வாசிப்பும், யோசிப்பும் (379) : 'ஜே.ஜே.சில குறிப்புகள்' பற்றிச் சில குறிப்புகள்! - வ.ந.கிரிதரன் -
நான் நூல்களை ஒரு தடவை மட்டும் வாசிப்பதுடன் நின்றுவிடுவதில்லை. 'நவில்தொறும் நூல் நயம்' என்பதற்கொப்ப வயதுக்கேற்ப நூலொன்றின் புரிதலும், சுகித்தலும் பரிணாமடையும் என்பதை உணர்ந்தவன். நம்புபவன். அனுபவபூர்வமாக உணர்ந்தவன்.
இதற்கொப்ப மீண்டும் சு.ரா.வின் 'ஜே.ஜே சில குறிப்புகள்' நாவலை வாசிக்கத் தொடங்கியியிருக்கின்றேன். மலையாள 'எழுத்தாளன் ஜோசஃப் ஜேம்ஸ்' பற்றி, அவனது இலக்கிய ஆளுமை பற்றி அவனால் வசீகரிக்கப்பட்ட , ஒருவகையில் அவனது சீடனான தமிழ் எழுத்தாளன் பாலு என்பவனின் சிந்தனைகளே 'ஜே.ஜே.சில குறிப்புகள்'. இந்நாவல் வெளிவந்த காலம் தொடக்கம் இன்று வரை பலத்த வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பிக்கொண்டிருக்கும் நாவல். வழக்கமான நாவலொன்றுக்குள்ள அம்சங்களற்ற நாவல்.
நாவலை வாசிக்கையில் நான் இன்னுமொரு விதமாகவும் உணர்ந்தேன். உண்மையில் நாவலொன்றின் பாத்திரங்கள் அனைத்தையும் படைப்பவர் அதனை உருவாக்கிய எழுத்தாளரே. அப்படைப்பாளி பாத்திரங்களில் உள்ளும் இருப்பார் , புறத்திலும் இருப்பார். அவ்வகையில் தான் எப்படியெல்லாமோ எழுத்தாளர் ஒருவர் இருக்க வேண்டுமென்று எண்ணினாரோ அத்தகைய ஆளுமையாக அவர் ஜே.ஜே என்னும் ஆளுமையை வடித்திருக்கின்றார். தேடல் மிக்க தன்னை பாலுவாக உருவாக்கியிருக்கின்றார். அவ்வகையில் இரு பாத்திரங்களிலுமே அவர் நிறைந்திருக்கின்றார்.