சிறுகதை; இழப்பு - குரு அரவிந்தன் -
- ஓவியம் - AI -
சிகப்பு மஞ்சள் விளக்குகள் மின்னிக் கொண்டிருக்க, இராணுவ நோயாளர் காவுவண்டி ஒன்று அலறி அடித்துக் கொண்டு மருத்துவமனை வாசலில் வந்து நின்றது. என்னவோ ஏதோவென்று மருத்துவமனை ஊழியர்கள் எட்டிப் பார்த்தனர். நோயாளர் காவுவண்டிக்குப் பாதுகாப்பாய் வந்த இன்னுமொரு வண்டியில் இருந்து குதித்து இறங்கிய இராணுவத்தினர் ஆயுதங்களோடு தடதட என்று உள்ளே நுழைந்தனர். வெளிநோயாளர் பயந்துபோய் ஒதுங்கி நிற்க, வரவேற்பு மேசையில் இருந்த பெண் பதட்டத்தில் தன்னை அறியாமலே சட்டென்று எழுந்து நின்றாள்.
‘டாக்டர் எங்கே..?’ அதிகாரக்குரலில் மிரட்டினான் துப்பாக்கியோடு உள்ளே நுழைந்த இராணுவ சிப்பாய்.
பயத்தில் வார்த்தைகள் வெளிவர மறுக்கவே, அவள் மருத்துவரின் அறையை நோக்கிக் கையை நீட்டிக் காட்டினாள். எந்தவித தயக்கமும் இல்லாமல் அவன் கதவைத் தள்ளித் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
‘டாக்டர் ரொம்ப அவசரம், உடனே வாங்க, எங்க காப்டனுக்கு உடனே சத்திர சிகிச்;சை செய்யணும்.’ என்றான்.
‘என்னாச்சு..?’ வைத்திய கலாநிதி சிவகுமாரன் பதட்டப்பட்டார்.
‘கிளைமோர் குண்டு வெடிச்சதாலே எங்க காப்டன் ஆபத்தான நிலையில இருக்கிறார். உடனே வாங்க..!’ என்றான் சிப்பாய்.
கடமை அழைத்த வேகத்தைவிட, துப்பாக்கி முனையின் அழைப்பு அவரை உடனே எழுந்திருக்க வைத்தது.
இப்படியான நேரங்களில் பாதிக்கப் பட்டவர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அவர் நன்கு புரிந்து வைத்திருந்தார். எனவே அதிகம் அலட்டிக் கொள்ளாது, சத்திர சிகிச்சை அறைக்குள் சென்றபோது அவரது உதவியாளர்கள் இராணுவ அதிகாரிக்கு செலைன் கொடுத்து, அவசரமாக செய்யவேண்டிய உதவியை செய்து கொண்டிருந்தார்கள்.