வாசகர் முற்றம் : தீவிர வாசகனாக வளர்ந்து, வானொலி ஊடகவியலாளனாகியிருக்கும் நியூசிலாந்து சிற்சபேசன்! ஈழத்து மு. தளையசிங்கமும் இந்திய ஆர்.கே. நாராயணனும் இவரது ஆதர்சங்கள்! - முருகபூபதி -
பெற்றவர்களிடம் கற்றதையும் சமூகத்திடம் பெற்றதையும் வாழ்வியல் அனுபவமாக்கி, ஊடகத்துறையின் நுட்பங்களை உள்வாங்கி செய்தியாளராக பரிமளிக்கும் தேர்ந்த இலக்கிய வாசகர் சிற்சபேசன் அவர்களை எமது வாசகர் முற்றத்திற்கு அழைத்து வருகின்றோம். யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், தன்னுடைய தந்தையார் அதிபராகவிருந்த அனுராதபுரம் விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயத்திலும் கற்றவர். பின்னர் உயர்கல்வியை தமிழ்நாட்டில் தொடர்ந்தவர்.
யாழ்ப்பாணத்திலும் தமிழ்நாட்டிலும் பல்கலைக்கழகக் கல்விவரையான காலகட்டத்திலே வாழ்ந்தமையைப் பெரும் பாக்கியமாகவே கருதுகின்றார். “ யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராணக் கலாசாரம் “ என்பார் பண்டிதமணி கணபதிப்பிள்ளை. அந்தவகையில், அங்கே பெற்றுக்கொண்ட சைவத்தமிழ் விழுமியங்களிலான தன்னுடைய அத்திவாரத்தை, தமிழ்நாட்டின் மொழி, கலை, பண்பாட்டுச்சூழல் பலப்படுத்தியதாக நம்புகின்றார். அந்தவாய்ப்பை ஏற்படுத்திய தன்னுடைய பெற்றோரை நன்றியோடு நினைவுகூர்கின்றார் சிற்சபேசன். தற்போது நியூசிலாந்து அரசதுறையில் சிரேஷ்ட ஆலோசகராகப் பணியாற்றுகிறார். நாம் தொடர்ந்து பதிவேற்றிவரும் வாசகர் முற்றம் பகுதிக்காக சிற்சபேசனை தொடர்புகொண்டோம்.