கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் விருதுவிழா-2024 - குரு அரவிந்தன் -
* படங்களைத் தெளிவாகப் பார்க்க ஒரு தடவை அழுத்தவும்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘விருது விழா -2024’ஸ்காபரோ சிவிக்சென்றர் மண்டபத்தில் 26-10--2024 அன்று இணையத்தின் தலைவர் திரு. கனகசபை ரவீந்திரநாதன் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 31 ஆண்டுகளாக இந்தக் கனடிய மண்ணில் சிறப்பாக இயங்கிவரும் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர்களாக திரு. தெ.சண்முகராசா, திரு. திருமாவளவன், திரு. வி.கந்தவனம், திரு.சின்னையா சிவநேசன், திரு.ஆர். என். லோகேந்திரலிங்கம், திரு.சிவபாலு தங்கராசா, திரு. சின்னையை சிவநேசன், திரு.சி. சிவநாயகமூர்த்தி, பேராசிரியர் திரு.இ. பாலசுந்தரம், திரு.குரு அரவிந்தன், திரு. அகணி சுரேஸ், திரு.க. ரவீந்திரநாதன் ஆகியோர் இதுவரை பணியாற்றியிருந்தனர்.
ஒருவர் வாழும்போதே அவரைக் கௌரவிக்கும் முகமாக அவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ்க்கலாச்சார வளர்ச்சிக்காக ஆற்றிய அரிய சேவைகளைப் பாராட்டி மட்டுமல்ல, புலம்பெயர்ந்த மண்ணிலும் தமிழ் மொழியை வளர்ப்பதில் ஆர்வத்தோடு இவர்கள் காட்டும் ஈடுபாட்டைப் பாராட்டியும், இந்த ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கும் நிகழ்வு கனடாவில் இடம் பெற்றிருந்தது. கனடாவில் ஒரு இணையத்தால் வழங்கப்படும் உயர் இலக்கிய விருதாக இந்த விருது மதிக்கப்படுவதும் குறிப்பிடத் தக்கது. இந்த விருதுகளைப் பெறுவதற்காகக் கனடா தமிழ் சமூகத்தில் இருந்து மதிப்புக்குரிய ஆறு பெரியோர்களை செயற்குழுவினர் இம்முறை தெரிவு செய்திருந்தார்கள்.
மங்கள விளக்கேற்றியதைத் தொடர்ந்து கனடாப்பண், தமிழ்தாய் வாழ்த்து ஆகியன செல்வி சோலை இராஜ்குமார், சென்னி இராஜ்குமார், சோழன் இராஜ்குமார், டிலன் கென்றிக் பிளசிடஸ் ஆகியோரால் இசைக்கப்பெற்றன. அடுத்து அகவணக்கம் இடம் பெற்றது. இணையத்தின் துணைத்தலைவர் திரு. குரு அரவிந்தனின் வரவேற்புரையைத் தொடர்ந்து வரவேற்பு நடனம் இடம் பெற்றது. இதில் திருமதி வனிதா குகேந்திரனின் கலைக்கோயில் மாணவிகளான செல்வி ஆதுரா கமலராஜன், செல்வி ஆனிரா கமலராஜன், செல்வி வஸ்மிகா ராகுலன் ஆகியோர் பங்கு பற்றினர். இதைத் தொடர்ந்து திரு. க. ரவீந்திரநாதனின் தலைவர் உரை இடம் பெற்றது. அடுத்து செல்வன் தருண் செல்வம், செல்வி வைஸ்ணவி சதானந்தபவன் ஆகியோரது இளையோர் உரையும், காப்பாளர் சிந்தனைப்பூக்கள் திரு. எஸ். பத்மநாதனின் உரையும் இடம் பெற்றன.