ஆய்வு: பண்டைய தமிழரின் தொல்வழிபாட்டு நீட்சியில் நடப்பியல் ஆதிக்கம் - முனைவா் இரா. மூா்த்தி, உதவிப்பேராசிாியா், தமிழ்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூாி, கோயம்புத்தூா் – 641020 -
முன்னுரை
மனித சமூகம் தொல் நிலையிலிருந்து இன்றைய நாகரீக நிலை வரை படிப்படியாக வளர்ச்சி பெறவையாகும். இவ்வளா்ச்சி குறிப்பிட்ட பண்பாட்டு மாறுதல் அல்லது சமூக மாறுதலாகும். இதில் பல்வேறு வழிபாடுகள் தொல்மரபைக் கடைபிடித்தாலும் சமூக அசைவியக்கத்தில் சில மாற்றங்களையும் சந்திந்துள்ளது.
இருப்பினும் வழிபடு தெய்வம் அதே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டு, அதன் வடிவங்களில் மட்டும் மாற்றங்கள் நடந்தேறிய வண்ணம் இருக்கிறது. இது ஒரு வகையான புறக்கிாியைக்கான தூண்டுதல் என்றும், சமூக அசைவியக்கதிற்கான அடையாள மென்றும், மக்களை ஈா்ப்பதற்கான உத்தியென்றும் கூறவேண்டியிருக்கிறது. அந்த வகையில் தொல் தமிழாின் வழிபாட்டு மரபுகளில் நெடுங்கல் வழிபாடு, இயற்கை வழிபாடு, குலக்குறி வழிபாடு ஆகியவற்றில் இன்று பல்வேறு மாறுதல்கள் தென்பட்டுள்ளன. அது குறித்து சங்கப்பனுவல்களோடு ஒப்புமை படுத்தி இன்றைய நடப்பியல் தன்மையில் அதன் நீட்சி எத்தகைய மாற்றுத் தளத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் மையமாகும்.
நடப்பியல்
நடப்பியல் என்பது கடந்த காலத்தைப் பற்றிய உள்ளீடுகளை விட நிகழ்காலச் சமூக வாழ்வும் அதில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்வியலையும் பேசுவதாகும். இது பனுவலுருவாக்கத்தில் எதார்த்தவியலாக இருப்பதுடன், ஒரு நல்ல அளவுகோலாக விளங்குகிறது. தான் கண்டதைக் கண்டவாறு சொல்லுவதை விட விவரங்களை முறையாக அடுக்கி வெளித்தோற்றத்திற்கு தொியப்படுத்துகிறது. அதே நேரத்தில் செவ்வியல் கூறுகளையும் புனைவியல் கூறுகளையும் நிராகரிக்காமல் அதன் வழியாகவே பண்புகளை வெளிப்படுத்த முனைகிறது.
இத்தகைய நடப்பியல் இலக்கியப் பனுவல்களில் சமகால வாழ்வும் இயற்கையும் மிகச் சரியாகக் கூடுதல் குறைவின்றி, நுட்பமாகப் படைத்துக் காட்டுகிறது என்கிறாா் அ.இராமசாமி. கண்ணால் காண்பது அல்ல, அதனைத் தீர விசாரித்தறிய வேண்டும். காரண காரியங்களோடு வெளிப்படுத்துதல் வேண்டும். சமூகப் பின்புலமும் நடத்தைகளின் சுருக்க நிலைகளும் எதார்த்தத்தைச் சரிவரக் காட்டும். அதுவே நடப்பியலை நிவா்த்தி செய்யும். அவ்வாறு செய்வதன் மூலம் நடப்பியல் ஒரு முழுமை பெ்றறதாக மாறுகிறது.