நோர்வே பயணத்தொடர் (1) : சமாதானம் மற்றும் நல்லிணக்கத்துக்காகப் பிரயாசைப்படும் நோர்வே - ஶ்ரீரஞ்சனி --
இலங்கையை விட்டு எங்கெல்லாம் ஓட முடியுமோ, அங்கெல்லாம் ஓடும்படி உள்நாட்டுப் போர் எங்களில் பலரைத் துரத்தியது. அதன் விளைவு, நாங்களும் எங்களின் அயலார், உற்றார், உறவினர்களும் இந்தப் பூமிப் பந்தின் பல்வேறு தேசங்களிலும் சிதறிப் போனோம்.
அங்ஙனம் விதி விட்டவழி நாங்கள் சிதறி விழுந்த இடங்களில், மொழித் தேர்ச்சி போதாமல், படிப்புக்கேற்ற வேலை கிடையாமல், புதிய சீதோஷ்ண நிலைக்கும் கலாசாரத்துக்கும் ஏற்ற தயார்நிலை இல்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டோம். எனினும், முடிவில், தஞ்சம் தேடிய புகலிடங்களில் ஆழமாகவே காலூன்றி வாழ எங்களால் முடிந்திருக்கிறது. நாங்கள் பெற்றுக்கொண்ட புகலிடக் குடியுரிமை தொலைத்திருந்த உறவுகளைத் தேடி, அந்தந்த உறவுகள் வாழும் நாடுகளுக்குச் செல்வதற்கும் வழிசெய்திருக்கிறது.
“இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம், இறைவன் வகுத்த நியதி” என அன்று கண்ணதாசன் கூறியதுபோல, சொந்த நாட்டையும் உறவுகளையும் பிரிந்த துன்பம் எங்களுக்குள் உழன்று கொண்டிருந்தாலும்கூட, இலங்கையில் இருந்திருந்தால் செய்வதற்கு மிகக் கடினமாக இருந்திருக்கக்கூடிய பல விடயங்களை இப்போது எங்களால் சுலபமாகச் செய்யமுடிகிறது. அவ்வகையில் விரும்பிய நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்வதற்கு எங்களின் குடியுரிமை அனுமதிப்பதும் ஒருவகையில் ஒரு கொடுப்பனவுதான். இல்லையா?
முதுமை என்பது ஒரு எச்சரிக்கையாகவும் இருப்பதால், பயணம்செய்ய முடியாமல் போக முன் அந்தக் கொடுப்பனவை முடிந்தவரையில் பயன்படுத்த வேண்டுமென்ற என்ற எண்ணம், அடுத்ததாக நோர்வேயையும் பார்த்துவிட வேண்டுமென்ற அவாவை எனக்குள் வளர்த்தது. அங்கு சென்றால் நான்கு தசாப்பதங்களுக்கு மேலாகக் காணாமல் இருக்கும் உறவுகளையும் சந்திக்கலாமென்பது, அந்த எண்ணத்துக்கு மேலும் வலுச்சேர்த்தது.