ஆய்வு: வெங்கட் சாமிநாதனும் கலை மற்றும் மார்க்சியம் பற்றிய அவர்தம் பார்வைகளும்! - வ.ந.கிரிதரன் -
- ஜோர்ஜ் இ.குருஷேவை ஆசிரியராகக் கொண்டு வெளியாகும் 'அபத்தம்' மின்னிதழில் வெளியான கட்டுரை. -
அமரர் கலை, இலக்கியத் திறனாய்வாளர் வெங்கட் சாமிநாதன் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஆளுமைகளில் ஒருவர். 'பதிவுகள்' இணைய இதழ் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தவர். இறுதி வரை 'பதிவுக'ளில் எழுதிக்கொண்டிருந்தவர். அவரது கலை மற்றும் மார்க்சியம் பற்றிய எண்ணங்களை அவரது எழுத்துகளூடு விபரிப்பதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.
'நம் உணர்வுகளும், பார்வையும்தான் நம் அனுபவ உலகைத் தருகின்றன. அவைதாம் கலைகளாகின்றன' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்'; பக்கம் 36) `'சித்திரமாகட்டும், இலக்கியமாகட்டும் சிற்பங்களாகட்டும் அது ஒரு தனிமனிதக் கலைஞனும் சமூகமும் கொண்ட உறவாடலின் பதிவு' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்''; பக்கம் 36) அதே சமயம் 'கலைஞரின் மன உந்துதல்களுக்கேற்ப, அக்காலத்துச் சூழ்நிலைகளுக்கேற்ப, மீறியே ஆக வேண்டிய சுய, சமூக நிர்ப்பந்தங்களுக்கேற்ப, தானறிந்தோ அறியாமலோ, மரபுகள் மீறப்படுகின்றன' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்': பக்கம் 39) என்று குறிப்பிடும் கலை, இலக்கிய விமர்சகர் அமரர் வெங்கட் சாமிநாதன் அவர்கள் 'சமூக மாற்றங்களோ' அல்லது கலைப்படைப்பு மனதிலேற்படுத்தும் விளைவாக உருவாகும் மாற்றங்களோ முன்கூட்டியே விதிகளால் தீர்மானிக்கப்பட்டுப் பெற முடியாது' ('கலை உலகில் ஒரு சஞ்சாரம்'; பக்கம் 40) என்கின்றார்.