பதிவுகள் இணைய இதழும் அதன் ஆரம்ப கால இலக்கியப் பங்களிப்பும்! - வ.ந.கிரிதரன் -
ஆரம்ப காலத்திலிருந்து வெளியாகும் தமிழ் இணைய இதழ்களான திண்ணை , பதிவுகளின் ஆரோக்கியமான இலக்கியப் பங்களிப்பு பற்றி நான் நிச்சயம் பெருமைப்படுகின்றேன். திருப்திப்படுகின்றேன். பதிவுகள் இணைய இதழைத் தொடங்கியபோது முக்கியமான நோக்கங்களாக இருந்தவை: என் படைப்புகளை இணைய மூலம் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அதே சமயம் இணையத்தில் தமிழ் எழுத்துகளை எழுதுவதற்குத் தூண்டுகோலாகவிருக்க வேண்டும். இவ்விதமான எண்ணங்களோடு பதிவுகள் இணைய இதழை ஆரம்பித்தேன். அப்போது வலைப்பதிவுகள் ஏதுமில்லை. இவ்விதமானதொரு சூழலில் முரசு அஞ்சல் எழுத்துரு எனக்குப் பெரிதும் கை கொடுத்தது. ஏனென்றால் எனக்குத் தமிழ்த் தட்டச்சு செய்வதில் பெரிதும் ஆற்றலில்லை. ஆனால் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வது அதனுடன் ஒப்பிடும்போது இலகுவாகவிருந்தது. இவ்விதம் பதிவுகள் இணைய இதழை ஆரம்பித்து படைப்புகளைத் தமிழில் பிரசுரித்தபோது அது இணையத்தில் தமிழ் வாசகர்களைக் கவர ஆரம்பித்தது. பலர் தம் படைப்புகளை அனுப்ப ஆரம்பித்தார்கள். அப்பொழுது அவ்விதம் படைப்புகளை அனுப்புபவர்களுக்கு நான் கூறியது: பதிவுகளுக்கு படைப்புகள் அனுப்புபவர்கள் படைப்புகளை பதிவுகளுக்கு உரிய எழுத்துரு பாவித்துத் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டுமென்பதுதான். இதற்கு முக்கிய காரணங்கள்: ஒன்று மீண்டும் தட்டச்சு செய்யும் சிரமம் இல்லை. அடுத்தது தமிழில் தட்டச்சு செய்வதன் மூலம் எழுத்தாளர்களை இணையத்தமிழுக்கு அறிமுகப்படுத்துவது. இவ்விதம் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பப்படும் படைப்புகளையே பதிவுகள் ஏற்றுக்கொண்டு பிரசுரிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.