எழுத்தாளர் முனியப்பதாசன் எழுதிய தொடர்கதை - 'காற்றே நீ கேட்டிலையோ? ' - வ.ந.கிரிதரன் -
இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த எழுத்தாளர்களில் ஒருவர் முனியப்பதாசன். இவர் பற்றி எழுதியவர்கள் இவரது சிறுகதைகள் பற்றியே குறிப்பிட்டுள்ளார்கள். யாருமே இவர் தொடர்கதை எதுவும் எழுதியதாகக் குறிப்பிட்டதில்லை. ஆனால் இவர் தொடர்கதையொன்றும் எழுதியுள்ளார். அது கடல் தொழிலாளர்களை மையமாகக் கொண்டு படைக்கப்பட்ட தொடர்கதை. அது ஈழநாடு பத்திரிகையில் தொடராக வெளியான தொடர்கதை. அதன் பெயர் - காற்றே நீ கேட்டிலையோ? தொடர்கதை முழுமையடையவில்லை. நான்கு அத்தியாயங்களையே என் தேடலில் காண முடிந்தது. இருந்தாலும் இது முக்கியமானதோர் அவதானிப்பு. இதுவரையில் யாருமே முனியப்பதாசனின் இத்தொடர்கதை பற்றிக் கூறாததால் இப்பதிவு முக்கியத்துவம் மிக்கது. ஆவணச்சிறப்பும் மிக்கது. இத்தொடர்கதை ஈழநாடு பத்திரிகையின் 6.10.1966 பதிப்பில் ஆரம்பமாகி , ,28.10.1966 பதிப்பு வரையில் , மொத்தம் நான்கு அத்தியாயங்கள் வெளியாகியுள்ளது.
ஈழநாடு (வியாழக்கிழமை) - 6.10.1966 - காற்றே நீ கேட்டிலையோ? - முனியப்பதாசன் - அத்தியாயம் ஒன்று - https://noolaham.net/project/404/40379/40379.pdf
ஈழநாடு (வியாழக்கிழமை) - 13.10.1966 - காற்றே நீ கேட்டிலையோ? - முனியப்பதாசன் - அத்தியாயம் இரண்டு - https://noolaham.net/project/404/40386/40386.pdf
ஈழநாடு (வெள்ளிக்கிழமை) - 21.10.1966 - காற்றே நீ கேட்டிலையோ? - முனியப்பதாசன் - அத்தியாயம் மூன்று - https://noolaham.net/project/404/40393/40393.pdf
ஈழநாடு (வெள்ளிக்கிழமை) - 28.10.1966 - காற்றே நீ கேட்டிலையோ? - முனியப்பதாசன் , அத்தியாயம் நான்கு - https://noolaham.net/project/404/40399/40399.pdf
எழுத்தாளர் முனியப்பதாசன் பற்றி...
எழுத்தாளர் முனியப்பதாசனின் எழுத்துப்பிரவேசம் 1964இல் கலைச்செல்வி சஞ்சிகை நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'வெறியும் பலியும்' சிறுகதை முதற்பரிசு பெற்றதுடன் ஆரம்பமாகியது. கடற் தொழிலாளர் சமூகத்தைப் பின்னணியாகக் கொண்டு படைக்கப்பட்ட சிறுகதை. கலைச்செல்வியின் ஆசிரியரும், பதிப்பாளருமான சிற்பி சரவணபவன் எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியுள்ளார். அவர்களில் இவருமொருவர். இவரது இயற்பெயர் தாமோதரம்பிள்ளை சண்முகநாதன். யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர். யாழ் இந்துக் கல்லூரியின் அருகிலிருந்த ஒழுங்கைப்பகுதியில் வாழ்ந்ததாக அறிகின்றேன். இவரது கதைகள் ஈழநாடு, சுதந்திரன், கலைச்செல்வி, விவேகி போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியாகின. ஈழநாடு ஆசிரியர் ஹரன் இவரது எழுத்தின்பால் பெரு மதிப்பு மிக்கவரென்றும், அவரே இவரது சிறுகதையொன்றை ஆனந்தவிகடனுக்குக் கொண்டு சென்று கொடுத்ததாகவும், அது விகடனில் முத்திரைக்கதையாக வெளியாகியதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.