பெண்மையின் பெருமையை கண்ணெனப் போற்றுவோம்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா -
மார்ச் 8 - சர்வதேச மகளிர் தினம்!
" மங்கையராய் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டும்." ' மண்மகிழப் பெண் பெண்மகிழ வேண்டும் . பெண்ணைத் தெய்வம் என்கிறோம். மண்ணை பூமித்தாய் என்கிறோம். ஓடிவரும் நதிகளுக் கெல்லாம் பெண்ணின் பெயரையே சூட்டி நிற்கிறோம்.பிறந்த நாட்டைத் தாய் நாடு என்கிறோம். பேசும் மொழியைத் தாய் மொழி என்கிறோம். பெண்ணின் பெயரைப் பெரிதும் மதித்து இவற்றை யெல்லாம் செய்கின்ற சமூகமானது பெண்மையை எப்படிப் பார்க் கிறது ? அந்தப் பெண்மைக்கு எந்தளவு உயர்வினைக் கொடுக்கிறது ? அந்தப் பெண்மையின் நிலைதான் என்ன ? இவையெல்லாம் கேள்விகளாய் எழுந்து நிற்கின்றன !
உடல் அளவில் உறுதி மிக்கவனாக ஆண் விளங்கினாலும் மன வளவில் உறுதி மிக்கவளாகப் பெண்ணே விளங்குகிறாள். இதனா ல்த்தான் ' ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் ' என்று சொல்லப்படுகிறது. அவள் - தாயாக, தாரமாக , சகோதரமாக, மகளாக, தோழியாகக் கூட அமைந்து விடலாம். வீட்டின் அமைதியும் , ஆனந்தமும் வெளியில் வியாபித்து சமூகத்தையே சாந்திக்கு ஆட்படுத்தும் ஆற்றல் நிச்சயம் பெண் மையின் கைகளிலேதான் தங்கியிருக்கிறது. அந்த அளவுக்கு பெண்மை என்பது வாழ்க்கையின் பெரு வெளிச்சம் எனலாம். அந்தப் பெரு வெளிச்சத்தை அளித்து நிற்கும் பெண்ணை பெண்மையைப் போற்றும் தினமாகத்தான் " சர்வதேச மகளிர் தினம் " முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது எனலாம்.
பெண்களைப் பற்றிப் பெருமையாய் பேசும் சமூகத்தில் பெண்களின் ஆரம்ப கால நிலைமைகள் எப்படி அமைந்திருந்தன ? பெண்களுக்கு இந்தச் சமூகம் குறிப்பாக ஆணினம் எந்தளவுக்கு சுதந்திரத்தை வழங்கி வந்திருக்கிறது ? இவையெல்லாம் வரலாறாகி நீண்டு நிற்கிறது என்பதுதான் இதற்குப் பொருத்தமான விடை எனலாம்.