“ஆயுள் உள்ளவரை இந்தக்குயில் கூவிக்கொண்டே இருக்கும் என்று கூறி உங்களிடமிருந்து விடைபெறுபவர் இராஜேஸ்வரி சண்முகம்” - எஸ்.கே.ராஜென் -
- எம் பேரன்புக்குரிய வானொலிக் கலைஞர்களிலொருவர் அமரர் இராஜேஸ்வரி சண்முகம். அவரது காலகட்டத்தில் அவரது குரலுக்கு அடிமையாக நாமனைவருமிருந்தோம். அவருடன் பணியாற்றிய சக வானொலிக் கலைஞரும் ,ஊடகவியலாளருமான எஸ்.கே.ராஜென் அவர்கள் அவரைப்பற்றிய நினைவுகளைப் பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றார். அத்துடன் இராஜேஸ்வரி சண்முகம் அவர்களின் அரிய புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார். அவருக்கு எம் நன்றி. - பதிவுகள்.காம் -
தமிழ் கலைகளில் வானொலிக்கலை என்பதும்ஓர் அங்கமாகியது. வானொலித்தமிழ் எனும்வடிவம் தோற்றம் பெற்றது. இவற்றுக்கு வழிவகுத்தது இலங்கை வானொலி தமிழ் ஒலிபரப்பு. இலங்கை வானொலித்தமிழ் தனித்துவம்நிலைநாட்டிய அந்தநாள்கள் மனமகிழ்வுக்குரியவை. இலங்கையிலும்தமிழகத்திலும் தமிழ் மக்கள் வாழ்ந்து வரும்பலநாடுகளில் இருந்தும் ‘வானொலித்தமிழ்’ என்ற கருத்து கல்வியாளர்களால் முன்வைக்கப்பட்டது. அப்படி ஒரு பொற்காலம்இருந்தது, அப்பொழுது இலங்கைத்தமிழ்ஒலிபரப்பாளர்கள் பெருமைப்படுத்தப்பட்டார்கள். இப்பொழுது யாவும் சென்னை வியாபாரத்தமிழால் செழுமை குன்றிப்போயுள்ளன. மூத்த ஒலிபரப்பாளர்களின் ஆளுமைமிக்க அனுபவங்கள் பேணப்படாது புறக்கணிக்கப்படுகின்றன. இப்படிப்பல்வேறு விடயங்கள் இன்றைய வானொலி ஒலிபரப்புக்கள் தரம்குன்றிப்போவதற்குக் காரணிகளாய் அமைந்துள்ளன. இவற்றுக்கு மத்தியிலும் வாழ்வின் பெரும் பகுதியை இலங்கை வானொலி தமிழ்ஒலிபரப்பில் தம்மை அர்ப்பணித்து வாழ்ந்த, அரும் பெரும் அறிவிப்பாளர்கள் எமதுமனங்களில் வாழ்ந்து வருகிறார்கள்.அவர்களில் ஒருவரை இந்தப்பகுதியில்பதிவிடுவது மனதுக்கு மகிழ்வு தருகிறது. இலங்கை வானொலி என்றதும் எமதுமனங்களில் எழுந்து வரும் அறிவிப்பாளர்கள்வரிசையில் உயர்ந்து நிற்பவர் வானொலிக்குயில் இராஜேஸ்வரி சண்முகம் அவர்கள். மயில் ஆடினால் அழகு, குயில் கூவினால் இனிமை, இராஜேஸ்வரி சண்முகம்அவர்கள் அறிவிப்பு நிகழ்த்தினால் இனிமையோ இனிமை. இலங்கைத் தமிழ்ப் பெண்களுள் கலை ஆளுமைகளில் சிறந்து விளங்கினார்.