முகநூற் குறிப்புகள் : நானும் எழுத வந்தேன்.. - எஸ்.எல்.எம்.ஹனிபா -
- முகநூற் பக்கங்களில் வெளியாகும் பயனுள்ள குறிப்புகள் அவற்றின் பயன் கருதிப் பதிவுகளின் இப்பக்கத்தில் வெளியாகும். - பதிவுகள்.காம் -
எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனிபாவின் முகநூற் குறிப்பொன்று! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் எஸ்.எல்.எம்.ஹனிபாவின் முகநூற் பதிவொன்று என் மனத்தைக் கவர்ந்தது. 'நானும் எழுத வந்தேன்' என்பது தலைப்பு. எழுத்தாளர் திக்குவல்லை கமால் வில்லிதேவசிகாமணி விருது பற்றி ஹனிபாவுக்குக் குறிப்பிட்டு அவரது 'மக்கத்துச் சால்வை' நூலை அவ்விருதுக்காக அனுப்பும்படி கூறுகின்றார்.
விண்ணப்பிப்பதற்குரிய காலம் குறுகியதாகவிருந்தது. ஹனிபா அவர்கள் 'மக்கத்துச் சால்வை'யின் ஐந்து பிரதிகளை எடுத்துக்கொண்டு தபால் நிலையம் செல்கின்றார். அனுப்பச் செலவு ரூபா 350 என்கின்றார்கள். அது அன்றுள்ள வாழ்க்கைச் செலவில் அதிகமான தொகை. அவரிடமிருந்ததோ ரூபா 200. விருதும் வேண்டாம். எதுவும் வேண்டாம் என்னும் மனநிலையில் ஹனிபா அவர்கள் திரும்ப முற்படுகையில் 'போஸ்ட் மாஸ்டர்' கே.எல்.எம். புகாரி அவர்கள் மீதிப்பணத்தைத் தாமே போட்டு புத்தகங்களை அனுப்பி வைக்கின்றார். அந்நூலுக்கு விருதும் கிடைக்கின்றது.
அவ்விருது அனுபவத்தையும் ஹனிபா அவர்கள் மேற்படி முகநூற் பதிவில் விபரிக்கின்றார். அவ்விருதில் பேசிய நடுவர்களில் ஒருவரான எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதையும் ஹனிபா அவர்கள் பதிவு செய்திருக்கின்றார்:
"இலங்கையிலிருந்து வந்த மக்கத்துச் சால்வை சிறுகதைத் தொகுதியிலுள்ள கதைகள், அதன் தமிழ் எங்களுக்குப் புரியவில்லை என்று என்னுடைய சக நடுவர் நண்பர்கள் சொன்னார்கள், நான் சொன்னேன்: இலங்கை வாசகர்கள் சென்னைத் தமிழைப் படிக்கிறார்கள், கோவில்பட்டித்தமிழை,கோயம்புத்தூர் தமிழைப் படிக்கிறார்கள்… என்று பல பெயர்களைச் சொல்லி இந்தத் தமிழையெல்லாம் அவர்கள் உள்வாங்கி இரசிக்கிறார்கள். அப்படியென்றால் நீங்கள் ஏன் ஹனிபாவின் தமிழ் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்கிறீர்கள். அந்தக் கதை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு எழுத்தும்இலக்கியமும் புரியவில்லைஎன்றுதான் அர்த்தம் என்று'"
ராஜம் கிருஷ்ணன் அற்புதமான மனுஷி. எழுத்தாளர். இலங்கைத் தமிழ் எழுத்து பற்றி அன்று அவ்வப்போது இளக்காரமாகக் கருத்துகள் தெரிவித்த தமிழக எழுத்தாளர்களுக்கு அவர் கொடுத்த அற்புதமான சாட்டையடியாக அமைந்திருக்கும் கூற்று அது.