படித்தோம் சொல்கின்றோம் : ஜேகே. எழுதிய மாயப்புனைவு நாவல் வெள்ளி ! புதிய படைப்பு மொழியால் உருவான சங்க இலக்கியக்கதை ! - முருகபூபதி -
அவுஸ்திரேலியாவில் மெல்பனில் வதியும் ஜே.கே. என்ற புனைபெயரில் இலக்கியப்பிரதிகள் எழுதிவரும் ஜெயக்குமாரனின் வெள்ளி ( மாயப்புனைவு ) நாவலை அண்மையில் படித்தேன். ஜே.கே. மெல்பனில்தான் வசிக்கிறார் என்பதை அவரது எழுத்துக்களை தொடர்ந்து படித்துவரும் வாசகர்கள் நன்கு அறிவர். எனினும் ஜே.கே. என்றால், அது மறைந்துவிட்ட ஜெயகாந்தனைத்தானே குறிக்கும் என்றும், அவுஸ்திரேலியா எங்கே இருக்கிறது ? எனவும் கேட்கும் தமிழக வாசகர்களுக்காகவும், இந்தப்பதிவின் தொடக்கத்தில் அவ்வாறு எழுதினேன். தங்களுக்கு ஆஸ்திரேலியாதான் தெரியும், அவுஸ்திரேலியா எங்கே இருக்கிறது..? என்று ஒரு தமிழக வாசகர் தமிழ்நாடு திண்ணை இணைய இதழில் கேட்டிருந்தார்.
இங்கு நான் குறிப்பிடும் ஜே.கே. “படலை “ என்ற வலைத்தளமும் வைத்திருக்கிறார். அதிலும் இவரது ஆக்கங்களை நாம் படிக்கமுடியும். “படலை “ என்றால் அது என்ன..? எனக்கேட்கும் வாசகர்களுக்காக நான் ஒரு அகராதிதான் உருவாக்கவேண்டும். சரிபோகட்டும், ஜே.கே. ஏற்கனவே என் கொல்லைப்புறத்துக் காதலிகள், கந்தசாமியும் கலக்சியும், சமாதானத்தின் கதை முதலான படைப்புகளை நூலுருவில் தந்திருப்பவர். இவை பற்றியும் ஏற்கனவே எனது வாசிப்பு அனுபவத்தை எழுதியிருக்கின்றேன்.