பழமையில் வளர்ந்தாலும் புதுமையில் பயணித்த முத்தமிழ் வித்தகர்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா -
உலகிலே பிறக்கின்ற மனிதரெலாம் உயர்வு நிலையினை அடைந்து விடுவதுமில்லை. இலட்சியம் பற்றிச் சிந்திக்கும் நிலை பலரிடம் காணப்படுவதும் இல்லை. பிறந்தோம் வாழுகிறோம் என்னும் பாங்கில் இருப்பவர்கள்தான் பல பேர்களாக இருக்கிறார்கள். வாழும் காலத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளை எதிர்கொள்ள இயலாமல் பிரச்சினைகள் வழியில் சென்று அதனுடன் ஒத்துப்போய் இருப்பவர்களும் இருக்கிறார்கள். அதேவேளை நமக்கு ஏன் இந்தப் போராட்டம். வருகின்ற பிரச்சினைகளை புறந்தள்ளி விட்டு விட்டு தானாக ஒதுங்கி நமக்கேன் இந்தச் சிக்கல் ? ஒதுங்குவதுதான் மேலென எண்ணி இருப்பவர்களும் இருக்கிறார்கள். என்னதான் பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை எதிர்கொண்டு அவற்றுக்குத் தீர்வு கண்டு அந்தப் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினைக் காணும் முயற்சியில் ஈடுபட்டு முற்போக்காளர்களாக சமூகச் சிந்தனையாளர்களாக இருப்பவர்களும் இருக்கிறார்கள்.
மூன்றுவகையான சிந்தனை செயற்பாடு மிக்கவர்கள் சமூகத்தில் காணப்படும் வேளை இவர்களில் எந்த வகையினரை சமூகம் நினைத்து பார்க்கும் என எண்ணுகின்ற பொழுதுதான் மனிதவாழ்வின் அர்த்தம் தெரியவரும். பிரச்சினைகளுடன் ஒத்துப்போய் கையாலாகாத நிலையில் இருப்போரையோ அல்லது பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க முடியாமல் நமக்கேன் என்று புறந்தள்ளி ஒதுங்கிப் போகின்றவர் களையோ யாரும் எக்காலத்தும் நினைத்துப் பார்க்கவே மாட்டார்கள். சமூகத்தின் பிரச்சினைகளை எதிர்கொண்டு அவற்றுக்கு உகந்த தீர்வுகளைக் கண்டறிந்து அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு சமூக உணர்வினை உள்ளத்துள் இருத்திக் கொண்டு வாழ்ந்தவர்கள்தான் எல்லோராலும் எக்காலத்தும் நினைவு கூரும் நிலைக்கு நிற்பார்கள் என்பது மிகவும் முக்கிய கருத்தெனலாம். இந்த வகையில் பார்க்கும்வேளை ஈழத்தின் கிழக்கில் காரைதீவில் தோன்றிய சுவாமி விபுலானந்த அடிகளார் வந்து நிற்கிறார் எனலாம்.