உண்மை நட்பு! - வேந்தனார் இளஞ்சேய் -
கொடை வள்ளல் கர்ணனிற்கு, கொடுப்பது மட்டுமல்ல குணம். கொடுக்கையிலும் மற்றவர் நிலையுணர்ந்து கொடுக்கும் குணம் கொண்டவன் கர்ணன். நாம் நண்பர்களுக்கோ, அறிந்தவர்களுக்கோ, உதவி புரிதல் மட்டும் முக்கியமல்ல. ஒருவரிற்கு உதவி தேவைப்படுவதை உணர்ந்த போது , அவரதனை நம்மிடம் கேளாமல் இருக்கையிலேயே, அவரின் நிலையுணர்ந்து, அவரிற்கு எம்மால் முடிந்த வகையில் உதவுதலே உண்மை நட்பாகவும். அதுவே வள்ளுவரின் குறளான உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு.(குறள் 788) என்ற குறளுக்கு முன்னுதாரணமாகும்.
உதவி உணரப்பட்டு , உணர்வோடு , உண்மையன்போடு , உரிய நேரத்தில் வழங்கப்படலே உண்மை நட்பின் உயர்வாகும். இங்கு உதவி யென்பது பணவுதவி என்று மட்டுமே கருதுவது தவறு. நண்பன் மனம் வருந்தி நிற்கையில்,அவனிற்கு ஆறுதல் கூறுவது. அவனின் ஆற்றலை அவனிற்கு உணர்த்தி , அவனுக்கு வந்துள்ள இடர்களை வென்றிடும் உளவலிமையை அவனிற்குக் கொடுப்பது. தளர்ந்த மனதிற்கு ஆறுதல் கூறித் தன்னம்பிக்கை ஊட்டுவது. நண்பனின் முகக் குறிப்பறிந்து , அவனின் வாட்டத்தை உணர்ந்து , அவனிற்குத் தன் சக்திக்கு ஏற்ற வகையில் , எந்த வகையிலாவது உதவி செய்யத் துடிப்பவனே , உண்மை நண்பனாவான்.
எவனொருவன் , தான் நலிந்த நிலையிலிருந்த போது, தான் கேளாமலே முன்வந்து, தனக்குத் தக்க உதவிகள் புரிந்திட்ட உண்மை நண்பன் , இன்று மனவுளைச்சல் உற்று நிற்கையில் , உதவாது விலகி நின்று வேடிக்கை பார்க்கின்றானோ , அவனைப்போன்ற ஒரு சுயநலவாதி இந்த உலகில் இருக்க முடியாது.