ஐம்பதுகளில் வெளியான வீரகேசரி பிரசுர நாவல் 'கே.வி.எஸ்.வாஸின் (ரஜனி) 'குந்தளப்பிரேமா' - வ.ந.கிரிதரன் -
'வீரகேசரி பிரசுர நாவல்கள் ஒரு பொது மதிப்பீடு' என்னும் அநுபந்தம் பேராசிரியர் நா.சுப்பிரமணியன் அவர்களால் நா.சுப்பிரமணியம் என்னும் பெயரில் எழுதப்பட்டது. அப்பொழுது அவர் எம்.ஏ பட்டதாரி. யாழ் பல்கலைக்கழகத்தில் உதவி நூலகராகப் பணியாற்றிக்கொண்டிருந்த காலகட்டம். வீரகேசரி ஐம்பதாவது நூற்பிரசுர விழாவில் அநுபந்தமாக வெளியிடப்பட்ட பிரசுரமிது. இப்பிரசுரத்தில் வீரகேசரி பிரசுரங்கள் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது:
"1972ஆம் ஆண்டில் தொடங்கிய வீரகேசரி பிரசுர முயற்சி ஆரம்பத்தில் ஆண்டொன்றுக்குச் சுமார் ஆறு பிரசுரங்களாகத் தொடங்கி, அதிகரித்து வந்து இப்பொழுது மூன்றாண்டுகளாக ஆண்டு ஒன்றுக்குப் பத்து நாவல்கள் என்ற அளவில் விரிவடைந்துள்ளது."
இவ்விதமே நானும் வீரகேசரி பிரசுரங்களும் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக, உள்ளூர் உற்பத்திக்கு முதன்மை கொடுக்கப்பட்டிருந்த சூழ்நிலை காரணமாக உருவாகின என்றே எண்ணியிருந்தேன். ஆனால் உண்மையில் அச்சூழலைப் பயன்படுத்தி வீரகேசரி பிரசுரங்கள் அதிக அளவில் வெளிவந்திருந்தாலும் வீரகேசரி பிரசுரமாக 1951இலேயே நாவலொன்று வெளியாகியிருந்ததை அறிய முடிகின்றது. அதனை எழுதியவர் எழுத்தாளர் கே.வி.எஸ்.வாஸ் (கும்பகோணம் வேதாந்தம் சீனிவாச ஐயங்கார்). நாவலின் பெயர் - குந்தளப்பிரேமா.