பேராசிரியர் கோபன் மகாதேவன் மறைவு!
- ஜனவரி 14 அன்று இலண்டனில் பேராசிரியர் கோபாலப்பிள்ளை மகாதேவா (கோபன் மகாதேவன்) மறைந்த செய்தியினை அவரது குடும்பத்தினர் பேராசிரியரின் முகநூல் பக்கத்தில் அறிவித்துள்ளார்கள். அவரது இழப்பால் ஆழ்ந்த துயரிலிருக்கும் அனைவர்தம் துயரில் 'பதிவுக'ளும் பங்குகொள்கின்றது. 'பதிவுகள்' இணைய இதழின் ஆலோசகர்களில் ஒருவராகவிருந்தார். கடந்த சில வருடங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தபோதும் தொடர்ந்தும் புத்துண்ர்ச்சியுடன் முகநூலில் இயங்கிக்கொண்டிருந்தவர் பேராசிரியர். அவரது ஆக்கங்கள் பல, கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் என, பதிவுகள் இணைய இதழிலும் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவற்றையும், அவரைப்பற்றி ஞானம் சஞ்சிகையின் ஆசிரியர் ஞானசேகரன் எழுதி ஞானம் சஞ்சிகையில் வெளியான அறிமுகக் கட்டுரையினையும் பகிர்ந்துகொள்கின்றோம். - - ஆசிரியர், பதிவுகள்.காம் -
(பதிவுகள்.காம்) பேரறிஞர் பேராசிரியர் கோபன் மகாதேவா
- தி. ஞானசேகரன், பிரதம ஆசிரியர், 'ஞானம்' சஞ்சிகை-
பேராசிரியர் கோபன் மகாதேவா அவர்களை முதன்முதலில் அவரது இலக்கியப் படைப்புக்கள் மூலமே அறியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஞானம் சஞ்சிகையில் அவர் எழுதிய சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் அவரைச் சிறந்த படைப்பாளியாக எனக்கு அறிமுகப் படுத்தியிருந்தன. சென்ற 10-10-2015 அன்று டென்மார்க்கில் இடம்பெற்ற ஏழு சங்கங்கள் இணைந்து நடத்திய கலைவிழாவில் பிரதம அதிதியாக நானும் எனது மனைவியும் அங்கு சென்றபோது, பேராசிரியரும் அவ்விழாவிலே சிறப்பு அதிதியாகக் கலந்து கொள்ள வந்திருந்தார். அவ்வேளையிலேதான், 1974ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது அனைத்துலகத் தமிராய்ச்சி மகாநாட்டின் பிரதம செயலாளராகச் செயலாற்றிய கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவாதான் அவர் என்பதும், அவரே தொடர்ந்து தற்போது கோபன் மகாதேவா என்ற பெயரில் பிரபல்யமாகி பல்துறைச் செயற்பாடுகளிலும் இலக்கியத்திலும் ஈடுபாடுகொண்டு இயங்கிவருகிறார்; என்பதும் தெரியவந்தது.
யாழ்ப்பாணத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டை நடத்த முடியாது என்றும் கொழும்பிலேதான் அது நடத்தப்பட வேண்டும் என்றும் அன்றைய பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் மந்திரிசபையில் தீர்மானித்திருந்த வேளையில் கலாநிதி கோபாலபிள்ளை மகாதேவா சிறிதும் தளராமல் தனது திறமையைப் பயன்படுத்தி சிறிமா அம்மையாருடன் வாதாடி யாழ்நகரிலேயே அந்த மாநாட்டை நடத்த அனுமதிபெற்றவர் என்பதும் என் நினைவில் வந்தது.