2017 ஒரு பார்வை!
வருடமொன்று கடந்து செல்லுது. வாழ்க்கை தானே விரைந்து போகுது. வருவது வருவதும் செல்வது செல்வதும் யாரின் அனுமதி கேட்காமலும் தானே இயங்கிக் கொண்டு போகிறது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவருக்கும் வாழ்வில் பல நிகழ்வுகளுக்குக் காரணமாகின்றன. அது சிலரின் வாழ்வில் மகிழ்ச்சிகரமானதாகவும், சிலரின் வாழ்வில் துயரமிக்கதாகவும் அமைந்து விடுகிறது. அவ்வகையில் கடந்து செல்லும் இந்த 2017 எதை எதை விட்டுச் செல்கிறது என்பதை இந்தச் சாமான்யனின் பார்வையில் மீட்டுப் பார்க்கிறேன். எனது மீள்பார்வை கொஞ்சம் சத்தமாக உங்கள் முன்றலிலும் விழுகிறது.
முதலாவதாக சர்வதேச அரங்கை எடுத்துப் பார்க்கிறேன். 2017ம் ஆண்டின் ஆரம்பம் அனைத்து உள்ளங்களையும் வித்தியாசமான உணர்வுகளால் தாக்கியது. ஜனநாயக ரசியலில் முன்னனியில் நிற்கும் மேலை நாடுகளில் ஒன்றான அமெரிக்கா எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கப் போகிறது ? எனும் கேள்வி அரசியல் ஆர்வலர்கள் தொடங்கி, சாதரண மக்கள் வரை சர்வதேச அளவில் மிகப்பெரிய கேள்வியாகத் தொங்கிக் கொண்டிருந்தது. தனது தேர்தல் பிரசார மேடைகளில் மிகத் தீவிரமான வகதுசாரப் போக்கைக் கடைப்பிடித்த அமெரிக்க ஜனாதிபது ட்ரம்ப் அவர்கள் பயணிக்கப் போகும் பாதையும், அப்பாதையினால் ஏற்படப்போகும் சர்வதேச தாக்கத்தைப் பற்றிய ஒருவிதமான அச்ச உணர்வும் மக்களிடையே பரவியிருந்தது. இன்றைய சூழலில் அவர் பதவிக்கு வந்து ஒரு வருடம் பூர்த்தியாகப் போகும் நிலையில் அவரின் அதிகாரம் நான் எதிர்பார்த்ததை விட குறைந்த அளவிலான சர்வதேச தாக்கத்தையே எற்படுத்தியிருக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளின் மீதான அவரது செயற்பசடுகளும், அமெரிக்க உள்நாட்டு இனவாதப் பிரச்சனைகளின் மேலோக்கத்திற்கு துணை போகும் அவரது சில செயற்பாடுகளையும் தவிர இதுவரை மட்டுப்படுத்தக்கூடிய அளவிலேயே திரு ட்ரம்ப் அவர்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.