ஆய்வு: நீலகிரியின் பெருநிலப்பிரிவும் படகர்களின் நிலவியல் அறிவும்! முனைவர் கோ.சுனில்ஜோக -
யுனெஸ்கோவால் உலகப் பூர்வகுடிகளாக அங்கீகரிக்கப்பட்ட நீலகிரி படகர் இன மக்களின் பூர்வகுடித் தன்மைக்குரிய, அவர்களின் பல்வேறு தனிக்கூறுகளுள் நீலகிரியைப் பற்றிய நிலவியல் அறிவும் இன்றியமையான ஒன்றாகும். நீலகிரியில் உள்ள பெரும்பான்மையான இடங்கள் படகர்களால் பெயரிடப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அப்பெயர்கள் படகர்களின் தனித்திராவிட மொழியான படகு மொழியின் தொன்மையினை விளக்குவனவாகத் திகழ்கின்றன.
மலையைக் குறிக்கப் படகர்கள் “கிரி”, “கோ”, “பெட்டு”, “மந்த”, “மந்து” போன்ற பல பெயர்களை வழங்குகின்றனர். அதனடிப்படையில்தான் “நீலகிரி”, “தொட்ட பெட்டா” போன்ற படகர்களின் சொல்வழக்குகள் விளங்கிவருகின்றன. இப்பெயர்கள் அனைத்தும் இன்றும் படகர்களிடம் வழக்கில் உள்ளவைகளாகும். நீலநிறமுடைய குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும் மலை என்ற காரணத்தினால் இம்மலைக்கு “நீலகிரி” என்று பெயரிடப்பட்டதாகக் கருதினாலும் இம்மலையினைச் சூழ்ந்த நீலவானம் மற்றும் பனிப்பொழிவுக் காலத்து நீலநிறக் கதிர்களின் சிதறல் போன்றவையும் இம்மலைக்கான காரணப் பண்புப் பெயருக்கு ஆகிவந்தது எனலாம். குறிஞ்சி மலரைக்கொண்டு இம்மலைப் பெயரிடப்பட்டது என்பதைவிட வானத்து நீல நிறத்தாலும், நீலநிறக் கதிர்களின் ஊடுறுவலாலும் பெயரிடப்பட்டது என்பதே நிலவியல் அடிப்படையில் சரியாகப் பொருந்துகின்றது.
நீலகிரியைப் படகர்கள் தமக்குள் “நாக்குபெட்டா” என்று விளிக்கின்றனர். அதாவது நான்கு மலைகள் என்பது இதன் பொருள். நீலகிரியின் நிலவியல் அமைப்பும் இதனை ஒத்துள்ளது. இந்த நான்கு பெட்டாவிலும் கால்வழியின் அடிப்படையில் வாழ்ந்துவருகின்ற படகர்கள் அதற்குத் “தொதநாடு”, “பொரங்காடு”, “குந்தெ”, “மேக்குநாடு” என்று பெயரிட்டுள்ளனர். இந்த நான்குப் பெயர்களுக்குப்பின்பு “சீமை” என்ற பின்னொட்டையும் இட்டு அழைப்பதுண்டு. “அட்டி”, “ஊரு”, “கேரி”, “சீமெ”, “நாடு”, “ஹட்டி” போன்றவைப் படகர்களின் நிலப் பொதுப்பெயர்களாகும். இதில் “நாடு” மற்றும் “சீமெ” என்பது பெரிய நிலப்பரப்பினைக் குறிப்பனவாகும்.