தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (16) - நவீன விக்கிரமாதித்தனின் குறிப்பேட்டுப் பக்கங்கள் சில. - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் (16) - நவீன விக்கிரமாதித்தனின் குறிப்பேட்டுப் பக்கங்கள் சில.
மனோரஞ்சிதம் எதனையெடுத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அவ்வாசிப்பில் தன்னை முழுமையாக மூழ்கடிக்க வைத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அப்படியெதைத்தான் அவள் இவ்விதம் வாசித்துக்கொண்டிருக்கின்றாள் என்பதை அறியும் ஆவல் மேலிட்டது. மேலிட்ட ஆவலுடன் அவளை நெருங்கி அவள் வாசித்துக்கொண்டிருந்த நூலைப் பார்த்தேன். உண்மையில் அது நூலல்ல. ஒரு குறிப்பேடு. அது என் குறிப்பேடுகளிலொன்று. அவ்வப்போது என் எண்ணங்களை எழுத்துகளாக அக்குறிப்பேட்டில் பதிவு செய்வது என் பொழுது போக்குகளிலொன்று. கவிதைகளாக, கட்டுரைகளாக எனப் பல் வடிவங்களில் அவை இருக்கும். அக்குறிப்பேடுகளிலொன்றினைத்தான் அவளெடுத்து வாசித்துக்கொண்டிருந்தாள்.
"கண்ணம்மா, ஒருத்தரின் குறிப்பேட்டை அவரது அனுமதியின்றி இன்னொருவர் வாசிப்பது தவறில்லையா?"
"கண்ணா, என் கண்ணனின் குறிப்பேட்டை நான் வாசிக்காமல் வேறு யார் வாசிப்பது? உன் கண்ணம்மா வாசிப்பதில் தவறேதுமில்லை. பேசாமல் மனத்தைக் குழப்பிக்கொள்ளாதே கண்ணா."
சிறிது நேரம் வாசித்துவிட்டுக் கூறினாள்:
"கண்ணா இவையெல்லாம் உன் 'டீன் ஏஜ்' பருவத்தில் எழுதியவை. ஒவ்வொரு கவிதைக்கும், கட்டுரைக்கும் மேல் எழுதின திகதி, மாதம், ஆண்டைக் குறிப்பிட்டிருக்கிறாய்."
"உண்மைதான் கண்ணம்மா. அவ்வப்போது என் சிந்தையிலேற்பட்ட உணர்வுகளை வடிப்பதற்காக எழுதியவை இவை. உண்மையில் என் எண்ணங்களின் வடிகால்கள் இவை. இவ்வடிகால்கள் இல்லாவிட்டால் அவை என் நெஞ்சைப் போட்டு வாட்டு வதக்கியெடுத்திருக்கும்."
"கண்ணா, உன் குறிப்புகளை வாசிக்கையில் உண்மையில் எனக்கு ஆச்சரியமாகத்தானிருக்கறது."