எழுத்தாளர் கோமகனை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'நடு' இணைய இதழில் எழுத்தாளர் வி.ரி.இளங்கோவனுடனான நீண்டதொரு ,காத்திரமான நேர்காணல் வெளியாகியிருந்தது. அதனைக்ப் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றோம்.
எழுத்தாளர் ஒருவருடனான இவ்விதமான நேர்காணல்களை, மற்றும் அவர்தம் எழுத்துலக அனுபவங்களை விபரிக்கும் வாழ்க்கைச் சரித்திரங்களை, சுயசரிதைகள் முக்கியமானவை. இலக்கியச் சிறப்பு மிக்கவை.
இந்நீண்ட நேர்காணலில் இளங்கோவன் அவர்கள் தன் எழுத்துலக அனுபவங்களை, அதற்குத் தன் குடும்பச்சூழல் எவ்விதம் உதவியது, மார்க்சியம் பற்றி, இலங்கை முற்போக்கு இலக்கியம் பற்றி, இலங்கையில் வெளியான சிற்றிதழ்கள் பற்றி, எழுத்தாளர்கள் எஸ்.பொ. கே.டானியல், அகஸ்தியர் பற்றி, தமிழர்கள் மத்தியில் தொடரும் தீண்டாமை பற்றி, இதற்குப் புகலிடத் தமிழர்கள் சிலர் எவ்விதம் தொடர்வதற்கு உதவுகின்றார்கள் என்பது பற்றி, தலித் என்னும் சொல்லாடல் பற்றி , வர்க்கப்புரட்சியின் அவசியம் பற்றி எனப் பல்வேறு விடயங்களைப்பற்றிய தன் கருத்துகளைப் பகிர்ந்திருக்கின்றார்.
நல்லதொரு நேர்காணல். இதற்குப் பின் 'நடு'ஆசிரியர் கோமகனின் பங்களிப்பும், அர்ப்பணிப்பும் தெரிகின்றன. அவர் இல்லையென்பது துயர் தருவது. ஆனால் அவர் தன் படைப்புகள் மூலம், 'நடு' இணைய இதழ் மூலம் தமிழ் இலக்கிய உலகில் நிலைத்து நிற்பார்.
நேர்காணல்-வி. ரி. இளங்கோவன்-கோமகன்
உங்களை நான் எப்படியாக தெரிந்து கொள்ள முடியும்?
நான் ஈழத்தின் வடபகுதியில் இருக்கின்ற தீவகப்பகுதியில் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவன். எமது குடும்பத்தில் உள்ள அனைவருமே ஏதோ ஒருவிதத்தில் இலக்கியத்துறையுடனும் ஊடகத்துறையுடனும் தொடர்புடையவர்கள் தான். எனது மூத்த சகோதரர் காலஞ்சென்ற திருநாவுக்கரசு – நாவேந்தன் புகழ்பெற்ற பேச்சாளர். அரசியல் துறையிலும் எழுத்துத் துறையிலும் தனக்கென்று ஓர் தனிமுத்திரை பதித்தவர். இலங்கை சாகித்திய மண்டலத்தின் சிறந்த சிறுகதைத் தொகுதிக்கான விருதைப் (1964) பெற்றவர். அடுத்த சகோதரர் துரைசிங்கம் சாகித்திய மண்டலத்தின் சிறுவர் இலக்கியத்திற்கான விருதை நான்கு முறை பெற்றவர். எமது வீட்டில் உடன்பிறப்புகள் எல்லோருமே இலங்கையிலிருந்து வெளியாகிய அனைத்து பத்திரிகைகளுக்கும் செய்தியாளர்களாக இருந்திருக்கின்றோம். அதனால் அனைத்துப் பத்திரிகைகளின் ஒவ்வொரு பிரதியும் இலவசமாகவே எங்கள் வீடுநாடி வரும். அத்துடன் எனது சகோதரர்களது இலக்கியச் செயற்பாடுகளினால் வீட்டில் ஓர் பாரிய நூலகம் போன்று புத்தகங்கள் நிறைந்து கிடக்கும்.