முதல் சந்திப்பு: இருவரின் வாழ்க்கையை திசை திருப்பிய பத்திரிகையாளர் ஆ. சிவநேசச்செல்வன்! - முருகபூபதி -
ஒருவரின் வாழ்க்கையை விதிதான் தீர்மானிக்கின்றது என்பார்கள். அந்த விதி, சில சமயங்களில் மற்றும் ஒரு நபரால் தீர்மானிக்கப்பட்டுவிடும். அவ்வாறுதான் எனது எழுத்துலக வாழ்விலும் விதி விளையாடியது. 1970 களில் சிறுகதை எழுதிக்கொண்டிருந்த என்னை, வீரகேசரி பத்திரிகை நிறுவனம், முதலில் பிரதேச நிருபராகவும், பின்னர் 1977 இல் தலைமை அலுவலகத்தில் ஒப்புநோக்காளராகவும், 1984 இல் துணை ஆசிரியராகவும் மாற்றியது. இந்த வளர்ச்சியில் என்னை துணை ஆசிரியராக்கிய பெருமை வீரகேசரியின் முன்னாள் பிரதம ஆசிரியர் ஆ. சிவனேசச்செல்வனையே சாரும். இவரை ஆசிச்செல்வன் எனவும் அழைப்பர்.
முதல் முதலில் 1976 ஆம் ஆண்டு பேராசிரியர் க. கைலாசபதி முதல் தலைவராக அமர்ந்த யாழ். பல்கலைக்கழக வளாகத்தில்தான் சந்தித்தேன். அக்காலப்பகுதியில் தமிழ் நாவலுக்கு நூற்றாண்டு பிறந்திருந்தது.
பல தமிழ் நாவலாசிரியர்களை உருவாக்கிய தமிழ்நாடே இந்த நூற்றாண்டை மறந்திருந்தபோது, பேராசிரியர் கைலாசபதி, தனது தலைமையில் அந்த நூற்றாண்டை இரண்டு நாள் ஆய்வரங்காக யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்.
அச்சமயம் நான் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகத்தில் முழுநேர ஊழியனாக பணியாற்றிக்கொண்டிருந்தேன். அதற்கு உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என்பதற்காக சங்கத்தின் செயலாளர் பிரேம்ஜி ஞானசுந்தரன் என்னை குறிப்பிட்ட ஆய்வரங்கிற்கு அனுப்பிவைத்திருந்தார். பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்த நண்பர் எம். ஏ. நுஃமான் என்னை தன்னோடு அந்த நாட்களில் தங்க வைத்துக்கொண்டார். நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கு தொடங்குவதற்கு முதல் நாள் நல்லூரில் ஒரு மண்டபத்தில் அந்த ஆண்டு தேசிய சாகித்திய விருது பெற்ற செங்கை ஆழியானுக்கு யாழ். இலக்கிய வட்டம் ஒரு பாராட்டுக் கூட்டத்தை நடத்தியது. நண்பர் மல்லிகை ஜீவாவுடன் சென்றிருந்தேன். அந்தக்கூட்டத்திற்கு நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக கைலாசபதியால் தமிழ் நாட்டிலிருந்து அழைக்கப்பட்டிருந்த இலக்கிய படைப்பாளி அசோகமித்திரனை இரண்டுபேர் ஒரு காரில் அழைத்து வந்தனர். அவர்கள் ஆசிச்செல்வனும் விரிவுரையாளர் சோ. கிருஷ்ணராஜாவும் என்று மல்லிகை ஜீவா எனக்கு அறிமுகப்படுத்தினார்.
மீண்டும் பல்கலைக்கழகத்தில் ஆய்வரங்கு மண்டபத்தில் ஆசிச்செல்வனைச்சந்தித்து பேசினேன். முதல் நாள் அரங்கு நடந்தபோது, வளாகத்திற்கு அருகில் அமைந்திருந்த ஒரு அழகான இல்லத்தில் எமக்கு மதிய உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நான் வெளியே சென்று மதிய உணவை பெற்றுக்கொள்ள புறப்பட்டபோது, “ இங்கே வாரும் காணும். தொலைவிலிருந்து வந்திருக்கிறீர். எங்களோடு இருந்து சாப்பிடலாம் “ என்று அன்போடு அழைத்தவர்தான் இந்த ஆசிச்செல்வன். அந்த இரண்டு நாட்களும் இலக்கியப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மூத்த எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளுடன் பொழுது கரைந்தது.
ஆசிச்செல்வனின் எழுத்துக்களை மல்லிகையில் அவ்வப்போது படித்திருக்கின்றேன். அதில் மங்களநாயகம் தம்பையா என்ற ஈழத்தின் மூத்த நாவலாசிரியர் பற்றிய கட்டுரை முக்கியமானது. பின்னாளில் பேராசிரியர் கைலாசபதி எழுதிய பாரதியும் பாட பேத ஆராய்ச்சியும் நூலையும் ஆசிச்செல்வன் பதிப்பித்திருந்தார்.
1983 இல் கலவரம் வந்ததையடுத்து வீரகேசரி ஆசிரிய பீடத்தில் வெற்றிடங்கள் தோன்றின. அங்கே ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்துகொண்டே வாரவெளியீட்டில் வாரந்தோறும் இலக்கியப்பலகணி என்ற பத்தியை எழுதிவந்தேன். 1984 ஆம் ஆண்டு பிரதம ஆசிரியர் பதவிக்கு ஆசிச்செல்வன் வரவிருக்கிறார் என்ற செய்தி அங்கே பரவியிருந்தது. அவர் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பது வாரவெளியீடு ஆசிரியர் பொன். ராஜகோபாலுக்கு நன்கு தெரியும்.
ஒருநாள் திங்கட்கிழமை எனது ஓய்வுநாள். நான் கடமைக்கு சென்றிருக்கவில்லை. அன்றைய தினம்தான் ஆசிச்செல்வன் பிரதம ஆசிரியர் பதவியை பொறுப்பேற்க வந்துள்ளார். வந்தவர், தனக்குரிய பிரத்தியேக அறைக்குள் பிரவேசித்ததும், அங்கிருந்த சிற்றூழியரை அழைத்து, “ முருகபூபதி எங்கே…? அவரை வரச்சொல்லும் . “ என்று சொல்லியிருக்கிறார். அந்தச் சிற்றூழியர் எமது ஒப்புநோக்காளர் பிரிவுக்கு வந்து, நான் மறுநாள்தான் கடமைக்கு வருவேன் என்றறிந்து சொல்லியிருக்கிறார். இந்த விவகாரம் அலுவலகத்தில் சிறிய கசமுசாவை ஏற்படுத்தியிருக்கலாம்.
மறுநாள் கடமைக்கு வந்தபோது எமது பிரிவிலிருக்கும் அன்பர் என்ற பொன்னுத்துரை, புதிய ஆசிரியர் என்னைத்தேடினார் என்ற தகவலைச்சொன்னார். பிரதம ஆசிரியரின் அறைக்குச் சென்று அவரை வாழ்த்தினேன். “ என்ன காணும்…நீர் அங்கேயா இருக்கிறீர்..? இந்த ஆசிரிய பீடத்தின் பக்கம் வரலாமே…! உடனே ஒரு விண்ணப்பத்தை தயார் செய்து கொண்டுவந்து தாரும். முகாமையாளர் பாலச்சந்திரனிடம் சொல்கின்றேன் “ என்றார். இவ்வாறுதான் நான் அங்கே துணை ஆசிரியரானேன்.
அதனையடுத்து என்னுடன் ஒப்புநோக்காளர் பிரிவிலிருந்த நண்பர் வீரகத்தி தனபாலசிங்கத்தையும் அவருக்கு அறிமுகப்படுத்தினேன். அவரும் சில மாதங்களில் துணை ஆசிரியரானார். இவ்வாறு எம்மிருவரதும் தலைவிதியை மாற்றிய பெருமை எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய ஆ. சிவநேசச்செல்வன் அவர்களையே சாரும்.
நான் 1987 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்த பின்னர், வீரகேசரியில் நிறைய மாற்றங்கள் நேர்ந்தன. வர்த்தகர் சாமி என்பவரால் புதிதாக தொடங்கப்பட்ட தினக்குரல் பத்திரிகைக்கு முதலில் பிரதம ஆசிரியராக பொன். ராஜகோபாலும் செய்தி ஆசிரியராக நண்பர் தனபாலசிங்கமும் சென்றனர். பொன். ராஜகோபாலின் மறைவுடன், சிவநேசச்செல்வன் தினக்குரலின் பிரதம ஆசிரியரானார். 1997 ஆம் ஆண்டு நான் இலங்கை வந்தசமயத்தில் எங்கள் நீர்கொழும்பூரில் ஏற்பாடு செய்த மல்லிகை ஜீவா பாராட்டு விழாவிலும் கலந்துகொண்டு உரையாற்றி சிறப்பித்தவர் சிவநேசச் செல்வன். சிவநேசச்செல்வன், கனடா சென்றதும் அவரது இடத்தில் தனபாலசிங்கம் அமர்ந்தார்.
சிவநேசச் செல்வன், மாதொருபாகன் என்ற புனைபெயரில் தொடர்ந்து பத்தி எழுத்துக்களை எழுதிவந்தார். இதுவரையில் ஈழத்தில் தமிழ் நாவல் இலக்கியம், ஈழத்துத் தமிழ் பத்திரிகைகள் ஓர் ஆய்வு, ஈழநாட்டிலே தமிழ்ப் பத்திரிகைகளின் தோற்றமும் வளர்ச்சியும் சில குறிப்புக்கள், காலத்தின் பின்னணியில் ஆறுமுகநாவலர், நாவலரியல் நொறுங்குண்டஇருதயம் கதையும் கதைப் பண்பும் ஆகிய நூல்களை வரவாக்கியிருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப்பின்னர் இவரை கனடாவில் சந்திக்கும் நாளுக்காக காத்திருக்கின்றேன். இந்தப்பதிவின் மூலம் நான் சொல்லவரும் செய்தி இதுதான்: ஒருவரை இனம்கண்டு, ஊக்குவித்து வளர்த்துவிடும் இயல்பு உன்னதமானது. புதிய தலைமுறையினரை மூத்த தலைமுறையினர் இனம் கண்டு வளர்த்துவிடல் வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.





அவுஸ்திரேலியாவின் நியுவ் சவுத் வேல்ஸ் மாநிலத்தின் கிராவின் புறநகரின் ’புனித அந்தோனியார்’ ஆரம்பப்பள்ளிக்குள் நுழைந்த பிரியா, தன் மகள் கீர்த்தியின் முதலாம் வகுப்பை அடைந்ததும், “வாடா குஞ்சு, வீட்டைப் போகலாம்,” எனக் கீர்த்தியை அன்போடு தூக்கிக் கொஞ்சிய பிரியாவை உற்று நோக்கி புதிதாக பார்ப்பது போல் பார்த்தாள் கீர்த்தி. திரும்பி நன்சிக்கு பக்கத்தில் நின்ற அவளது தாயாரையும் பார்த்தாள். ”இன்றைக்கு என்ன செய்தீங்கள்? கைவேலை செய்தீங்களா?” எனக் கேட்டபடி நன்சியைத் தூக்கிக் கொண்டுபோன அவளது தாயையும். பிரியாவையும், மாறி மாறிப் பார்த்தாள். அவளது சின்ன மூளைக்கு எதுவுமே புரியாது குழம்பியது. அந்தச் சின்ன மூளைக்கு எதோ புரிகிற மாதிரி இருந்தது ஆனால் புரியாத மாதிரியும் இருந்தது.

தக்ஷிலா ஸ்வர்ணமாலி ‘அந்திம காலத்தின் இறுதி நேசம்’ மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பின்மூலம் தமிழ் வாசகவுலகில் அறிமுகமானவர். இந் நாவலின் மொழிபெயர்ப்பாளர் ரிஷான் ஷெரிப் மொழிபெயர்ப்பாளராகவும் படைப்பாளியாகவும்கூட நன்கறியப்பட்டவர். இது, ஆதிரை வெளியீடாக ஜனவரி 2022இல் வெளிவந்த இந்த நாவலின் விமர்சனமல்ல. சில நாவல்களை அவ்வாறாக எடைபோடுவதும் எது காரணத்தாலோ சுலபத்தில் கூடிவருவதில்லை. முன்னோடிகளான நாவல்களுக்கு அவ்வாறான இடைஞ்சல்களை முன்பும் சிலவேளை சந்தித்திருக்கிறேன். இதனை சரியாகச் சொல்வதானால் விமர்சிப்புக்கான ஒரு பாதையை அமைத்தலெனக் கூறலாம். அண்மையில் நான் வாசித்த நல்ல நாவலாக ‘பீடி’ இருக்கிறவகையில், அவ்வாறான விருப்பம் எனக்கு ஏற்பட்ட காரணத்தை, எழுதுவதன் மூலம் எனக்காகவேயும் கண்டடையும் ஆர்வத்தில் இந்த முயற்சி. அதனால்தான் மேற்குலக நாவல் விதிகளின்படி அல்லாமல் அதை அதுவாகப் பார்க்கும் ஒரு ரசனைப் பாணியில் இந்த நாவலை நான் அணுகியிருக்கிறேன். என்றாலும் அதற்கு முன்பாக தெளிவுபடுத்தப்பட வேண்டிய சில விஷயங்கள், ‘பீடி’ நாவலைப் பொறுத்தமட்டிலன்றி பொதுவாகவே தற்கால நாவல்கள் குறித்து, உள.

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









