அஞ்சலிக்குறிப்பு : ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்க உதவிய தியாகராஜா ஶ்ரீஸ்கந்தராஜா - முருகபூபதி -
பாவலர் துரையப்பா பிள்ளை அவர்களால் 1910 ஆண்டளவில் திண்ணைப் பள்ளிக்கூடமாக தொடங்கப்பட்ட ஆரம்ப பாடசாலை, படிப்படியாக வளர்ந்து, அபிவிருத்தி கண்டு, மகாஜனா கல்லூரியாக தரணியில் உயர்ந்திருப்பதை நன்கறிவீர்கள். ஏராளமான கல்விமான்களையும், அறிஞர்களையும், படைப்பிலக்கியவாதிகளையும், விஞ்ஞானிகளையும், பொறியியல், மருத்துவம், கணக்கியல், சட்டம் உட்பட பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர்களையும் தன்னார்வத் தொண்டர்களையும், ஆசிரியர்கள், பேராசிரியர்களையும் உருவாக்கிய விருட்சமாகத்திகழ்வது யாழ். தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி.
இங்கு நான் கற்றிருக்காதுபோனாலும், இங்கு தமது கல்வியைத் தொடர்ந்து பின்னாளில் மேற்குறிப்பிட்ட துறைகளில் புகழ்பெற்ற பலர் எனது நண்பர்கள் வட்டத்தில் இணைந்துகொண்டார்கள். மகாஜனா கல்லூரிக்கும் எனக்குமிடையே உணர்வுபூர்வமான தொடர்பு இருந்தமையாலோ என்னவோ, பல “ மகாஜனன்கள் “ எனது நெஞ்சத்துக்கும் நெருக்கமானார்கள் .
அரைநூற்றாண்டுக்கு முன்னர் 1972 ஆம் ஆண்டு ஜூலை மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து எனக்கு கிடைத்த டொமினிக்ஜீவாவின் மல்லிகை மாத இதழில்தான் எனது முதலாவது சிறுகதை ( கனவுகள் ஆயிரம் ) வெளியானது. அவ்விதழின் அட்டைப்படத்தை அலங்கரித்தவர் பாவலர் துரையப்பா பிள்ளை. அதன்பின்னர், 12 ஆண்டுகள் கடந்த நிலையில் 1984 ஆம் வருடம், அக்கல்லூரியில் நடந்த எழுத்தாளர் கோகிலா மகேந்திரனின் முரண்பாடுகள் அறுவடை கதைத் தொகுப்பு வெளியீட்டு அரங்கில் உரையாற்றுவதற்கு சென்றபோதுதான் இக்கல்லூரியின் வாயிலில் எனது காலடித்தடம் பதிந்தது.