ரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்
1. கட்டடக்கலை வரலாறு
கைவசமிருக்கும் கற்களையும் மணலையும் சிமெண்ட்டையும்
ஜல்லியையும் தண்ணீரையும் கலந்து கட்டிக்கொண்டிருக்கிறாய்…
இந்தக் கற்களும் மணலும் சிமெண்ட்டும் ஜல்லியும்
தண்ணீரும் தரமானவையா போதுமானவையா
என்று சரிபார்க்க உனக்கு நேரமில்லை மனமுமில்லை.
தினசரிச் சந்தையில் சுலபமாய் மலிவு விலைக்கு வாங்கவும்
விற்கவும் முடிகிறது.
அப்படிக் கட்டப்படுவதைக் கண்காட்சியாகப் பார்த்து மகிழ
அன்றாடம் சாரிசாரியாக ஆட்கள் வருகிறார்கள் எனும்போது
அதற்கான அல்லது அதைக்கொண்டு அருங்காட்சியகமும் பல்பொருள்
அங்காடியும் அமைக்கப்படுவதுதானே புத்திசாலித்தனம்.
தரமற்ற அளவில் நிர்மாணிக்கப்படுமொரு கட்டிடம்
இடிந்துவிழுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அதனால் நேரும் இழப்புகளும் அதிகம்.
ஒப்புநோக்க வார்த்தைகளால் கட்டப்படுவனவற்றுக்கு
அத்தகைய அபாயங்கள் குறைவு.
எத்தனை பலவீனமாகக் கட்டப்பட்டிருந்தாலும்
உறுதியானது என்று மற்றவர்களை நம்பவைக்கும் உத்திகளை
நேர்த்தியாகக் கையாளத் தெரிந்தால் போதும்.
காலத்துக்கும் அது உறுதியாக நிற்கும்.
அவ்விதமாய் கட்டப்படுவதன் அடி முடி காணா தலைமுறையினர்
அவற்றில் வாசம் செய்தபடி
அவற்றுக்கு வாடகை செலுத்தியபடி
அவற்றினூடாய் வாழ்ந்தேகியபடி
அவர் மீது இவரும் இவர் மீது அவரும் வெறுப்புமிழ்ந்தபடி….
அவர்களைக் காட்சிப்பொருளாக்கியபடி கட்டிடவியாபாரத்தில்
கொள்ளை லாபம் ஈட்டிக்கொண்டிருப்பவர்களை
கனவான்களாக காருண்யவாதிகளாக காண்பதும்
காட்டுவதுமாய்
ஊட்டிவளர்க்கபட்டுக்கொண்டிருக்கும்
கட்டடக்கலை வரலாறு.