பண்டைத் தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள் , இந்துக்களின் கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பும் அதில் சாதியின் பாதிப்பும்! - வ.ந.கிரிதரன் -
- எழுநா இதழில் வெளியான கட்டுரை -
பகுதி 1 : பண்டைத் தமிழர்களின் ஆலய, துறைமுக, கோ நகரங்கள்
பண்டைய தமிழர்கள் தரைவழியாகவும் கடல்வழியாகவும் பாரதத்தின் ஏனைய நகரங்களுடன் மட்டுமல்ல கடல்கடந்தும் ஏனைய நாடுகளுடனெல்லாம் வணிகம் செய்து சிறப்புற்று விளங்கியதை வரலாறு கூறும். யவனர்கள், அரேபியர்களெல்லாம் கடல்கடந்து தமிழகம் வந்து வர்த்தகம் செய்ததை வரலாற்றறிஞர்களின் பிரயாணக் குறிப்புகள், பண்டையத் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் தகவல்கள், அகழ்வாராய்ச்சிகள் மற்றும் வரலாற்றுச் சின்னங்களெல்லாம் புலப்படுத்தும். கிழக்கிந்தியத் தீவுகள் கூட்டத்தை உள்ளடக்கிய சாவகம் (இன்றைய இந்தோனேஷியா), ஈழம், காழகம் (பர்மா) போன்ற நாடுகளுடனெல்லாம் தமிழர்களின் வர்த்தகம் கொடி கட்டிப் பறந்தது.
யவனர்கள், அரேபியர்களெல்லாம் தமிழகத்துடன் வியாபாரம் செய்து வந்தார்கள். இவர்களைப் பற்றி ‘பயனற வறியா யவனர் இருக்கையும் / கலந்தரு திருவிற் புலம் பெயர் மாக்கள் / கலந்தினி துறையும் இலங்குநீர் வரைப்பும்’ எனவும், ‘மொழி பெயர் தேத்தோர் ஒழியா விளக்கம்’ எனவும் சிலம்பும், ‘மொழிபல பெருகிய பழிநீர் தேஎத்துப் / புலம்பெயர் மாக்கள் கலந்தினி துறையும் / முட்டாச் சிறப்பிற் பட்டினம்’ எனப் பட்டினப்பாலையும் கூறும். கிரேக்கர்களும், ரோமர்களும் யவனர்களென சிறப்புப் பெயர் பெற்றிருந்தார்களென மயிலை சீனி. வேங்கடசாமி கூறுவார். வணிகத்தின் பொருட்டுத் தமிழகம் வந்த யவனர்கள் வணிகத்தில் மட்டுமின்றி வேறு சில தொழில்களைச் செய்ததையும் அறிய முடிகிறது. மதுரையின் கொற்கைத் துறைமுகம் தமிழ் வாணிபத்தில் சிறந்து விளங்கியது. கோட்டை மதில்களுடன் விளங்கிய மதுரையின் கோட்டை வாயில்களை யவன வீரர்கள் காத்து நின்றதை ‘கடிமதில் வாயில் காவலிற் சிறந்து / அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்கு’ எனச் சிலம்பும், ‘மந்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை / மெய்ப்பை புக்கு வெருவருந் தோற்றத்து / வலிபுணரி யாக்கை வன்கண் யவனர்’ என முல்லைப் பாட்டும் கூறும். இதுதவிர யவனர்கள் தச்சுத் தொழிலிலும் சிறந்து விளங்கியதை மணிமேகலையின் ‘யவனத் தச்சர்’ பற்றிக் கூறும் வரிகள் தெரிவிக்கும். புதுச்சேரிக்கு அண்மையில் அரிக்கமேடு என்னும் பகுதியில் நிகழ்ந்த அகழ்வாரய்ச்சிகள் யவனர்கள் கண்ணாடி மணிகளைச் செய்வதில் சிறந்து விளங்கியதை எடுத்துக் காட்டும்.