நைரா - வாசிப்பு அனுபவம்! நாவலாசிரியருக்கு ஒரு கடிதம்! - வித்யா அருண், சிங்கப்பூர் -
ஆடைகளின் ஏற்றுமதி எப்படித் திருப்பூரை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறது என்பதை யதார்த்தமாக பதிவு செய்திருந்தீர்கள். அரசியல், மக்களின் இயல்பு வாழ்க்கை, பொருளாதாரம் வேகமாக வளரும் ஊரில் அந்த ஊரின் கடைநிலை மனிதர்கள் இடம் மாறவேண்டிய கட்டாயம், மாட்டுக்கறிக்கென இருக்கும் கூட்டம் என்று பலவற்றையும் தொட்டிருக்கிறது இந்த நாவல். பள்ளிகளில் சமசீர் கல்விக்கான புத்தகங்கள் இல்லை என்பதுகூட விடப்படவில்லை. எனக்கு எப்படி இத்தனை விஷயங்களை ஒரே புத்தகத்தில் கோர்த்தீர்கள் என்பது அதிசயமாக இருந்தது.
நைரா என்ற சொல் எனக்குப்புதிது. முதல் அத்தியாயத்தில் ரயில் நிலையத்தில் கறுத்தப்பனையாக நிற்கும் நைஜீரிய மனிதனின் அறிமுகம் நன்றாக இருந்தது. நம் ஊரில் விற்கும் சிவப்பழகு பொருட்களின் விளம்பரங்கள் வெள்ளைத்தோலை விரும்பும் மனதைத்தானே வெட்டவெளிச்சப்படுத்திக்காட்டுகின்றன. கெலுச்சி போன்ற ஆண்கள், பெண்களைப் படி, நல்ல வேலைக்கு போ என்று உற்சாகப்படுத்துபவர்காளாக இருந்தாலும், அவர்கள் சிவகாமி போன்றவர்களுக்கு ஒருவித அபசகுனம் தானே . நம்மவர் அத்தனை கருப்பாகவும், கெலுச்சி போன்றோர் நம் தமிழர்களின் சராசரி நிறத்திலும் இருந்தால், இந்தக்காதலுக்கு ஒரு தடையும் இருந்திருக்காது இல்லையா?
ஒரு கதைசொல்லியாக, அங்கங்கே டைரிக்குறிப்புகளாக இந்தியாவையும், நைஜீரியாவையும் கல்வி, பெண்கள் பாதுகாப்பு, அங்கிருந்த தலைவர்கள், அவர்களைப்பற்றிய விமர்சனங்கள் என்று நீங்கள் எடுத்துக்கொண்ட முயற்சி நிச்சயம் பாராட்டுதலுக்குரியது.
நைஜீரியா என்ற நாட்டைப் பற்றி ஓரளவு அறிமுகம் உங்கள் நூலின் வாயிலாகக்கிடைத்தது. அங்கும் முருகன் கோயில்களும், தமிழ் பேசும் மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்பது எனக்குப்புது செய்தி .
நான் அமெரிக்காவில் ஒரு சில ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். கென்யா நாட்டிலிருந்து ஓரிருவர் என்னோடு வேலைப்பார்த்தனர். வெள்ளை இன மக்களைவிட, நம் தமிழ் சமூகத்தோடு அவர்களால் தங்களது, எண்ணங்களையும், கலாச்சாரம் தொடர்பான பகிர்தலையும் எளிதில் செய்ய முடிவதாக எனக்குத்தோன்றுகிறது.