அஞ்சலி: உதயகுமாரி பரமலிங்கம் (இலண்டன் நிலா) மறைவு! - பதிவுகள்.காம் -
- எழுத்தாளர் உதயகுமாரி பரமலிங்கம் (நிலா) அவர்கள் மறைந்த செய்தியினை துயரத்துடன் வசதிகள் வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். நிலா, வஸந்தா என்னும் பெயர்களில் இவரது இலண்டன் நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளன. அவ்வப்போது பதிவுகள் இதழில் வெளியாகும் நிகழ்வுகள் பகுதிக்கு இலண்டனில் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகளைப் புகைப்படங்களுடன் அனுப்பி, அவை பதிவுகள் இணைய இதழில் வெளியாகியுள்ளன. எழுத்தாளர் மாதவி சிவலீலனின் 'இமைப்பொழுது' நூல் வெளியீட்டு நிகழ்வு பற்றிய இவரது கட்டுரை 11 டிசம்பர் 2017 வெளியான பதிவுகள் இணைய இதழில் 'இலண்டனில் இமைப்பொழுது' என்னும் தலைப்பில் , நிகழ்வுக் காட்சிகளை வெளிப்படுத்தும் புகைப்படங்களுடன் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இலண்டன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான இவர் நிலா , அரியாலையூர் அம்புஜம் மற்றும் வஸந்தா ஆகிய புனைபெயர்களில் எழுதி வந்தவர். இவருடனான நேர்காணலொன்று ஏப்ரில் 2010 வெளியான பதிவுகள் இதழின் 124ஆவது பதிப்பில் எழுத்தாளர் நவஜோதி யோகரட்ணத்தின் எழுத்து வடிவத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது. அந்நேர்காணல் அவரைப்பற்றிய எழுத்து, வாழ்க்கை எனப் பலதரப்பட்ட விடயங்களைக் கூறுவதால் முக்கியத்துவம் மிக்கது. - பதிவுகள். காம் -
உதயகுமாரி பரமலிங்கத்துடனான (நிலா) சந்திப்பு! நேர்காணல் கண்டவர்: எழுத்தாளர் நவஜோதி யோகரட்ணம்
அரியாலையூர் அம்புஜம், நிலா ஆகிய புனைபெயர்களில் எழுதி வரும் உதயகுமாரி பரமலிங்கம் இலங்கையில் பதினைந்திற்கும் மேற்பட்ட நாடகங்களை இயக்கியுள்ளார். தொலைக்காட்சிகளில்; பங்கேற்றும், வானொலியில் அறிவிப்பாளராகவும் பங்களித்துவரும் உதயகுமாரி பரமலிங்கம் ‘எந்தையும் யானும்’ என்ற கவிதைத் தொகுப்பினையும் ‘எழுத எழுத’என்ற தனது அனுபவங்களின் கோர்ப்பாகவும் இரண்டு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். லண்டனில் கணனி வலை பொறியியல் துறையில் பட்டம் பெற்ற உதயகுமாரி நிலாமுற்றம் என்ற இணையத்தளத்தை திறம்பட நடத்தி வருகின்றார்.
நவஜோதி: புலம்பெயர் வாழ்வில் எங்களுக்கு உடல்ரீதியாக வசதிகள் இருப்பினும் மனநிலையில் வெறுமைகொண்டது போன்ற உணர்விலிருக்கிறோம். ஆனால் நீங்கள் உடலில் வலு குன்றியவராய் இருந்தும் மனரீதியாக மிகவும் தென்பாகஇ மிகுந்த உற்சாகமாகஇ ஆளுமையோடு இருக்கிறீர்கள். இத்தகைய நம்பிக்கை உங்களுக்கு எப்படி வேரூன்றியது.?