’காவல் சுவடுகள்’ கல்லுக்குள் ஈரத்தை தொட்டுக் காட்டும் கவிதைகள்! கவிஞர் வசந்தனின் சமீபத்திய கவிதைத்தொகுப்பு குறித்து சொல்லத்தோன்றும் சில குறிப்புகள்! - லதா ராமகிருஷ்ணன் -
இன்று மனிதர்களின் மனநிலைகளும் வாழ்வுத்துயரங்களும்,, நெருக்கடிகளும், சிக்கல்களும் அவர்களின் அகவாழ்வும் அது சார்ந்தவையுங்கூட அவர்களின் வாழ்க்கைத் தொழில் முதலான வாழ்வாதாரங்களோடு கண்ணுக்குப் புலனாகாத அளவு இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் அகவயமான கவிதைகள், புறவயமான கவிதைகள் என்றெல்லாம் திட்டவட்டமான வரையறைகள் சாத்தியமா, அவை தேவையா என்ற கேள்விகள் தவிர்க்கமுடியாமல் எழுகின்றன. கவி என்பவர் எத்தனைக்கெத்தனை தனி மனிதரோ அத்தனைக்கத்தனை சமூக மனிதரும் கூட. இவ்வகையில் ஒரு கவி தன் கவிதையில் முன்வைக்கும் அகச்சூழலும் புறச்சூழலும் இரட்டிப்பு கவனம் கோருபவை.
கவிஞர் வசந்தனின் சமீபத்திய கவிதைத்தொகுப்பான காவல் சுவடுகளைப் படித்த போது மேற்காணும் எண்ணங்கள் மனதில் எழுந்தன. தான் பணியாற்றும் காவல் துறையைப் பின்புலமாகக் கொண்டு அவர் எழுதியுள்ள கவிதைகள் இடம்பெறும் தொகுப்பு இது. இத்தகைய கவிதைகள் வெறும் புலம்பலாகவும், பிரச்சார முழக்கங் களாகவும், சுய விளம்பரமாகவும் முடிந்துவிடக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அப்படி யாகவில்லை என்பதே ஒரு கவிஞராக தோழர் வசந்தனை சமகாலத் தமிழ்க்கவிதை வெளியில் நிறுவுகிறது எனலாம்.
காவல்துறையைச் சேர்ந்தவர்களைப் பற்றிய சமூகத்தின் பொதுப்புரிதல் அவர்கள் கடுமையானவர்கள், அதிகாரத்தை மக்கள் மீது தவறாகப் பிரயோகிப்பவர்கள் – இப்படியாகத்தான் இருக்கிறது. ஆனால், காவல்துறையைச் சேர்ந்தவர்களை ஆசாபாசங்கள் மிக்க, சமூகப்பிரக்ஞையும் மனிதநேயமும் நிறைந்த மனிதர்களாகத் தனது கவிதைகளில் எளிய, அதேசமயம் கவித்துவம் குறையாத மொழிநடையில் எடுத்துக்காட்டுகிறார் கவிஞர் வசந்தன்.