வாசிப்பு அனுபவம் : முருகபூபதியின் நடந்தாய் வாழி களனி கங்கை! இலங்கைத் தலைநகரின் கதையை கூறும் நூல் ! - ஜோதிமணி சிவலிங்கம் -
அவுஸ்திரேலியாவில் முப்பது வருடங்களுக்கும் மேலாக வதியும் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் ஈழத்து இலக்கிய உலகில் நான்காவது தலைமுறையைச் சேர்ந்தவர். மல்லிகை ஜீவா அவர்களால் அரை நூற்றாண்டுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட இலக்கியவாதி, ஊடகவியலாளர். சிறுகதை, நாவல் முதலான துறைகளில் இலங்கையில் இரண்டு தடவை தேசிய சாகித்திய விருதுகள் பெற்றவர். இதுவரையில் 25 நூல்களை எழுதியிருக்கும் முருகபூபதியின் மற்றும் ஒரு வரவுதான் நடந்தாய் வாழி களனி கங்கை. இதனை கொழும்பில் குமரன் புத்தக இல்லம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.
கிழக்கிலங்கையில் திரு. பூபாலரத்தினம் சீவகன் அவர்கள் வெளியிட்டு வரும் அரங்கம் வார இதழில் வெளியானதே நடந்தாய் வாழி களனி கங்கை தொடர். தற்போது நூலுருப்பெற்றுள்து. கணத்திற்குக் கணம் மாறிக்கொண்டிருக்கும் இப்பூவுலகில் இந் நூலானது கடந்து போன காலங்களையும், அக்காலத்தில் நடந்த சம்பவங்களையும் எமது கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றது. அத்துடன் இந்நூலில் இடம்பெற்றுள்ள பல நிகழ்வுகள் நம்மை எமது முந்திய காலத்திற்கும் அழைத்துச் செல்கிறது. உதாரணத்திற்கு வீரகேசரி, லேக் ஹவுஸ் (Lake house) , ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முதலான செய்தி ஊடகங்கள் சார்ந்தனவற்றின் வரலாறுகளாகும்.
பிரித்தானியரின் ஆட்சிக்காலத்தில் இலங்கைத் தலைநகரில் நடந்த பல சம்பவங்களையும் இந்நூல் நினைவுபடுத்துகின்றது. களனி கங்கையின் ஆரம்பப் பெயர் கல்யாணி என்பதையும் நாளடைவில் அது களனி என மாற்றம் அடைந்ததையும் நூலாசிரியர் கூறியுள்ளார். அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில் நடந்த குதிரைப் பந்தயம், சூதாட்டம் பற்றியும் கூறியபோதுதான் அக்காலத்தைய கசினோ பற்றிய வரலாறு புரிந்தது.