நடு 50 இதழ் பற்றிய எண்ணங்கள்! - வ.ந.கிரிதரன் -
- ஸ்கார்பரோவில் நேற்று நடைபெற்ற எழுத்தாளரும், நடு இணைய இதழ் ஆசிரியருமான கோமகன் அவர்களை நிஒனைவு கூர்தல் மற்றும் நடு 50 இதழின் வெளியீடு ஆகியவற்றை உள்ளடக்கிய நிகழ்வில் நான் ஆற்றிய உரையின் விரிவான வடிவமிது. - வ.ந.கி -
இன்று இங்கு கூடியிருக்கும் பேச்சாளர்கள், கலை, இலக்கிய ஆர்வலர்கள். சமூக அரசியற் செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் முதலில் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இன்று நாம் இதழாசிரியரும் , எழுத்தாளருமான நண்பர் கோமகனின் எழுத்து மற்றும் இதழியற் பங்களிப்பை உள்ளடக்கிய இலக்கியப் பங்களிப்பு பற்றிப் பேசுவதற்கும், அவரை நினைவு கூர்வதற்கும், அவரது இலட்சியக் கனவான நடு இணைய இதழின் அச்சு வடிவினை அறிமுகப்படுத்துவதற்காகவும் கூடியிருகின்றோம். அதற்காக இங்கு எழுத்துலக ஆளுமைகள் பலர் கலந்துகொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தம் கண்ணோட்டத்தில் கோமகனை நமக்கு அறிமுகப்படுத்தவிருக்கின்றார்கள்.
கோமகனை நான் ஒரு போதும் நேரில் சந்தித்ததில்லை. அவருடன் உரையாடியதுமில்லை. ஆயினும் அவரும் நானும் முகநூல் மெசஞ்சர் மூலம் தொடர்பிலிருந்தோம். அத்தொழில்நுட்பத்தினூடு உரையாடிக்கொண்டிருந்தோம். அவர் படைப்புகளை வேண்டி நிற்கும்போது என் படைப்புகளை வழங்கியிருக்கின்றேன். இணைய இதழ் தொழில்நுட்பம் பற்றிக் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டிருந்தோம். அவருடனான எனது தொடர்பிலிருந்து அவரைப்பற்றியதொரு பிம்பம் என்னுள்ளத்திலிருந்தது. இதழாசிரியராக, எழுத்தாளராக விளங்கிய அவர் சுயமாகத் தகவற் தொழில் நுட்பத்தை இணையம் மூலம் கற்பதில் வெற்றியடைந்தார். அதனால் அவரால் நடு இணைய இதழைத் தனியாக வடிவமைக்க முடிந்தது. இவ்விதம் இணைய இதழொன்றினைச் சுயமாக வடிவமைத்து, ஆக்கங்களைப் பெற்று , அவற்றைப் பதிவேற்றுவதென்பது மிகவும் நேரத்தை எடுக்குமொரு செயல் என்பதைப் பதிவுகள் இணைய இதழை உருவாக்கிப் பராமரிப்பவன் என்னும் என் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் அறிவேன். ஆர்வமும், மிகுந்த அர்ப்பணிப்பும் இருந்தாலன்றி இவ்விதமான இணைய இதழொன்றினைத் தொடர்ச்சியாக வெளியிட முடியாது. இதனால்தான் பலர் இவ்வித இணைய இதழ்களை அல்லது வலைப்பூக்களை உருவாக்கிவிட்டு, ஆரம்பத்தில் சிறிது காலம் உற்சாகமாக இருந்துவிட்டு பின்னர் ஓய்ந்து விடுவார்கள். இதனால் எப்பொழுதும் எனக்குக் கோமகன் மீது தனிப்பட்ட மதிப்பும், அன்புமுண்டு.