செயலாளராக இருந்த பிரட்மன் வீரக்கோன் தனது பதவிக்கால அனுபவம் பற்றி எழுதிய நூலில் பண்டாரநாயக்கவைப் பற்றிய குறிப்பு மிகவும் முக்கியமானது. அவர் வீட்டுக் வெளியே வெள்ளை வேட்டியும், வெள்ளை தேசிய ஆடையுமென வெள்ளையும் வெள்ளையுமாக தூய பௌத்த வடிவில் காட்சியளிப்பார். ஆனால் வீட்டில் அவர் ஆங்கிலப் பாணியில் நீண்ட கால்சட்டை அணிந்திருப்பதுடன் மேலைத்தேச பாணியிலான உணவு மற்றும் பழக்க வழக்கங்கள் என்பனவற்றையே கொண்டிருந்தார் என்று குறிப்பிட்டுள்ளார். இங்கு ஒருவகை கபடம் இருப்பதைக் காணலாம். இந்த கபடம் முழுநீள அரசியலிலும் இருக்கிறது. இதனைப் புரிந்து கொண்டால் இனஐக்கியம், நல்லிணக்கம் பற்றிய சிங்களத் தலைவர்களின் பேச்சிக்கும் அவர்களது நடைமுறைக்கும் உள்ள வேறுபாட்டை பண்டாரநாயக்கவின் வீட்டுக்குள்ளும், வீட்டுக்கு வெளியேயுமான இரட்டைத் தனமான கபடத்திலிருந்து புரிந்து கொள்ளலாம். எனவே நல்லிணக்கம் என்று சிங்களத் தலைவர்கள் கூறுவதே மேற்படி கபட அரசியலின் முத்தாய்ப்பான உதாரணமாகும்.
காந்தியவாதியான ஹன்டி பேரின்மநாயகத்தின் இன நல்லிணக்க அரசியலை சிங்களத் தலைவர்கள் தோற்கடித்ததுபோல மார்க்சியவாதியான திரு,என். சண்முதாசனின் வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையிலான இனஐக்கிய அரசியலையும் சிங்களத் தலைவர்கள் இலகுவாக தோற்கடித்தனர். இருதலைவர்களும் இருமுனைப்பட்ட அரசியல் வழிமுறையைக் கொண்டவர்கள். ஆனால் இருவரும் இனஐக்கியம், இலங்கையர் தேசியம் என்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள். இருவரின் தோல்வியும் இனஐக்கியம், நல்லிணக்கம் என்பனவற்றிற்கான கடந்தகால, நிகழ்கால, எதிர்கால தோல்விகளுக்கான குறியீடாக உள்ளது. மேற்படி இருவருக்கும் இடையில் இன்னொரு சுவையான ஒற்றுமையுண்டு. காந்திய வழியில் நம்பிக்கை கொண்டவரும், அதற்கு விசுவாசமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவருமான ஹன்டிப் பேரின்மநாயகம்தான் ஈழத் தமிழர்கள் மத்தியிலிருந்த தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தின் தொடக்கப்புள்ளி. 1926ஆம் ஆண்டு கீரிமலை நகுலேஸ்வரத்தில் மேற்படி இளைஞர் காங்கிரஸ் மேற்கொண்ட தீண்டாமைக்கு எதிரான சமபந்தி போசனமே இலங்கை வரலாற்றில் இந்தவகையில் குறிப்பிடக்கூடிய முதலாவது போராட்டமாகும். தீண்டாமைக்கு எதிரான இந்த சமபந்தி போசன போராட்டத்தை பேரின்மநாயகம் ஆரம்பித்திருந்தாலும் அவர் அதில் வெற்றி பெற்றிருக்கவில்லை. ஆனால் மார்க்சியவாதியான திரு, என். சண்முகதாசன் 1960களின் பிற்பகுதியில் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் முதன்மையான பங்குவகித்தார். இதில் சிறுபான்மைத் தமிழர் மகாசபை, மொஸ்கோ கம்யூனிஸ்டுக்கள், சீன கம்யூனிஸ்டுக்கள் என பலதரப்பட்டோர் உறுதியுடன் போராடினர். இதில் சண்முகதாசனின் பங்கு முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை. அப்போராட்டத்தின் வாயிலாக தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட்டது ஒரு பெரும் வரலாற்றுச் சாதனைதான். இதில் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்திய கட்சிகள் கண்துடைப்புக்கு போராடினார்களே தவிர உண்மையான பங்களிப்பு அவர்களுக்கு இல்லை. சண்முகதாசன் ஒரு தமிழ்த் தேசியவாதியல்ல. அவர் தமிழ்த் தேசியவாத நோக்கத்தோடு இப்போராட்டத்தை அவர் முன்னெடுக்கவும் இல்லை. ஆனால் தீண்டாமை ஒழிக்கப்பட்டமையானது தமிழ்த் தேசியவாதத்திற்கான ஒரு மிகச் சிறந்த பங்களிப்பு என்பதில் சந்தேகமில்லை.
இங்கு காந்தியவாதி பேரின்மநாயகம் தீண்டாமைக்கான போராட்டத்தை 1920களில் ஆரம்பிக்க மார்க்சியவாதி சண்முகதாசன் 1960களில் அதை நிறைவேற்றி வைத்தார். இவரும் தமிழ்த் தேசியவாதிகள் அல்லர் என்பது மீண்டும் அழுத்திக் கூறப்பட வேண்டியதாகும். ஆனால் இந்த இருபெரும் தலைவர்களையும் சிங்களத் தலைவர்கள் வெகு சுலமாக தோற்கடித்திருக்கிறார்கள்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக திரு,என்.சண்முகதாசன் இருந்தார். அப்போது இளைஞர் அணித் தலைவராக ரோகண விஜேயவீர இருந்தார். ஆனால் தமிழ்த் தலைவனின் கீழ் இருக்க விரும்பாக விஜேயவீர இளைஞர் அணியை அப்படியே பிரித்துக் கொண்டுபோய் ஜே.வி.பி.யை உருவாக்கினார். அப்போது அவர் தான் கூறிய “புரட்சியில்” தமிழர்களை இணைக்கவில்லை என்பதுமட்டுமல்ல. தமிழர்களை இந்திய விஸ்தரிப்புவாதத்தின் கையாட்களாகவும் சித்தரித்தார்.
இனங்கள் இணைந்த வர்க்கப் போராட்டத்திற்கு தமிழன் தலைவனாக இருப்பதை சிங்கள இளைஞர்கள் விரும்பவில்லை என்பதே நடைமுறையாகும். இதன் பின்பு சண்முகதாசனின் கட்சி இயற்கை மரணமடைந்தது என்பது வேறுகதை. எப்படியாயினும் இன நல்லிணக்கத்தின் மீதும், தேசிய ஐக்கியத்தின் மீதும் விசுவாசம் கொண்டு உண்மையாகவே செயற்பட்ட இருமுனையினரான பேரின்மநாயகமும், சண்முகதாசனும் தோற்கடிக்கப்பட்டமை இனஐக்கியம், நல்லிணக்கம் ஒருபோதும் இலங்கையில் சாத்தியமாகாது என்பதை குறிப்பதுடன் தமிழ்த் தேசியத்திற்குத் தலைமைதாங்கிய பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோரின் நல்லிணக்கமும் பரிதாபகரமான தோற்கடிக்கப்பட்ட வரலாற்றில் இருந்து இன்றைய தமிழ்த் தலைவர்கள் பாடம் கற்கப் போகிறார்களா இல்லையா என்பதே பிரதான கேள்வியாகும்.
“காணாமற்போனோர் தொடர்பாக ஒருபோதும் விசாரணை நடத்தமுடியாது” என்று மிகத் திட்டவட்டமாக வடமாகாண ஆளுநர் இவ்வாரம் அறிவித்;திருக்கும் நிலையில் இரண்டரை ஆண்டுகால நல்லிணக்கத்தின் கபடம் அப்பட்டமாய் காட்சியளிக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டோர் இல்லை என்பது ஒரு பிரச்சனை அதற்காக அது தொடர்புயை யார் மீதும் விசாரணை நடைபெற மாட்டாது என்பது இன்னொரு பிரச்சனை. இது காணாமல் ஆக்கப்பட்டோருக்கான விசாரணை பற்றிய “நல்லிணக்கத்தின்” தோல்விமட்டுமல்ல. இனிமேல் வரப்போகும் அனைத்து தோல்விகளுக்குமான கட்டியமுங்கூட. அப்படியென்றால் இந்த நல்லிணக்க அரசியல் தோல்விகளுக்க யார் பொறுப்பேற்கப் போவது?
வெற்றி மீது உரிமை கோருவதைவிட, தோல்விக்கான பொறுப்பை ஏற்;பதிலேயே ஒரு தலைவனின் கண்ணியம் தங்கியிருக்கிறது. நல்லாட்சி, நல்லிணக்கதின் பேரால் அரசியல் பாலைவனத்திற்குள் தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்களின் அடுத்த கட்ட நிலை என்ன?
“நல்லிணக்கம் வடக்கில் இருந்தல்ல, அது தெற்கில் இருந்துதான் வரவேண்டும்.” வடமாகாண முதலமைச்சர் திரு. விக்னேஸ்வரன்.
அனுப்பியவர்: A. Majuran <இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.>