சிறுகதை: ஆலகாலம் – கே.எஸ்.சுதாகர் -
1.
அதிகாலை கொஞ்சம் புகாரும் குளிரும் இருந்தது. சூரியகுமார் அவசர அவசரமாக ஆடைகளை அணிந்துகொண்டான். பிக்கறிங்ஸ் வீதியை நோக்கி விரைந்த அவன், இடது புறம் திரும்பிக் கொண்டான். தூரத்தே சாப்பாட்டுக் கடைக்கு முன்னால் நாலைந்துபேர்கள் நிற்பது தெரிகின்றது. ஏழைகளுக்கான பெட்டிக்கடை தான். பெட்டிக்கடைக்குள் ஒரு நீட்டு மேசையும், தோதாக அதன் இருபுறங்களிலும் வாங்குகளும் இருக்கின்றன. ஒரு ஓரமாக அமர்ந்து கொண்டான். வழமையான தேங்காய்ப்பூ போட்ட வட்ட வடிவ ரொட்டி. விரலளவு தடிப்பத்தில் உள்ளங்கையால் மூடக்கூடிய அளவு. தொட்டுக்க ஆவி பறக்கும் கடலைக்கறி.
கடைக்குள்ளிருந்து வந்த ஒருவன், சூரியகுமாரின் காதிற்குக் கிட்டக் குனிந்து “பாபத் கறி” வேண்டுமா என்று சிங்களத்தில் கேட்டான். சூரியகுமார் தலையை இடமும் வலதுமாக வெறுப்பாக ஆட்டிவிட்டு, “ஒரு பிளேன் ரீ போதும்,” என்றான். குடல் கறி என்றவுடன் அவனது வயிறு குமட்டிக்கொண்டு வந்தது. இது காலை உணவு.
மீண்டும் பத்து நிமிட நடையில், துறைமுகம் வந்து விடும். கப்பல் கட்டுமானப் பணியிடத்தில் பொறியியலாளராக வேலை. வெண்ணிற ஆடைக்குள் புகுந்து கொள்வான். உப்புக் கரிக்கும் காற்றின் சுவையை நுகர்ந்தவாறே வேலைக்குள் மூழ்கிவிடுவான். சிறிய திருத்து வேலைகளுக்காகவும், வர்ணம் அடிப்பதற்காகவும் `டெக்’கிற்குள் பெரிதும் சிறிதுமாக சில கப்பல்கள் நிக்கின்றன. புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட கப்பலொன்று வெள்ளோட்டத்திற்காகக் காத்து நிற்கின்றது. அதன் இறுதிக்கட்ட சோதனை முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மதியம் வேலையிடத்தில் இலவச உணவு. தினமும் ஒரே வகைச் சாப்பாடு. இரண்டு சைவக் கறிகளுடன் மீன் அல்லது முட்டையுடன் சோறு. எப்போதாவது இறைச்சித்துண்டும் இருக்கும்.