இன்று என் தந்தை நினைவு நாள்! - வ.ந.கிரிதரன் -
இன்று என் தந்தையார் (நடராஜா நவரத்தினம்) மறைந்த நாள். நேற்றுத்தான் போலிருக்கின்றது. அப்பொழுது எனக்குப் பத்தொன்பது வயது. யாழ் ஶ்ரீதரில் 'மாட்னி ஷோ' (Matinee Show) பார்த்து விட்டு வீடு திரும்பியபோது , அப்பொழுது அராலி வடக்கில் வசித்து வந்தோம், சத்தியமூர்த்தி 'மாஸ்டர்' எனக்காக பஸ் வரும் வரை காத்திருந்து , அப்பா மறைந்த செய்தியினைக் கூறி , அரவணைத்து , ஆறுதல் கூறிச் சென்றது இன்னும் நினைவில் நேற்றுத்தான் நடந்தது போல் நிழலாடுகின்றது.
இன்று தற்செயலாக நண்பர் வரதீஸ்ரவன் 'தாய்க்குப் பின் தாரம்' படத்தில் வரும் 'தந்தையைப் போல் உலகில் தெய்வம் உண்டோ' என்னும் பாடலுக்கான யு டியூப் இணைப்பினை அனுப்பியிருந்தார். அதில் வரும் பின்வரும் வரிகளைக் கேட்டபோது,
"தந்தையைப் போல் உலகிலே
தெய்வம் உண்டோ
ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால்
விந்தை உண்டோ
சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ
உண்ணாமல் உறங்காமல்"
உயிரோடு மன்றாடி
என் வாழ்வின் இன்பமே எதிர் பார்த்த
தந்தை எங்கே
என் தந்தை எங்கே
கண்ணிமை போலே
என்னை வளர்த்தார்
கடமையை நான் மறவேனா
கண்ணிமை போலே என்னை வளர்த்தார்
கடமையை நான் மறவேனா
காரிருள் போலே பாழான சிதையில்
கனலானார் விதி தானா
காரிருள் போலே பாழான சிதையில்
கனலானார் விதி தானா
தந்தை கனலானார் விதி தானா"
குறிப்பாகக் 'காரிருள் போலே பாழான சிதையில் கனலானார் விதி தானா' என்னும் வரிகளைக் கேட்டபோது அவர் சிதையில் தனித்து எரிந்த காட்சி படமாக விரிகின்றது. அவ்விதம் அவரை அங்கு எரியவிட்டு வீடு திரும்பிய இரவு முழுவதும் அதே நினைவிலிருந்தேன்.
கவிஞர் தஞ்சை ராமையா தாஸின் தந்தையின் பேரன்பைப் புலப்படுத்தும் வரிகள், பாடகர் டி.எம்.எஸ்ஸின் உணர்ச்சி மிக்க குரல், திரையிசைத் திலகம் கே.வி.எம்மின் இசை, எம்ஜிஆரின் நடிப்பு எல்லாமே அந்தத் துயர நாளை நினைவுக்குக் கொண்டு வந்தன.