சிறுகதை: புற்றுப் பாம்புகள்! - அ.கந்தசாமி -
- ஓவியம் AI -நிர்மலனுக்கு அது கனடாவில் முதல் இரவு.. முதல் உறக்கம். பின்னாள்களில் உறக்கத்தைத் தொலைக்கும் இரவுகள் வர வாய்ப்புகள் உண்டு என்பதைச் சிறிதும் உணராதவன் என்பதால் அவன் உறக்கத்தில் நிம்மதியும் ஒட்டியிருந்தது.
வந்தவனோடு ஆறவமர இன்னும் எதுவும் பேசவில்லை, கும்பகர்ணனுக்குச் சொந்தக்காரன் போல் உறங்குகிறான் என்று எண்ணிய தமக்கை, அருகே சென்று தலைமயிரைத் அன்போடு கோதினாள். உடலெங்கும் நிறைந்திருந்த பயண அலுப்பு, இமைகடந்து வழிந்து விழக் கண் விழித்தான்.
வீட்டுக்குள் அறை மாறிப் படுத்தாலே அவனுடைய தொடர்தூக்கத்தில் பல இடைவெட்டுக்கள் ஏற்படும். இன்று தடித்த போர்வையுள் குறங்கிக் கால் மடங்கிப் படுத்தபின் கனவுகள் குழப்பாத கண் கனத்த உறக்கம்.
பிறந்த மண்ணை விட்டுவிலகி, முன்பின் பரிச்சியம் இல்லாத பயணமாய் ஆசையோடு விமானத்தில் ஏறியவன், பாதிப்பயணத்தில்தான் அது பலமணிநேரச் சிறை என்பதை உணர்ந்தான். ஒருவாறாக விமானம் பியர்சன் விமானநிலையத்தில் தரைதட்ட, பலர் விட்ட நிம்மதிப் பெருமூச்சுகளால் விமானம் தள்ளாடி தரித்தது. அவ்வேளை நிர்மலனுக்கு ஏற்பட்ட மன மகிழ்ச்சியைச் சற்று நேரத்திலேயே குடிவரவு அதிகாரிகள் இடறினார்கள். ஆங்கிலம் என்ற ஒருமொழியை இருவிதமாய்ப் பேசும் பேரிடைவெளிக்குள் சிக்கித் தவித்து ஒருவாறு வெளியே வந்தான்.
விமானத்தில் வந்தோரை விட வரவேற்க வந்தவர்கள் அதிகமாக இருந்தார்கள். அக்காவை, அத்தானை தேடிய கண்கள் பெர்மூடா முக்கோணத்தில் சிக்கிய காந்தஊசி போல் திசை தெரியாமல் தடுதடுத்தன.