அன்பின் நண்பருக்கு, எனது கட்டுரையை பதிவுகளில் போட்டதற்கு மிக நன்றிகள். தமிழ்த் தலைவர்கள் தமிழர்களை முள்ளில் போட்ட சீலையாக்கிவிட்டார்கள். இது மிகவும் கவனமாக எடுக்கப்படவேண்டியது. கூச்சலாலோ ஆர்பாட்டத்தலோ சாதிக்கமுடியாது. என்னை நான் ஒரு இலங்கை அரசாங்கத்தில் செல்வாக்கு உள்ளவனாக பார்க்கவில்லை. தொடர்சியான எனது புலி எதிர்ப்பை தமிழ் மக்களின் நன்மை கருதிதான் செய்தேன். மற்றவர்கள் போல் எழுதிவிட்டோ, விருந்துகளில் கதைத்து விட்டு போவது எனது வழக்கமல்ல.
இலங்கைத்தமிழரின் தலைவிதி அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களினால் தான் தீர்மானிக்கப்படுகிறது. இதை வெளியே உள்ள நானே ,நீங்களோ மாற்றமுடியாது. அரசியல் மாற்றம் ,இலங்கையில் சிங்களவர்கள், தமிழர், இஸ்லாமியர் என மொத்தமான மக்கள் மத்தில் ஏற்படவேண்டும். வெளிநாடுகளோ, வெளிநாட்டுத் தமிழர்களோ உருவாக்க முடியாது. 87ல இந்தியா ஒரு இலச்சம் படைகளுடன் வந்து இலங்கையை பணியவைத்து உருவாக்கி 13 ம் சரத்துக்கு என்ன நடந்தது என்பது நமக்கு தெரியும். இப்பொழுது மேற்கு நாடுகளும் சனல்4 மற்றும் ஐக்கிய நாடுகளால் எதுவும ஏற்படும் என்ற நம்பிக்கையை கொடுப்பது மூலம் மீணடும் மீண்டும் நிழல் மானை வேட்டையாட தமிழரை தயார் படுத்தவேண்டாம். தவறான பரிசோனைகளால் தற்பொழுது இலங்கை தமிழர்களில் மூன்றில் ஓருவர் வெளியேறிவிட்டார்கள். இந்த தவறுகள் தொடர்ந்தால இலங்கை தமிழர் வடகிழக்கில் இருந்த வரலாறுதான் மிஞ்சும். தமிழர்கள் அல்ல , என்பது எனது திடமான நம்பிக்கை. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மனிதாமிமான உதவிகளும் ஆத்ம பலமும் பெற உதவுவது தான் எமது கடமை. இல்லையேல் நாம் அறுபது வருடங்களாக பாடம் கற்கவில்லை என்பதுதான் உண்மை.
நானும் நினைத்தால் இராஜபக்சாவுக்கு எதிராக சில கட்டுரையை தமிழிலோ அல்லது ஆங்கிலத்தில எழுத முடியும். அல்லது மெல்பேன் நகர முன்றலில் இலங்கை அரசை எதிர்த்து சில வார்த்தைகள் பேசமுடியும. இவற்றால வன்னியில் வாழும் மக்களுக்கு எந்த ஆறுதலும் கிடைக்க போவதில்லை.
'பதிவுகளி'ன் எதிரொலி 2!
[ தமிழ்த் தலைவர்கள் மட்டுமா தமிழர்களை முள்ளில் போட்ட சீலையாக்கியது? 1948இலிருந்து பாராளுமன்ற அரசியலைப் பிரதிநிதிப்படுத்திய தமிழ்த் தலைவர்கள் இலங்கையை தொடர்ச்சியாக ஆண்ட சிங்களப் பெரும்பான்மை அரசுகளுடன் எத்தனை ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார்கள்? ஆட்சியிலிருப்பவர் செய்யும் ஒப்பந்தங்களை முறியடிக்க எதிர்க்கட்சியினர் இனவாதத்தைத் தூண்டி விடுவார்கள். இனக்கலவரங்களைத் தூண்டி விடுவார்கள்.ஆட்சிக் கட்டிலிருந்தவர்கள் அனைத்து இன மக்களையும் உள்ளடக்கி, அவர்களது அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தீர்வுகளை ஏன் அமுல்படுத்தவில்லை? அவர்களிடம்தானே அதிகாரமும், படை பலமும் இருந்தன. பண்டா - செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து கண்டிக்குப் பாத யாத்திரை சென்றார் பின்னாள் 'த(ம்)ர்மிஷ்ட்ட' தலைவர் ஜே.ஆர். பின்னர் அவரிடம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூடிய ஆட்சி அதிகாரம் இருந்தபோது தனது அரசியல் எதிரிகளை ஒழிக்கப் பாவித்த அதிகாரத்தைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கப் பாவிக்கவில்லையே. அவரது ஆட்சியில் அவரது இனவாத அமைச்சர்களான சிறில் மத்தியூ, காமினி திசாநாயக்க போன்றவர்கள் ஆடாத ஆட்டமா? சிறிமா அம்மையாரிடம் ஆட்சி இருந்தபோது தமிழ் இளைஞர்கள்மேல் அடக்குமுறையினை ஏவிவிட்டு தமிழர் பிரச்சினையை ஊதிவிட்டார். அமைதியைக் கொண்டுவர அதிகாரத்தைத் தாருங்கள் என ஆட்சிக்கு வந்த சந்திரிகா அம்மையார் தமிழ் மக்கள் மேல் போரினை ஏவி விட்டார். தனது அரசியல் எதிரிகளை ஒழிப்பதில் வல்லவர் பிரேமதாசா. அவருக்கு அரசியல் ரீதியாகச் சவாலாக வரக்கூடியவர்களாகவிருந்த இராணுவத் தளபதி கொப்பேஹடுவ, காமினி திசாநாயக்க, அத்துலத் முதலி போன்றவர்களின் படுகொலைகளுக்குப் பின்னணியில் வேறு ஏதாவது அரசியல் காரணங்கள் இருந்திருக்கும் பட்சத்தில், அதாவது பிரேமதாசாவும் ஒரு காரணமாக இருந்திருக்கும் பட்சத்தில், அவற்றை அறிவதற்குரிய காலம் கடந்துபோய் விட்டது. எமக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது. அன்றைய ஜனாதிபதியான ஜே.ஆர் ஜெயவர்தனாவுக்கு தனக்கு அடுத்து ஜனாதிபதியாக பிரேமதாசா வருவதில் பெரிதாக விருப்பமிருக்கவில்லை. ஆனால் சிங்கள மக்களிடத்தில் தனது வீடமைப்புத் திட்டங்கள் போன்றவற்றால் மிகுந்த செல்வாக்கினைப் பெற்றிருந்தார் பிரேமதாசா. இந்நிலையில் தனது உறவினரான உபாலி ஜெயவர்த்தனாவை அரசியலுக்குள் நுழைத்து அவரது செல்வச்செழிப்பின் செல்வாக்கின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி , பின் அவரையே ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவராக உருவாக்குவதென்பது அவரது திட்டம். அதற்கு முதற்படியாக உபாலி ஜெயவர்த்தனாவைக் கம்புறுபிட்டிய தொகுதியில் நடைபெறவிருந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராக்கிக் கொண்டிருந்தார். அவர் மட்டும் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுப் பாராளுமன்றத்திற்குள் நுழைந்திருந்தால் தனது Island பத்திரிகையின் மூலமும், செல்வச் செழிப்பின் மூலமும் பிரேமதாசாவுக்கு அரசியல்ரீதியில் மிகுந்த சவாலைக் கொடுத்திருப்பார். இந்நிலையில் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு மாதமிருக்கையில் , தனது பிரத்தியேக விமானத்தில் பயணித்த்துக் கொண்டிருந்த உபாலியும், தமிழ் விமானமோட்டியும் நடுக்கடலில் காணாமலேயே போனார்கள். அவர்கள் பயணித்த விமானத்தையோ, பயணித்தவர்களையோ கண்டு பிடிக்கவே முடியவில்லை. இதனால் ஆடிப்போன ஜே.ஆர். உடனடியாகவே மீண்டும் தான் ஜனாதிபதி தேர்தலில் நிற்கப் போவதில்லையென்று அறிக்கை விட்டார். ஆயினும் அதன் பின் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகளின் விளைவாக அவரே மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவானார். உபாலியின் மறைவுக்கு எந்தவிதச் சாட்சியங்களில்லாது விட்டாலும், எல்லோருக்கும் பிரேமதாசா மீதுதான் சந்தேகமிருந்தது.அண்மையில் இராஜிவ் காந்தியின் படுகொலை பற்றிய நூலில் இந்திய அரசியல் ஆய்வாளர் ஒருவர் , அவரது கொலைக்கு பிரேமதாசாவும் ஒரு காரணமா என்பது பற்றிய சந்தேகமொன்றினை எழுப்பியிருந்ததை இணையத்தளமொன்றில் வாசித்ததாக நினைவு. எனவே தமிழ் மக்களை முள்ளில் போட்ட சீலையாக்கியது தமிழ் தலைவர்கள் மட்டுமல்லர். இதற்குப் பல காரணங்களைமேலுள்ளவாறு குறிப்பிட முடியும்: தொடர்ச்சியாக 1948இலிருந்து இலங்கையை ஆண்டு வந்த சிங்களப் பெரும்பான்மையின அரசுகளின் பாரபட்சமான கொள்கைகள், தமிழ் அரசியல் அமைப்புகளுக்கிடையில் நிலவிய ஒற்றுமையின்மை, மாற்றுக் கருத்துகளைச் சகிக்க முடியாத தன்மை , மாற்றுக் கருத்துகளைக் கொண்டவர்களைத் துரோகிகளாக்கி விடும் மனப்போக்கு, ஆயுதமேந்திய விடுதலை அமைப்புகளுக்கிடையில் நிலவிய ஒற்றுமையின்மை, அவற்றிற்கிடையில் நடைபெற்ற மோதல்கள், மாற்றுக் கருத்து கொண்ட அரசியல்ரீதியிலான செயற்பாடுகளைப் புரிந்தவர்களை துரோகிகளாக்கிக் களையெடுத்தமை, சாதாரண குற்றச் செயல்களைப் புரிந்தவர்களை சமூக விரோதிகளாகச் சித்திரித்து மரண தண்டனன கொடுத்துக் கொன்றமை மற்றும் மற்றும் பிராந்திய, சர்வதேச அரசுகளின் நலன்கள்... இவ்விதம் கூறிக்கொண்டே போகலாம்.
'தொடர்ச்சியான எனது புலி எதிர்ப்பை தமிழ் மக்களின் நன்மை கருதிதான் செய்தேன்' என்கின்றீர்கள்? எந்த அமைப்பைப் பற்றியும் உங்களது எதிர்ப்பையோ கருத்தையோ கூறுவது உங்களது பேச்சுரிமை. உங்களது அடிப்படை உரிமை. மக்கள் அனைவருக்குமிடையில் பல்வேறு பட்ட முரண்பட்ட கருத்துகள் , கொள்கைகள் இருப்பது தவிர்க்கப்பட முடியாதது. உங்கள் கருத்தை நீங்கள் கூறலாம். அவற்றை ஏற்காதவர்கள் தங்கள் கருத்துகளைக் கூறி முறையாகத் தர்க்கிக்கலாம். அதுவே சரியான நிலைப்பாடு. அதை விட்டுவிட்டு மாற்றுக் கருத்துகளுக்கெதிராகக் கூச்சல்போடுவது, உணர்ச்சிவெறி கொள்வது அறியாமையின் விளைவு. புலி எதிர்ப்பைச் செய்த நீங்கள், தமிழ் மக்களுக்கு எதிராகப் படையினரை ஏவிவிட்டு, மிகுந்த அழிவுகளை ஏற்படுத்திய இல்ங்கையின் ஆட்சிக் கட்டில்களிருந்த அரசுகளுக்கெதிராக அதேயளவு எதிர்ப்பினை வெளிக்காட்டினீர்களா? என்று நாம் கேட்டால் நீங்கள் ஆத்திரப்படக் கூடாது. ஏனெனில் அவ்விதம் கேட்பது எமது அடிப்படை உரிமை.
அடுத்தது 'மற்றவர்கள் போல் எழுதிவிட்டோ, விருந்துகளில் கதைத்து விட்டு போவது எனது வழக்கமல்ல' என்று கூறுகின்றீர்கள். விருந்துகளில் குடிவெறியில் கதைத்து விட்டுச் செல்வதென்பதுடன் எழுதுவதை நீங்கள் ஒப்பிடுவது சரியாக எனக்குப் படவில்லை. எழுதுவதென்று நீங்கள் குறிப்பிடுவதை நாம் எழுத்தாளர்களின் எழுத்து என்றே கருதுகின்றோம். ஒரு எழுத்தாளரின் ஆயுதம் எழுத்துத்தான். எல்லோராலும் எழுத முடியாது. எனவே ஒரு எழுத்தாளர் அல்லது பத்திரிகையாளர் நேர்மையான வழியில் நின்று, தர்க்க நியாயங்களைக் கூறுவதென்பது மிகவும் முக்கியமானது; பாராட்டப்பட வேண்டியது. பாரதியார் பாரதவிடுதலைக்காகப் பாடிச்சென்றார். அவரைப் போய் அவரென்ன செய்தார் விடுதலைப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென்று கேட்பதில் அர்த்தமில்லை. ஏனெனில் அவர் தன் வாழ்க்கையையே மானுட, பாரத விடுதலைக்காக தன் எழுத்தின்மூலம் குரல்கொடுப்பதற்குப் பயன்படுத்தினார். அவரது எழுத்து அவர் பயன்படுத்திய ஆயுதம். எனவே எழுத்தை அவ்வளவு இலகுவாக, கீழ்த்தரமாக எண்ணிவிடக் கூடாது. பத்திரிகையாளரான லசந்த படுகொலை செய்யப்பட்டதேன்? ரிச்சர்ட் டி சொய்சா படுகொலை செய்யப்பட்டதேன்? ராஜனி திரணகமா படுகொலை செய்யப்பட்டதேன்? அவர்களது எழுத்துகளின் வலிமை காரணமாகத்தானே?
எனவே 'தொடர்சியான எனது புலி எதிர்ப்பை தமிழ் மக்களின் நன்மை கருதிதான் செய்தேன். மற்றவர்கள் போல் எழுதிவிட்டோ, விருந்துகளில் கதைத்து விட்டு போவது எனது வழக்கமல்ல' என்று நீங்கள் கூறியிருக்க வேண்டிய தேவையில்லை. அவ்விதம் கூறுவதாகவிருந்தால் தமிழ் மக்களின் துன்பங்களுக்குக் காரணமாக நிகழ்வுகள் அனைத்தையும், காரணமானவர்கள் அனைவரையும் குறிப்பிட வேண்டும். அவ்விதம் குறிப்பிடும்போது உங்களது தர்க்கத்தில் நியாயம் மிளிரும். கேட்பவர்கள் அந்த நியாயத்தை உணர்ந்துகொளவார்கள். அவ்விதம் கூறாமல் ஒருபக்கத்தை மட்டுமே பெரிதுபடுத்திக் குற்றச்சாட்டுகளத் தொடுப்பீர்களென்றால், உங்களது கூற்றினைக் கேட்பவர்கள் அதில் சந்தேகம்கொள்ளும் நிலையேற்படும் சாத்தியமுண்டு என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
மேலும் 'இலங்கைத்தமிழரின் தலைவிதி அவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களினால் தான் தீர்மானிக்கப்படுகிறது. இதை வெளியே உள்ள நாமோ ,நீங்களோ மாற்றமுடியாது. அரசியல் மாற்றம் ,இலங்கையில் சிங்களவர்கள், தமிழர், இஸ்லாமியர் என மொத்தமான மக்கள் மத்தில் ஏற்படவேண்டும். வெளிநாடுகளோ, வெளிநாட்டுத் தமிழர்களோ உருவாக்க முடியாது' என்றும் கூறியுள்ளீர்கள். அவ்விதம் நீங்கள் கூறுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் வெளிநாட்டில் இருந்தாலும் நீங்களும் இலங்கையர்தான். அங்கு நடைபெற்ற நிகழ்வுகள் காரணமாக நீங்கள் வேறொரு நாட்டினில் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்கு வாக்குரிமை இல்லாவிட்டாலும் அங்கு நடைபெறும் நிகழ்வுகளையிட்டு செயற்படும் உரிமை உங்களுக்குண்டு. எழுதலாம். நாடகங்கள் போன்ற கலை வடிவங்களில் நடிக்கலாம்; அல்லது ஆடலாம்; வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யலாம். இவையெல்லாம் உங்களது அடிப்படை உரிமைகள். அங்கு, இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகளையிட்டு உங்களது கருத்துகள் எதுவாக இருந்தாலும், நீங்கள் உங்கள் கருத்துக்காக செயற்படும், வாதிக்கும் உரிமையினை நாம் ஆமோதிக்கின்றோம். அதே சமயம் , அவற்றை நாம் ஏற்காதவிடத்து, மிகவும் ஆக்ரோசமாகவும், ஆனால் நாகரிகம் தவறாமல் எதிர்த்து எம் கருத்துகளை வெளிப்படுத்தும் உரிமையும் எமக்குண்டு என்பதையும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம். எனவே இலங்கைத் தமிழரின் தலைவிதியைத் தீர்மானிப்பதில் , புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கும் ஒரு நியாயமான, தவிர்க்க முடியாத பங்குண்டு. அது அவர்களின் அடிப்படை உரிமையும் கூட.
அத்துடன் '87ல இந்தியா ஒரு இலட்சம் படைகளுடன் வந்து இலங்கையை பணியவைத்து உருவாக்கி 13 ம் சரத்துக்கு என்ன நடந்தது என்பது நமக்கு தெரியும்' என்றும் கூறியிருக்கின்றீர்கள். அவ்விதம் கூறுவதன்மூலம் என்ன கருத்தினைக் கூற வருகின்றீர்கள்? இவ்வளவு பலம் வாயந்த இந்திய இராணுவம் மீண்டும் நாடு திரும்பியதற்கு அங்கு நிகழ்ந்த அரசியல் மாற்றமும் ஒரு காரணம். விடுதலைப் புலிகளுடனான மோதல்களும் ஒரு காரணம். இலங்கையின் ஜனாதிபதியான பிரேமதாசாவின் தீவிர இந்திய எதிர்ப்பும் ஒரு காரணம். இவ்விதம் காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆனால் கவனிக்க வேண்டியது என்னவென்றால் .. இந்திய இலங்கை ஒப்பந்திற்காகவல்ல தமிழ் அரசியற் தலைமைகள் போரிட்டது. ஆனால் தனிநாட்டுடன் ஒப்பிடும்பொழுது மிகவும் குறைவான அதிகாரங்களையே கொண்ட அந்த ஒப்பந்தத்தையே , இவ்வளவு பலம்வாய்ந்த இந்திய அரசு படைகளுடன் திணித்தும் இலங்கை அரசு நிறைவேற்றவில்லை. இதிலிருந்து என்ன தெரிகின்றது? இலங்கையின் ஆட்சிக் கட்டில்களிலிருக்கும் சிங்களப் பெரும்பான்மை அரசுகள் தமிழர்கள் சிங்களத் தமிழர்களாக வாழ்வேண்டுமென்று விரும்புகின்றனவே தவிர, அவர்களைத் தனித் தேசிய இனமாகவோ, அவர்களுக்கென்றொரு பாரம்பரியப் பிரதேசமொன்று இருந்ததையோ ஏற்று அரசியல்ரீதியிலான தீர்வொன்றினை ஏற்படுத்தத் தயாராகவில்லை என்பதைத்தான். இலங்கை - இந்திய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப் படாததற்குக் காரணமாகப் புலிகளை மட்டும் குற்றஞ் சாட்ட முடியாது. ஏனெனில், இன்று புலிகளின் ஆயுதங்கள் மெளனித்து இரு வருடங்களைக் கழிந்த நிலையில் இன்னுமேன் அவர்களால் அந்த ஒப்பந்தத்தினை நிறைவேற்ற முடியவில்லை.
மூன்றிலிரண்டு பெரும்பான்மை மகிந்த அரசுக்குண்டு. தாராளமாக இந்திய இலங்கை ஒப்பந்தத்தினையோ அல்லது ஏற்கத்தக்க இன்னுமொரு ஒப்பந்தத்தினையோ ஏன் அவர்களால் இதுவரை வழங்க முடியாது போய் விட்டது? வடகிழக்கில் இராணுவத்தைக் குவித்து வைத்துள்ளார்கள். ஏனெனில் மீண்டும் பயங்கரவாதம் தலையெடுக்காதிருக்க அது அவசியமென்று இலங்கை அரசு கூறுகின்றது. அவ்விதமாயின் அவர்கள் இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி வைக்க வேண்டும். அப்பகுதிகளில் வாழும் மக்களின் சுதந்திரமான வாழ்க்கையில் அவர்கள் குறுக்கிடக் கூடாது. தமிழ் மக்களைப் புண்படுத்தும் வகையில் புத்த விகாரைகளை கட்டுவதற்குரிய தருணம் இதுவல்ல. அவர்களது பிரச்சினைக்கு உரிய தீர்வொன்றினைக் காண்பதற்கு இவ்விதமான நடவடிக்கைகள் தடைக்கற்களாகவிருக்கும். ஆனால் , அண்மையில் இலங்கையின் பாதுகாப்புச் செயலர் தெரிவித்த கருத்துகள், ஒற்றையாட்சியின் கீழ், நடைமுறையில் இருக்கும் அரசியல் சட்டங்கள் அடிப்படையில் தமிழர்கள் வாழ வேண்டுமென்ற கருத்துகள், எந்த வகையிலும் ஈழத் தமிழர்கள் பிரச்சினையினைத் தீர்த்து வைக்கப் போவதில்லை.
அடுத்து இன்னும் சில கருத்துகளையும் கூறீயிருக்கின்றீர்கள் 'இப்பொழுது மேற்கு நாடுகளும் சானல்4 மற்றும் ஐக்கிய நாடுகளால் எதுவும ஏற்படும் என்ற நம்பிக்கையை கொடுப்பது மூலம் மீணடும் மீண்டும் நிழல் மானை வேட்டையாட தமிழரை தயார் படுத்தவேண்டாம். தவறான பரிசோனைகளால் தற்பொழுது இலங்கை தமிழர்களில் மூன்றில் ஓருவர் வெளியேறிவிட்டார்கள். இந்த தவறுகள் தொடர்ந்தால இலங்கை தமிழர் வடகிழக்கில் இருந்த வரலாறுதான் மிஞ்சும். தமிழர்கள் அல்ல' என்று. 'சானல் 4' போன்ற ஊடகங்கள் மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை , மிகுந்த ஆதாரங்களுடன் வெளிப்படுத்தும்போது, அவற்றைப் பற்றி நீதியான, சுயாதீனமான விசாரணையொன்றினைத் தமிழ் மக்கள் மட்டுமல்லர், மனித உரிமைகளுக்காக வாதிடும், போராடும் அனைவரும் கேட்பது நியாயமானதொரு செயல். பாதிக்கப்பட்டவர்கள் நிமிர்ந்து நின்று நியாயம் கேட்பது பெருமைக்குரிய செயல். அவ்விதம் கேட்பதன் மூலம், பூரணமானதொரு விசாரணையினைச் செய்ய வேண்டிய நிலைக்கு இலங்கை அரசு தள்ளப்படும். நாம் இங்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலிருக்கும் அரசியல் அமைப்புகளின் தமிழர் தீர்வு சம்பந்தமான அரசியல் திட்டங்களைக் குறிப்பிடவில்லை. இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு, அவர்களின் இழப்புகளுக்கு நீதி கிடைக்கவேண்டுமென்பதையே குறிப்பிடுகின்றோம். அதற்கு நிறைய சாட்சியங்களை மேற்படி 'சானல் 4' போன்ற ஊடகங்கள் ஒளி(/ஒலி) பரப்பியிருக்கும்போது மிகவும் இலகுவாக எவ்விதம் தட்டிக் கழிக்க முடியும்? 40,000ற்கும் அதிகமானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகச் சாட்டப்பட்ட குற்றத்தை அவ்வளவு இலகுவாக எடுத்துவிட முடியுமா? தமிழர்களின் நன்மைக்காக குரல் கொடுத்ததாகக் கூறிய நீங்கள் இதற்குமேன் அவ்விதம் குரல்கொடுக்கவில்லை? இருந்தாலும் இதுவரை காலமும் நடைபெற்ற நிகழ்வுகளால் மனமுடைந்து, தனிப்பட்ட ரீதியில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதே மட்டும் போதுமானது; தொடர்ந்தும் அரசுடன் மோதிக்கொண்டு ஒன்றையும் சாதிக்க முடியாது என்ற கருத்துக்கு நீங்கள் வந்திருக்கலாம். ஆனால் அதற்காக அது சரியானதென்று மற்றவர்களுக்கு வலியுறுத்த முடியாது. ஆனால் , அவ்விதம் கூறுவது உங்களது கருத்துச் சுதந்திர உரிமையென்று ஏற்றுக்கொள்ளலாம். இன்று, 'சானல் 4' போன்ற ஊடகங்கள், இறுதிப்போரில் நடைபெற்றதாகக் குறிப்பிட்டு பல காணொளிக் காட்சிகளை வெளியிட்டதிலிருந்து, சர்வதேசரீதியாக, இலங்கை அரசால் தட்டிக் கழிக்க முடியாததொரு பிரச்சினையாக இப்பிரச்சினை உருவாகியிருக்கின்றது. சீனாவோ, இந்தியாவோ ஒருபோதுமே தங்களது தேசிய பாதுகாப்பு, பொருளாதார நலனகளுக்கு ஆபத்தெதுவும் வராத வகையில்தான் இலங்கைக்கு ஆதரவளிக்கும்.
இன்று சிங்கள மக்களில் பலர் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வொன்றின் அவசியத்தை விளங்கி வலியுறுத்தி வருகின்றார்கள். படைப்பாளிகள் தமிழ் மக்களுக்கெதிராக இன்றைய அரசு செயற்படுத்தும் திட்டங்களை விமர்சித்து வருகின்றார்கள். இவ்விதமானதொரு சூழல் முன்பு நிலவியதொன்றல்ல. அன்றைய காலகட்டத்தில் சிங்கள மக்கள் மத்தியில் இவ்விதமானதொரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டிருக்கவில்லை. இன்று ஏற்பட்டதற்கு இணையத்தில் நிலவும் தகவற் சுதந்திரம் முக்கியமானதொரு காரணம். இவ்விதமானதொரு சூழ்நிலையில் சிங்களவர்கள் பலரே நாட்டில் வாழ்முடியாத நிலையில் வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள். 'சிறிலங்கா கார்டியன்' போன்ற சஞ்சிகைகளே வெளிநாடுகளில் இருந்துதான் வரவேண்டிய நிலை. இந்நிலையில் இலங்கையில் வாழும் தமிழர்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள், சிங்கள் முஸ்லீம் மக்களையும் இணைத்துக் கொண்டு தமிழ் மக்களுக்குரிய அரசியல் தீர்விற்காகக் குரல்கொடுப்பதென்பது சரியானதொரு நிலைப்பாடே. அது எந்த வகையிலும் பிழையானதல்ல. அதற்காக முன்புபோல், தமிழர்களை உணர்ச்சிவெறியேற்றி, சிங்கள மக்களுக்கெதிரான இனவாத உணர்வுகளைத் தூண்டி அரசியற் செயற்பாடுகளை முன்னெடுப்பது, சிங்கள் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி, தமிழர்களுக்கெதிரான இனவாத உணர்வுகளைக் கிளப்பி அரசியல் செய்வது என்பன ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. தமிழர்களின் தீர்வுக்கான முதற்படியாக மேற்படி போரில் ஈடுபட்ட அனைவரும் புரிந்ததாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் சம்பந்தமான சுயாதீன விசாரணை அமையும். அதே சமயத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம் மக்களின் மீளக் குடியேற்றங்களையும், இடம்பெயர்ந்த தமிழர்களின் மீள்குடியேற்றங்களுடன் விரைவு படுத்துவதும் அவசியம்.
'அது தவறான பரிசோனைகளால் தற்பொழுது இலங்கை தமிழர்களில் மூன்றில் ஓருவர் வெளியேறிவிட்டார்கள். இந்த தவறுகள் xதொடர்ந்தால இலங்கை தமிழர் வடகிழக்கில் இருந்த வரலாறுதான் மிஞ்சும். தமிழர்கள் அல்ல' என்றும் குறிப்பிட்டுள்ளீர்கள். இதுவரை காலமுமான வரலாற்றில் தமிழ் மக்களுக்கும், சிங்கள் மக்களுக்குமிடையில் நடைபெற்ற போர்கள் பல. அவற்றில் அண்மையில் நடைபெற்ற போர்தான் 'முள்ளிவாய்க்காலில்' முடிந்த யுத்தம். யாழ்ப்பாணத்தைச் சப்புமல் குமாரயா கைப்பற்றிய போதும், அதற்கு முன்னரும் தமிழர்கள் யுத்தங்களில் தோல்வியுற்று சிங்கள் மேலாதிக்கத்தின் கீழ் வாழ்ந்திருக்கின்றார்கள். அதன் பின்னரும் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் , ஆங்கிலேயரென்று தமிழர்கள் பல்வேறு ஆட்சிகளின் கீழ் அடிமைகளாக வாழ்ந்திருக்கின்றார்கள். அப்பொழுதும், தமிழர்கள் நிச்சயமாக அகதிகளாக தமிழகம் சென்றிருப்பார்கள். இன்று வரலாறு மட்டும் மிஞ்சியிருக்கவில்லை; இன்னும் தமிழர்களும் மிஞ்சித்தானிருக்கின்றார்கள். தமிழர்களும், சிங்களவர்களும் இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றார்கள். இரு இனங்களுக்குமிடையில்கூட வரலாற்றுரீதியாக இரத்தக்கலப்பு கூட இருந்திருக்கின்றது. தமிழர்களும் இலங்கை முழுவதையும் பல தடவைகள் ஆண்டிருக்கின்றார்கள். சிங்களவர்களும் பல தடவைகள் இவ்விதம் ஆண்டிருக்கின்றார்கள். இவற்றின் காரணமாக எந்தவொரு இனமும் அழிந்து போய் விடவில்லை. நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்றிற்காக (அதுவும் தற்போது சர்வதேசப் பிரச்சினைகளிலொன்றாக இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை மாறிவிட்டுள்ள சூழ்நிலையில் அதற்கான சாத்தியமேயில்லை.) அடிமைகளாக வைத்துக்கொண்டே தீர்வுகளைத் திணிக்குமொரு அரசுக்குப் பணிந்து அடங்கிப் போகவேண்டுமென்று கூறுவது சரியானதொன்றல்ல. மேலும் இவ்விதமான பேரழிவுகள் மீண்டும் ஏற்படுவதைத்தவிர்ப்பதற்கும், நடந்து முடிந்த போர்க்குற்றங்கள் பற்றிய சுயாதீன விசாரணைகளும், சர்வதேச அழுத்தங்களும் அவசியம். மேலும் நடந்து முடிந்த நிகழ்வுகளை மிகவும் இலகுவாகத் 'தவறான பரிசோனைகள்' என்று குறிப்பிட்டு விட முடியாது. இதுவரை காலமும் நடைபெற்ற, தவிர்த்திருக்க முடியாத அரசியல் நிகழ்வுகளின் பரிணாம விளைவுகளே அவை. தவிர தவறான பரிசோதனைகள் அல்ல. - பதிவுகள்]