தாய்மைக்கும் பெண்மைக்கும் எமது சமூகத்தில் உதாரணம் தேடத் தேவையில்லை. ஆனால் என்னைப் பாதித்த விடயத்தை சொல்கிறேன். எனக்கு கிடைத்த தகவல்களின்படி இறுதிக்கட்ட போரில் பலர் சரண்அடையும் போது திப்பு சுல்தான் போன்று இறுதிவரையும் போரிட்டு இறந்த முக்கிய தளபதி சூசையாவார். சூசையின் மனைவி; கடைசி நேரத்தில் முள்ளிவாய்க்காலில் “நீங்கள் நடத்திய பயிற்சியில் நான் எனது மகனை இழந்தேன். ஆனாலும் உங்களை விட்டுப் போகவில்லை. இப்பொழுது இருக்கும் ஒரு குழந்தையையும் நான் இழக்கத் தயாரில்லை. நான் கடல்வழியாகத் தப்பி கடற்படையினரிடம் சரணடைவதை நீங்கள் தடுக்க முடியாது” என கூறிவிட்டு முள்ளிவாய்காலில் இருந்து அந்த போராளித் தாய் வள்ளத்தில் வெளியேறினாள். கடந்த வைகாசி மாதம் நான் இலங்கை சென்று திரும்பிய பின்னர் பெண்கள் அதிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த இளம் பெண்களைப் பற்றிய கட்டுரை எழுதினேன். அதனைப்படித்த பலர் என்னைத் தொடர்பு கொண்டு தமது கவலையைத் தெரிவித்தார்கள். வெளிநாடுகளில் இருக்கும் நாம் கவலை அடைவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. என்னைப் பொறுத்தவரை சமூகத்தின் மூலவேர் பெண்கள்தான். பலருக்கு இதை நான் அதிகம் விளக்கத் தேவையில்லை.
ஈழ விடுதலைப் போரை நான் தொடர்ச்சியாக விமர்சித்ததற்குக் காரணம் இப்படியான அழிவுகளை எதிர்பாரத்ததால்தான் நான் மிகவும் வெறுத்த சிங்கள அரசியல்வாதி ஜே ஆர் ஜெயவர்த்தனா. அந்தக் காலத்திலும் விடுதலைப்புலிகளை விமர்சித்தேன் ஏனைய இயக்கங்களையும் ஆதரிக்கவில்லை. ஆனாலும் இந்த இயக்கங்களில் நல்ல நண்பர்கள் எனக்கு இருந்தார்கள். அவர்களாலும் தழிழ் சமூகத்துக்கு நன்மை ஏற்படவில்லை
வெளிநாட்டில் வாழும் எம்மைப்போன்றவர்கள் நடைமுறையில் என்ன செய்யலாம் என்பது முக்கியம். அதுவும் எம்மளவில் செய்ய முடிந்ததாக இருக்கவேண்டும் . பெரிய திட்டங்களை எடுத்து முள்ளிவாய்காலில் முடிக்காமல் விடுவதை விட சிறிய விடயத்தை எடுத்து முடிப்பது மனநிறைவைத் தரும். என்னைப் பொறுத்தவரையில் நான் போரின் பின் சில விடயங்களை எடுத்தேன். அவற்றை முடித்துவிட்டு அதனால் மக்கள் பயன் அடைவதைப்பார்த்து சந்தோசப்படுகிறேன்.
எமது வாழ்க்கை என்பதும் நிரந்தரமானதல்ல. தொடர்ச்சியனதுமல்ல. நல்லவன் வல்லவன் கெட்டவன் என்று வரலாற்றை வென்றவர்கள் இல்லை. இருக்கும் காலத்தில் எவ்வளவு பணம் சேர்த்தாலும், அதிகாரத்தை மற்றவர் மேல் செலுத்த முடிந்தாலும் கடைசியில் எஞ்சுவது ஒரு பிடி சாம்பல்தான். இருக்கும் காலத்தில் செய்த நன்மைகள் மட்டுமே நினைவு கூரப்படும்.
சமீபத்தில் இலங்கைக்கு பல முறை சென்றுவந்ததால் விடுதலைப்புலிகளோடு நெருக்கமாக இருந்த பல நல்ல மனிதர்கள் எனக்கு நண்பர்களானார்கள். அவர்களின் தொடர்பு மூலம் குழந்தைகள் உள்ள நான்கு விதவைகளையும் கணவன் காணாமல் போய் தற்பொழுது குழந்தைகளுடன் வாழ அல்லல்படும் ஒரு பெண்ணுமாக ஐந்து குடும்பங்களைப் பற்றிய தகவல் மற்றும் வங்கி இலக்கங்களை பெற்றேன். எனது நண்பர்கள் மூவர் அந்த குடும்பங்களுக்கு மாதாந்தம் இலங்கை நாணயத்தில் 2500 ரூபா வீதம் வழங்க முன்வந்து மூன்று வருடங்களுக்குரிய பணத்தை வழங்கிவிட்டார்கள். இவர்களைப்பொறுத்தவரையில் மூன்று வருடங்களில் நிரந்தரமான ஜீவனோபாயத்துக்:கு வழி பிறக்க அவர்கள் உதவி செய்யமுன்வந்தனர். இவர்களை நிரந்தரப் பிச்சைக்காரர்களாக்குவது எமது நோக்கமல்ல . இந்த நிவாரண நிதிக்கொடுப்பனவில் நான் தொடர்பாளன் மாத்திரமே. எனவே நிதியை கையாளவேண்டிய பிரச்சினைகள் இல்லை. அதே வேளையில் எந்த வேலைப்;பளுவும் இல்லை.
உதவி செய்ய முன்வருபவர்கள் தாங்களே நேரடியாக குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட விதவைப்பெண்ணின் குடும்பத்திற்கு நிதிக்கொடுப்பனவை வழங்குகிறார்கள். இந்தத்திட்டத்தில் வெளிநாடுகளில் வதியும் உதவும் மனப்பான்மையுள்ள பெண்கள் ஈடுபடுவதையும் பெரிதும் வரவேற்கின்றேன்.
இது வானத்தை வில்லாக வளைக்கும் திட்டம் . எவ்வளவு நடைமுறை சிக்கல் ஏற்படும் என்பது தற்போதைக்குத் தெரியாது. அதேபோன்று எத்தனை பேர் இத்திட்டத்தினால் பயன்பெறுவார்கள் என்பதும் தெரியாத நிலையில,; தற்பொழுது ஐந்து பேர் பயன் பெறுவதும் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. மேலும் பலரை இந்த திட்டத்தில் இணைத்துக்கொள்ள விரும்புகிறேன். சிறுதுளி பெருவெள்ளம் என்பார்கள். சிறுகச்சிறுக இரக்கமுள்ள அன்பர்கள் இத்திட்டத்தில் இணைந்துகொள்வார்கள் என நம்புகின்றேன். முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய துயரம்பற்றியும் இங்கு குறிப்பிடுகின்றேன். காணாமல் போனவர்களின் மனைவியாகவும் பிள்ளைகளாகவும் இருப்பது எவ்வளவு கொடுமையானது என்பதை சிறிது நேரம் கண்களை மூடி கற்பனை செய்து பாருங்கள். நீடித்த போரில் விதவைகளானவர்களின் எண்ணிக்கை அதிகம். கணவன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பதும் தெரியாமல் குழந்தைகளுடன் அல்லல்படும் அபலைகள் அதிகம்.
எனது வேண்டுகோளை ஏற்ற எனது நண்பனின் மனைவி ஒருவர் உடனடியாக பத்தாயிரம் ரூபாவை ஒரு பாதிப்புற்ற பெண்ணுக்கு அனுப்பிவிட்டு, எதிர்வரும் மார்கழி மாதம் இலங்கை சென்று கிளிநொச்சியில் வசிக்கும் குறிப்பிட்ட பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் வந்து பார்ப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.
போரில் பாதிக்கப்பட்ட அந்தப்பெண் தனது ஒரு காலையும் இழந்தவர் என்ற தகவலையும் இங்கு பதிவுசெய்கின்றேன். இப்படி எத்தனையோ பெண்கள். அவர்களின் வாழ்வுக்கு முடிந்தவரையில் நீங்களே நேரடியாக கைகொடுக்கும் இந்தத்திட்டம் குறித்து மேலதிக தகவல் தேவைப்படுவோர் என்னுடன் தொடர்புகொள்ளலாம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
'பதிவுகளி'ன் எதிரொலி !:
[உங்களது திட்டம் நன்மையானது. நியாயமானது. பாராட்டப்பட வேண்டியது. அதே சமயம் போர் முடிந்து இரு வருடங்களைக் கடந்து விட்ட நிலையிலும், வட கிழக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் மீள் குடியேற்றப்பட்ட மக்கள் படும் துயர்களையும், அனுபவித்த துயரகரமான அனுபவங்களையும் பற்றி அண்மையில் 'இந்தியா டுடே' மிக விரிவாக வெளிப்படுத்தியிருந்தது பற்றியும் கவனத்தில்கொள்ள வேண்டும். இன்றைய ஸ்ரீலங்கா அரசுடன் அதிகளவு தொடர்புகளை வைத்திருக்கும் உங்களைப் போன்ற செல்வாக்கு மிக்க தமிழர்கள் நீடித்த நிலையான சமாதானத்தின் அவசியத்தைப் பற்றியும், அத்தகைய சமாதானம் தமிழர்களுக்கு உரிய உரிமைகளையும் வழங்குவதன் மூலமும், இதுவரை தமிழர்கள் அனுபவித்த துயரங்களுக்கான அரசின் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதன் மூலமும், நடைபெற்ற போர்க் குற்றங்களை சர்வதேச அனுசரணையுடன் சுயாதீன விசாரணையொன்றினை நடாத்துவதன் மூலமும்தான் ஏற்படுத்த முடியுமென அரசினை வற்புறுத்துவதன்மூலமும்தான் ஏற்படுமென நாம் கருதுகின்றோம். தமிழர்கள் பிரச்சினை தீர்க்கப்படாதவிடத்து, மீண்டும் எழும் மோதல்களுக்கான சாத்தியங்களையும் மறுப்பதற்கில்லை. அத்தகைய நிலையொன்று ஏற்படுமானால் உங்களைப் போன்றவர்களின் இத்தகைய திட்டங்களும் பாதிக்கப்படுமென்பதையும் கருத்தில்கொள்ள வேண்டுமெனக் கருதுகின்றோம். இலங்கை அரசானது மிகவும் தந்திரமாகத் தமிழர்களை, தமிழ் அரசியல் அமைப்புகளை, தமிழ் விடுதலை அமைப்புகளை (முன்னாள்) தனது பிரித்தாளும் தந்திரத்தின் மூலம் பிளவு படுத்திக்கொண்டு, தமிழர்களின் பாரம்பரியப் பிரதேசங்களை இராணுவமயப்படுத்தி, சிங்கள மயப்படுத்தி வருவதாகவே தெரிகின்றது. இத்தகைய அணுகுமுறை தொலை நோக்கில் அவர்கள் எதிர்பார்க்கும் பயனெதனையும் தரப்போவதில்லை என்பதே எமது கருத்து. உண்மையில் இதற்கு மாறான விளைவுகளையே ஏற்படுத்துமென்பதையே இது வரையிலான வரலாற்று நிகழ்வுகள் காட்டி நிற்கின்றன. முள்ளிவாய்க்காலில் முடிந்த போரின் அகோரத்தாலும், உறுதியான அரசியல் தலைமையற்ற நிலைமையினாலும் ஒரு வித மன அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ள தமிழ் மக்கள் சிறிது சிறிதாக அவ்விதமான அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதையே, வந்துள்ளதையே அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சிச் சபைகளுக்கான தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. கிழக்கிலோ, வடக்கிலோ தமிழ் மக்கள் தங்கள் நிலைப்பாட்டினை உறுதியாகத் தெரிவித்துள்ளது இதனையே காட்டி நிற்கின்றது. தமிழ் மக்களை அடிமைகளாக நடைமுறையில் நடாத்திக்கொண்டு (வாயளவில் நீலிக் கண்ணீர் விட்டுக்கொண்டு) அவர்கள் மேல் திணிக்கப்படும் எந்தவிதமான தீர்வுகளும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்திப்படுத்தப் போவதில்லை என்பதே எமது கருத்து. நடந்து முடிந்த நிகழ்வுகளிலிருந்து பெற்ற பாடங்களின் மூலம் அடைந்த அறிவு கொண்டு, இலங்கை அரசாங்கங்கள் இதுவரை தமிழ் மக்கள் மேல் நடாத்தி வந்த அடக்குமுறைகளை உணர்ந்து கொண்டு விமர்சிப்பதை மறந்து விட்டு, தமிழ் விடுதலை அமைப்புகள் நடாத்திய மனித உரிமை மீறல்களை அல்லது போர்க் குற்றங்களை முதன்மைப்படுத்திக்கொண்டு தமிழ் மக்களை அரசுடன் இணைந்து செயலாற்ற வாருங்கள் என அழைக்க முடியாது. இவ்வளவு பிரச்சினைகளுக்கும் காரணமே இதுவரை இலங்கையினை ஆட்சி செய்த (1948 இலிருந்து) ஆட்சி செய்த இனவாத அரசுகளின் அடக்குமுறைகள்தான் என்பதை மறந்து விட முடியாது. ஆண்டுகள் பலவாக இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழர்கள் பற்றியும் கவனத்தில்கொள்ள வேண்டும். அவர்களுக்காகவும் குரல்கொடுக்க வேண்டும். - பதிவுகள்-]