மீள்பிரசுரம்: அறிக்கை தர்மபுரி மாவட்டத்தில் தலித்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதல்!
தர்மபுரி மாவட்டத்தில் தலித்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதல் உண்மை அறியும் குழு அறிக்கை
நவம்பர், 15, 2012- சென்ற இரு வாரங்களுக்கு முன்னர் தருமபுரி மாவட்டம் நாய்க்கன்கொட்டாய் கிராமத்தை ஒட்டிய மூன்று தலித் கிராமங்கள், அருகாமைக் கிராமங்களிலுள்ள வன்னியர் சாதியினரால் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்ட செய்தி தீண்டாமை ஒழிப்பிலும், சமூக ஒற்றுமையிலும் அக்கறையுள்ள பலரையும் கலங்கடித்தது. சுமார் பத்தாண்டுகள் முன்புவரை “தமிழகத்தின் நக்சல்பாரி” என்றெல்லாம் அழைக்கப்பட்ட இப்பகுதி இன்று வரை நக்சல் எதிர்ப்புக் காவற்படைகளின் கடும் கண்காணிப்பிற்குரிய ஒன்றாக உள்ளது. நக்சல்பாரிகள் எனப் பொதுவாக அறியப்படும் பல்வேறு மார்க்சிய, லெனினிய, மாவோயிஸ்ட் கட்சிக் குழுக்களால் தீண்டாமை ஒழிப்பிற்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்பட்ட பகுதியும்கூட இது. இத்தகைய ஒரு பகுதியில் இப்படி ஒரு வன்கொடுமை நிகழ்ந்தது வருத்தத்தையும் வியப்பையும் அளித்தது. இந்தியத் துணைக் கண்ட அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்நிகழ்வு குறித்து ஏராளமான தகவல்கள் ஊடகங்களில் வந்த வண்ணமுள்ளன. இவற்றைத் தொகுத்து, இவற்றின் உண்மைத் தன்மைகளை மதிப்பிடுவதும், இந்த வன்முறையின் பின்னணி, நிர்வாகத்தின் கவனக் குறைவுகள் மற்றும் அலட்சியங்கள் ஏதுமிருப்பின் அவற்றைக் கண்டறிவதும்,, உடனடி நிவாரணங்கள், எதிர்காலத்தில் இத்தகைய வன்முறைகள் நிகழாமல் தடுப்பதற்கான ஆலோசனைகள் ஆகியவற்றைப் பரிந்துரைப்பதும் அவசியமாகிறது. இந்த அடிப்படையில் உண்மை அறியும் குழு ஒன்று கீழ்க் கண்டவாறு அமைக்கப்பட்டது.