தக்ஷிலா ஸ்வர்ணமாலியின் ‘பீடி’: (சிங்கள நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு) சமகால இலங்கை நாவல்களில் முக்கியமான வரவு! -தேவகாந்தன் -
தக்ஷிலா ஸ்வர்ணமாலி ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பின்மூலம் தமிழ் வாசகவுலகில் அறிமுகமானவர். இந் நாவலின் மொழிபெயர்ப்பாளர் ரிஷான் ஷெரிப் மொழிபெயர்ப்பாளராகவும் படைப்பாளியாகவும்கூட நன்கறியப்பட்டவர். இது, ஆதிரை வெளியீடாக ஜனவரி 2022இல் வெளிவந்த இந்த நாவலின் விமர்சனமல்ல. சில நாவல்களை அவ்வாறாக எடைபோடுவதும் எது காரணத்தாலோ சுலபத்தில் கூடிவருவதில்லை. முன்னோடிகளான நாவல்களுக்கு அவ்வாறான இடைஞ்சல்களை முன்பும் சிலவேளை சந்தித்திருக்கிறேன். இதனை சரியாகச் சொல்வதானால் விமர்சிப்புக்கான ஒரு பாதையை அமைத்தலெனக் கூறலாம். அண்மையில் நான் வாசித்த நல்ல நாவலாக ‘பீடி’ இருக்கிறவகையில், அவ்வாறான விருப்பம் எனக்கு ஏற்பட்ட காரணத்தை, எழுதுவதன் மூலம் எனக்காகவேயும் கண்டடையும் ஆர்வத்தில் இந்த முயற்சி. அதனால்தான் மேற்குலக நாவல் விதிகளின்படி அல்லாமல் அதை அதுவாகப் பார்க்கும் ஒரு ரசனைப் பாணியில் இந்த நாவலை நான் அணுகியிருக்கிறேன். என்றாலும் அதற்கு முன்பாக தெளிவுபடுத்தப்பட வேண்டிய சில விஷயங்கள், ‘பீடி’ நாவலைப் பொறுத்தமட்டிலன்றி பொதுவாகவே தற்கால நாவல்கள் குறித்து, உள.
சமீப காலமாக எழுத்தின் புதுமாதிரியாக இலக்கண விதிகளை மீறிய வேற்றுமை உருபுகளின் பயன்பாட்டை அதிகமாகக் கவனிக்கமுடிகிறது. ‘ஒரு’, ‘ஓர்’ ஆகிய ஒருமைச் சொற்களின் பேதமற்ற பயன்பாடு கவனமற்றுப் போகுமளவு பழக்கமாகியும் விட்டது. யாரும் அவ்வளவாகப் பொருள்செய்வதில்லை இப்போது. இன்னோர் அம்சம், வசனத்தில் எழுவாயை மறைத்துவிடுவது. வினையை யார் ஆற்றினாரென்பதைக் கண்டுபிடிப்பது வாசகருக்கு ஒரு மினக்கேடாகவே ஆகிவிடுகிறது. இயல்பிலும் பேச்சுத் தமிழையொட்டியும் வரும் மாற்றங்களை ஒப்புக்கொள்ள முடிகிற அதேவேளை, வலிந்த அவ்வாறான முயற்சிகள் வாசிப்புக்கு இடைஞ்சல் தருவதை ஒதுக்கிவிட முடிவதில்லை. இவையெல்லாம் வாசக அவதானத்தை கூர்மைப்படுத்தவென ஒரு சமாதானம் சொல்லப்படுவதுண்டு. அதை யோசனைக்கு எடுக்கலாம்.