வாசிப்பும், யோசிப்பும் (380) 'ரகரம்' பற்றித் தமிழ் அறிஞர் அ.கி.பரந்தாமனார்! - வ.ந.கிரிதரன் -
கவிஞர் மகுடேசுவரன் தன் முகநூற் பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
"தமிழ் இலக்கணப்படி, ‘ர’கர வரிசை எழுத்துகளில் எதுவும் சொல்லுக்கு முதல் எழுத்தாக வராது. பிறமொழிச் சொற்களில்கூட ’ர’கர எழுத்து முதலாய் வந்தால் அதன் முன்னே உயிரெழுத்தை இட்டே எழுதுவோம். ரங்கன் – அரங்கன். ராமசாமி – இராமசாமி. "
ஆனால் பிறமொழிச் சொற்களில் ர என்னும் எழுத்தை சொல்லுக்கு முதலில் வைத்து எழுதும் வழக்கம் ஏற்பட்டு ஆண்டுகள் பலவாகிவிட்டன. தமிழ் அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது . இது பற்றி தமிழறிஞர் அ.கி.பரந்தாமனார் அவர்கள் தனது 'நல்ல தமிழ் எழுத வேண்டுமா?" நூலில் பின்வருமாறு கூறுவார்:
"இக்காலத்தில் ரகரமும் பிறமொழிச் சொற்களில் மொழி முதல் எழுத்தாக வரலாம். தொன்று தொட்டு அரங்கநாதன், இராமன், இராமாயணம் என்று எழுதுவதை நாம் இன்றும் மேற்கொள்வதால் தவறில்லை. ஆனால், எல்லாவற்றையும் அப்படியே எழுத வேண்டுமென்பதில்லை. ரதம் என்னும் சொல்லை இரதம் என்று எழுத வேண்டுவதில்லை. ரப்பர் என்னும் சொல்லை இரப்பர் என்று எழுதினால் யாசிப்பர் என்றன்றோ பொருள்படும். ஆதலால், தொன்று தொட்டு எழுதி வருவதற்கு மட்டும் அகரம், இகரம் பெய்து எழுதுவோம். மற்றவற்றிற்கு அவ்வாறு செய்ய வேண்டுவதில்லை."
இதுபோல் ட என்னும் சொல்லையும் பிறமொழிச் சொற்களுக்குப் பாவிக்கலாம் என்பது அவர் எண்ணம்.