அஞ்சலி: எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன் மறைவு! - வ.ந.கிரிதரன் -
எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன் (குப்பிழான் ஐயாத்துரை சண்முகலிங்கம்) அவர்கள் மறைந்த செய்தியினை முகநூல் தெரியப்படுத்தியது. எதிர்பாராத செய்தி. அவர் மறைவால் வாடும் குடும்பத்தவர், நண்பர்கள், எழுத்துலகைச் சேர்ந்தவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் 'பதிவுகள்' சார்பாகவும் , என் சார்பாகவும் ஆழ்ந்த இரங்கல்.
நந்தினி சேவியர், கே.எஸ்.சிவகுமாரன் , குப்பிழான் ஐ.சண்முகன் இவர்கள் என் முகநூல் நண்பர்களாகவுமிருந்தவர்கள். நான் என் இளமைப்பருவத்தில் வியந்து நின்ற இவர்களைப்போன்ற இலக்கிய ஆளுமைகளுடன் நண்பர்களாகப் பழக, கருத்துகளைப் பரிமாற நவீன இணையத்தொழில் நுட்பம் வழி சமைத்துத் தந்தது நவீனத் தொழில் நுட்பத்தின் ஆரோக்கியமான அம்சங்களிலொன்று.
சிலரைப் பார்த்ததுமே பிடித்துப் போய்விடும். இவரை நான் ஒருபோதும் நேரில் பார்த்ததில்லை. ஆனால் இவரது மீசை, புன்னகையுடன் கூடிய முகத்தோற்றத்தைக் காட்டும் புகைப்படத்தை முதலில் பார்த்ததுமே இவரை எனக்குப் பிடித்துவிட்டதென்பேன். அமைதியான, எதிர்த்து ஓங்கிப் பேசாத ஒருவர் என்பதை அப்புகைப்படம் எடுத்துக்காட்டியது. அது போலவே இவர் இருப்பதை இவருடனான நேர்காணல்கள் எடுத்துக்காட்டின.