சிறுகதை: சுவ்வே -- முனைவர் கோ.சுனில்ஜோகி, உதவிப்போசிரியர், தமிழ்த்துறை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோவை. -
1
மாதிக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. பளபளவென ஒளிரும் வெண்ணிற ஹெவெல்ஸ் வெர்ஷ்டன் டைப் கழிப்பானைக் கண்டு கண்டுச் சிரித்தாள்.
“ஹெத்தெ கவனம்...
மேலே இருக்குற மூடிமேலேதா உக்காரனும் தெரியுமா..
ஹெத்தெ கவனம்… கீழே விழுந்திரபோறே..
கதவைத் தாப்பா போட்டுடாதே… நா யாரையும் உள்ளெவரமா பாத்துக்குற…
ஜாக்கிரதை”
என்ற பெயர்த்தி தேவியின் வார்த்தை அவளுக்கு மேலும் சிரிப்பினைக் கூட்டியது.
“ஏய் போவியா…
பொல்லாத கக்கூஸ்…
எனக்குத் தெரியாதா?
நீ போய் குழந்தையைக் கவனி…
நா பாத்துக்குறே….
ஏய் மிட்டிக்கி கரண்ட் அடுப்பில் வச்சிருக்கும் நீரை மறந்துடாதே…..
அது கொதிக்குது பாரு…”
என்று இயல்பிலேயே உரக்கப்பபேசும் அவள் தன் குரலை உயர்த்தியவாறே அந்தக் கழிப்பானை தன் இரு கைளாலும் அழுத்திச் சரிபார்த்தாள். முண்டைத் தூக்கிக்கொண்டு இதில் அமரமுடியுமா? என்று மனதில் ஒத்திகைப் பார்த்தாள். போனால் போகட்டும் தரையில் அமர்ந்துவிடலாமா என்று யோசித்தாள்.