சிறுகதை: நல்லாசிரியர் விருது! - ஸ்ரீராம் விக்னேஷ் -
1975ஆம் வருடம்.
யாழ்ப்பாணத்தில் ஆசிரியையாக பணியாற்றிக்கொண்டிந்த காலம். அந்தப் பள்ளிக்கூடத்துக்கு மாற்றலாகி வந்து பத்து நாட்களேயாகின்றன. எனது ஊரான கட்டுவனிலிருந்து, பேரூந்து ஏறித் தெல்லிப்பளைக்கு வந்து, அங்கிருந்து தொடரூந்தில் யாழ்ப்பாணம் வருவேன். யாழ்ப்பாணம் தொடரூந்துத் தரிப்பிடத்துக்கு அண்மையில்தான் நான் பணிசெய்யும் பள்ளிக்கூடம் இருந்தது. ஐந்து நிமிடத்தில் நடந்தே போய்விடலாம்.
பள்ளிக்கூடம் முடிந்து, தொடரூந்துக்காக காத்துநிற்கின்றேன். நேரமோ பிற்பகல் நான்கு ஐம்பத்தைந்து.
“கொழும்புக் கோட்டையிலிருந்து, காங்கேசந்துறை நோக்கிச் செல்லும் யாழ்தேவி புகையிரதம் இன்னும் சிலநிமிடங்களில் முதலாவது மேடைக்கு வரும்.....”
நிலைய ஒலிபெருக்கி அலறியது. நெற்றிக் காயம் சிறிது வலித்தது. ஒட்டியிருந்த பிளாஸ்திரிமீது இலேசாகத் தடவிக்கொண்டேன்.
”வணக்கம் டீச்சர்....”
அவசரமாக சொல்லிவிட்டு என்னைக் கடந்து சென்றான் ஒரு பையன். ஆளை அடையாளம் தெரியவில்லை.ஏற்கனவே என்னிடம் படித்த மாணவனாக இருக்கலாம். அடுத்து செல்லம்மா ஆச்சியின் தரிசனம்.
“என்ன பிள்ளை..... நெத்தியில காயம்...... காலம்பிறை வந்த ரயிலைவிட்டு நீ இறங்கையிக்கை நான் உன்னைப் பாத்தனான்..... அப்ப காயம் இல்லை....இப்ப இருக்குது.... பள்ளிக்கூடத்தில பிள்ளையளோடை ஓடிப்பிடிச்சு விளையாடி விழுந்தெழும்பினனீயோ....”
ஆச்சியின் கடைசிமகள் கிளிநொச்சியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகின்றாள். காலையில் நான் வந்து இறங்கும் ரெயிலில்தான் அவள் ஏறிப் பணிக்குச் செல்வாள். இப்போது நான் ஏறப்போகும் ரெயிலில்தான் அவள் வந்து இறங்குவாள். அவளை வீட்டுக்கு கூட்டிச் செல்லத்தான், ஆச்சி வந்திருக்கிறார்கள்.