அஞ்சலி: எழுத்தாளர் எஸ்.முத்துமீரான் மறைவு!
- எழுத்தாளர் எஸ்.முத்துமீரான் சிறுகதை, கவிதை, நாடகம், உருவகக்கதை, நாட்டாரியல் சம்பந்தமான ஆய்வாளர் எனப் பன்முக இலக்கியப் பங்களிப்பாளர். இவரது மறைவு இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்குப் பேரிழப்பே. ஆழ்ந்த இரங்கல். இவரைப்பற்றிய விரிவான அறிமுகக்குறிப்பொன்றினை நூலகம் இணையத்தளம் ஆளுமைகள் பிரிவில் பிரசுரித்துள்ளது. அதனை நன்றியுடன் , முத்துமீரான் அவர்களின் நினைவாக இங்கு பகிர்ந்துகொள்கின்றோம். நூலகத்தளத்தில் எழுத்தாளர்கள் பிரிவில் அவரது நூல்கள் பலவற்றை நீங்கள் வாசிக்கலாம். அவற்றில் சிலவற்றையும் இங்கு பகிர்ந்துள்ளோம். -
முத்துமீரான் சிறுகதைகள் | கிழக்கிலங்கை முஸ்லிம்களின் கிராமியக் கவியமுதம் | மனப்பிரசவம் - சிறுகதைத்தொகுதி
முத்துமீரான் கவிதைகள்
நூலகம் தளத்திலிருந்து: ஆளுமை:முத்துமீரான், எஸ்.
முத்துமீரான், எஸ். (1941.05.03 - ) நிந்தவூரைச் சேர்ந்த கவிஞர், எழுத்தாளர், சட்டத்தரணி, நிருபர் (தினகரன், வீரகேசரிப் பத்திரிகை).இவர் சிறுகதைகள், கவிதைகள், உருவகக் கதைகள், நாடகங்கள், ஆய்வுக் கட்டுரைகள், பாடல்கள் என்பனவற்றை நிந்தவூரான், நிந்தன், லத்தீபா முத்துமீரான் போன்ற புனைபெயர்களில் எழுதியுள்ளார்.
இதுவரை 100க்கு மேற்பட்ட சிறுகதைகளையும் , 250க்கு மேற்பட்ட கவிதைகளையும் , 100க்கு மேற்பட்ட உருவகக்கதைகளையும், 200க்கு மேற்பட்ட வானொலி ஆக்கங்களையும் எழுதியுள்ளதுடன் 30க்கு மேற்பட்ட ஆய்வுகளையும் செய்துள்ளார். இஸ்லாமியர்கள் மத்தியில் பாரம்பரியமாகக் காணப்பட்ட நாட்டாரியல் ஆய்வுகளை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார். நாட்டாரியல் பற்றிய இவரின் நுால்கள் தென் இந்திய பல்கலைக்கழகங்களில் உசாத்துணை நூல்களாகவும் பயன்படுகிறது.