கிளிம் வாழ்வின் மூன்றாம் தொகுதி: -தமிழ் இலக்கிய உலகை, முன்னிறுத்தி (7) - ஜோதிகுமார் -
7
தமிழ் இலக்கிய உலகில் இது எமது ஆ.மாதவனையும் சிங்காரத்தையும் நினைவுபடுத்தவே செய்யும்.
ஜெயமோகன் எழுதுவார்: “பொதுப்புத்தியாலும், புறவயமான தர்க்கத்தாலும் (REASON) அடையப்பெறும் உண்மைகளுக்கு இலக்கியத்தில் பெரிய இடம் ஏதுமில்லை…” (பக்கம் 105: மேலது)
மேலும் கூறுவார்: “மனித மனதின் ‘இயல்பை’வெளிப்படுத்துதல் என்றால் நவீனத்துவத்தை பொறுத்தவரை இருளையும் தீமையையும் வெளிப்படுத்துதல் தான்” (பக்கம்:89)
இப்பின்னணியோடு ஆ.மாதவனின் படைப்புலகை அணுகும் அவர், மாதவன் பொறுத்து கூறுவது: “மாதவன் சித்தரிப்பது தீமையை மட்டுமே… இதுதான் அப்பட்டமான வாழ்க்கை என்று அப்படியே காட்டும் பாவனை…” (கரிப்பும் சிரிப்பும்). மாதவனின் மேற்படி எழுத்துக்களின் உச்சநிலைகளை (கிளைமெக்ஸ்) ஜெயமோகன் வாயிலாகவே கேட்பது, எமது தரிசனங்களை இலகுவாக்குவதாக அமையும், (ரன்வேயில் ஓடத் தொடங்கலாம்): “‘மோகபல்லவி’ போல நேரடியான விமர்சனமே இல்லாத காமவேட்கையின் சித்தரிப்புகள்…”
“காமினி மூலம்’,‘சினிமா’ போல் விதவிதமான குற்ற சித்தரிப்புகள்…”
மேலும் கூறுவார்:
“அக்குற்றங்களுடன், நம் வாசக மனம், சுவாரஸ்யமாக (?) இணைந்து கொள்வதை, நாமே காணும் துணுக்குறுதல்தான், இவற்றின் அனுபவம்”. (பக்கம்:52: கரிப்பும் சிரிப்பும்)
இவ்விவரிப்பில் ஏற்படும் ‘அனுபவங்களை’ தனியாக விவரிக்கவும் அவர் தயங்குவதில்லை:
“‘சினிமா’…(என்ற) சிறுகதையில்… சாப்பிடும் போது வந்து ;மியாவ்’ கொட்டும் பூனையை வாலை எட்டிப் பிடித்து வாசற்கதவில் நச்சென்று மோதி எறிகிறான்” (பக்கம்:56: மேலது)