ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் ஆறு கவிதைகள்
1. தேசியக் கவி சம்மேளனத்தில் கலந்துகொண்டவரின் கவிதானுபவக் கட்டுரை
நான் காலையில் கண்விழித்தேன் _
வழக்கமாகச் சென்னையில்,
கடந்த வாரம் திங்கட்கிழமை தில்லியில்.
கட்டாயம் காபி வேண்டும் எனக்கு
சென்னையாயிருந்தாலென்ன தில்லியாயிருந்தாலென்ன.
காலை பத்துமணிக்கெல்லாம் கடைகண்ணிக்குச் சென்றுவரக் கிளம்பினேன்.
கைக்குக் கிடைத்த பாசி மணி ஊசியெல்லாம் வாங்கிக்கொண்டேன்.
கவியரங்கக்கூடத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களோடு கைகுலுக்கினேன்.
கைக்குட்டையைப் பையிலிருந்து எடுத்து
வியர்த்திருந்த கழுத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டேன்.
கவிதை வாசிக்க வந்திருந்த அண்டை மாநிலக் கவிஞர்களோடு ஆசையாசையாக செல்ஃபி எடுத்துக்கொண்டேன்.
(அத்தனை பேரிலும் நானே அதிகப் பொலிவோடு இருந்ததாகச் சொன்னார்கள்)
பார்வையாளர்களாக வந்திருந்த ருஷ்ய, செக்கோஸ்லா வாக்கிய ஈரானிய ஜெர்மானிய நாட்டுக் கவிஞர்கள் என்னைப் பார்த்து அத்தனை பாசத்தோடு சிரித்தார்கள். நான் வாசிக்காத என் கவிதை உலகத்தரமானது என்று உள்ளுக்குள் சொல்லிக்கொண்டார்கள்.
கடைசி வரிசைக்குப் பின்னால் வைத்திருந்த மினரல் வாட்டர் புட்டிகளில் ஒன்றை எடுத்துக் குடித்தேன்.
கவிதைகளை நான் படித்தபோது கைத்தட்டல் விண்ணைப் பிளந்தது என்று எழுதவிடாமல் என் தன்னடக்கம் தடுப்பதால் _
மண்ணைப் பிளந்தது என்று கூறி
(ம - மு விற்கிடையே உள்ள ஓசைநயத்திற்காகவும்)
முடித்துக்கொள்கிறேன்.
(பி.கு: கவிதை பற்றி எதுவுமே பேசவில்லையென்கிறீர் களே. உளறிக்கொட்டாதீர்கள். உங்களுக்கு என் மீது பொறாமையென்று புரிகிறது. உங்களைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.)