ஈழத்து மூத்த படைப்பாளி செ. கணேசலிங்கனுக்கு இன்று 93 ஆவது பிறந்த தினம்! முற்போக்கு இலக்கிய உலகில் சிறந்த மனிதநேயவாதி! - முருகபூபதி -
இலங்கை வடபுலத்தில் உரும்பராயில் 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி பிறந்திருக்கும் கணேசலிங்கன் அவர்கள் தமது 93 ஆவது அகவையை இன்று நகர்ந்துள்ளார். உரும்பராய் கிராமத்தில் செல்லையா – இராசம்மா தம்பதியருக்கு இரண்டாவது புதல்வனாகப்பிறந்த கணேசலிங்கன், தனது ஆரம்பக்கல்வியை உரும்பராயில் ஒரு கிறீஸ்தவ பாடசாலையிலும் அதனையடுத்து சந்திரோதய வித்தியாசாலையில் ஆறாம் தரம் வரையிலும் கற்றபின்னர், யாழ். பரமேஸ்வரா கல்லூரியில் மேற்கல்வியை தொடர்ந்தார். கணேசலிங்கன் அன்று கற்ற பரமேஸ்வராக்கல்லூரிதான் பின்னாளில் 1974 இல் யாழ். பல்கலைக்கழக வளாகமாக உருமாறியது. இந்தப்பல்கலைக்கழகத்தில் 1976 ஆம் ஆண்டு நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு நடந்தபோது, கணேசலிங்கனின் நாவல்களும் திறனாய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சுமார் அறுபதிற்கும் மேற்பட்ட நாவல்கள் பல சிறுகதைகள் , கட்டுரை – விமர்சன நூல்கள் – சிறுவர் இலக்கியம் – பயண இலக்கியம் என நூறுக்கும் மேற்பட்ட நூல்களை தமிழ் இலக்கிய உலகிற்குத்தந்துள்ள கணேசலிங்கனின் தற்போதைய வயதிலிருந்து கணக்குப்பார்த்தாலும் வருடத்துக்கு ஒரு புத்தகம் என பிறந்தது முதல் இன்று வரையில் அதிகம் புத்தகங்கள் எழுதியிருக்கின்றார் இந்த அமைதியும் தன்னடக்கமும் மிக்க சாதனையாளர் என்ற முடிவுக்கு வரமுடியும். மூத்த தமிழ் அறிஞர் மு.வரதராசனும் (மு.வ) இவரது நெருங்கிய நண்பர். மு.வ. மறைந்தபின்பு அவரது நினைவாகவும் ஒரு நூலை எழுதியிருக்கின்றார். அச்சிலே வெளிவந்த இத்தனை நூல்களும் எத்தனை ஆயிரம் பக்கங்களைக்கொண்டவை என்ற ஆராய்ச்சியில் நாம் ஈடுபடத்தேவையில்லை.
செவ்வானம் நாவல் கைலாசபதியின் முன்னுரையுடன் வெளியானது. குறிப்பிட்ட நீண்ட முன்னுரையே பின்னாளில் தமிழ் நாவல் இலக்கியம் என்ற விரிவான நூலாகியது. இந்நூல்குறித்து விமர்சகர் வெங்கட்சாமிநாதன் மாக்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் என்ற சிறு நூலை எதிர்வினையாக எழுதினார். 1973 இல் பூரணி காலாண்டிதழ் இதனை மறுபிரசுரம் செய்தது. பேராசிரியர் நுஃமான் இதற்கு எதிர்வினையாக நீண்ட கட்டுரைத்தொடரை மல்லிகையில் எழுதினார். அதற்கு மு.பொன்னம்பலம் மல்லிகையிலேயே எதிர்வினை எழுதினார். இவ்வாறு ஆரோக்கியமான விமர்சன கருத்துப்பரிமாறல்களுக்கு வழிகோலிய மூலவர் செவ்வானம் படைத்த கணேசலிங்கன் என்பது இலக்கிய உலகின் பழையசெய்திதான். எனினும் இப்படியும் எமது தமிழ் இலக்கியப்பரப்பில் நிகழ்ந்திருக்கிறது என்ற தகவலையும் இச்சந்தர்ப்பத்தில், புதிதாக எழுதவந்துள்ள இளம் ஆக்க இலக்கிய வாதிகளுக்கும் இளம் விமர்சகர்களுக்கும் தெரிவிக்கின்றேன்.