அஞ்சலிக் குறிப்பு: அமைதியான சமூக செயற்பாட்டாளன் மகாதேவன் ஜெயக்குமரன் மறைந்தார்! - முருகபூபதி -
கலை, இலக்கிய , சமூக செயற்பாட்டாளரான மகாதேவன் ஜெயக்குமரன் லண்டனில் மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியை கனடாவில் வதியும் எழுத்தாளர் – பதிவுகள் இணைய இதழ் ஆசிரியர் நண்பர் வ.ந.கிரிதரனின் குறிப்பிலிருந்து தெரிந்துகொண்டேன். மிகவும் குறைந்தவயதில் சிறுநீரக உபாதையினால் இவர் மறைந்திருக்கிறார். ஜெயக்குமரனை முதல் முதலில் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லண்டனில் சந்தித்தேன்.
அக்காலப்பகுதியில், கனடா, கியூபா சென்றுவிட்டு திரும்பும் வழியில் லண்டனுக்கு வந்தபோது நண்பர் நூலகர் என். செல்வராஜா, என்னுடன் பயணித்த இலக்கிய நண்பர் நடேசனுக்கும் சேர்த்து லண்டனில் வரவேற்பு தேநீர் விருந்துபசார நிகழ்ச்சியை ஒரு உணவு விடுதியில் நடத்தியிருந்தார். இந்நிகழ்விற்கு மு. நித்தியானந்தன், பத்மநாப ஐயர், தாஸீசியஸ், அனஸ் இளைய அப்துல்லா, பாலேந்திர – ஆனந்தராணி தம்பதியர், பாலசுகுமார், ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், தேசம் ஜெயபாலன், நடா. மோகன், நவஜோதி யோகரட்ணம் ஆகியோருடன் ஜெயக்குமரனும் வருகை தந்திருந்தார். இயல்பிலேயே அமைதியான சுபாவம் கொண்டவர் என்பதை அன்றே தெரிந்துகொள்ள முடிந்தது. அதிர்ந்து பேசாமல், மற்றவர்கள் பேசுவதை கூர்ந்து கவனிப்பவர். அச்சந்திப்பின் பின்னர் மீண்டும் அவரை அவுஸ்திரேலியா சிட்னியில் 2008 ஆம் ஆண்டு நாம் நடத்திய எட்டாவது தமிழ் எழுத்தாளர் விழாவில்தான் சந்திக்க முடிந்தது.