முற்றுப் பெறாத உரையாடல்கள்: இறைவன் உங்கள் தோற்றங்களை பார்ப்பதில்லை. உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான்! ஈஸ்ட்ஹாம் இல் நடைபெற்ற மாஜிதாவின் 'பர்தா' நாவல் வெளியீட்டு நிகழ்வு தொடர்பாக ----- - வாசன் (ஐக்கிய இராச்சியம்) -
நேற்று ஈஸ்ட்ஹாம் Trinity Centre இல் மாஜிதாவின் 'பர்தா' நாவல் வெளியீட்டு, விமர்சன நிகழ்வொன்று ஏற்பாடாகி இருந்தது. எனது வேலைப் பளு காரணமாக கடந்த பெருந்தொற்றுக்குப் பின்பான காலகட்டத்தில் நிகழ்ந்த நேரடி நிகழ்வொன்றிலும் நான் பங்கு பற்றியது கிடையாது. ஆனால் இப்போது இதுவரை காலமும் நான் பார்த்து வந்த வேலையை இழந்து ஒரு வேலையில்லாப் பரதேசியாக வாழ்கின்ற காரணத்தினால் எந்த வித அசைகரியமும் இன்றி இந்நிகழ்விற்கு போய் வர முடிந்திருந்தது.
மாஜிதாவின் 'பர்தா' என்னும் இந்த நாவல் வெளி வந்து பல வாரங்கள். கடந்து விட்டுள்ளது. ஆயினும் அதன் பரபரப்பு இன்னும் அடங்கயிருக்கவில்லை என்பதும் அது அடங்க இன்னும் பல வருடங்கள் ஆகும் என்பதும் நேற்றைய சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது எனக்குத் தோன்றியது.. இங்கு எமக்கு அதன் பரபரப்போ அது ஏற்படுத்தும் சர்ச்சைகளோ முக்கியமில்லை. ஆனால் இந்நாவல் 'பர்தா' என்னும் ஒரு ஆடை மூலம் ஒரு சமூகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள ஒரு கொடிய அடக்குமுறையையும் அந்த அடக்குமுறையினைப் பிரயோகிப்பதற்காக பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளையும் நிர்ப்பந்தங்களையும் அழுத்தங்களையும் பேசி, அதற்கு எதிராக தனது வலிமையான குரலை எழுப்பி நிற்கின்றது எனபதும், இனி வருங்காலங்களில் தொடர்ச்சியாக நெறிபடுத்தப் பட வேண்டிய உரையாடல்களுக்கு ஒரு ஆரம்பப் புள்ளியாக விளங்குகின்றது என்பதுவுமே எமக்கு முக்கியமான விடயநக்கலாகப் படுகின்றன.