வரலாற்றுச் சுவடுகள்: முன்னாள் யாழ் மேயர் செல்லன் கந்தையன் அவர்களுடனொரு நேர்காணல்!
அண்மையில் முனைவர் செல்லத்துரை சுதர்சன் அவர்கள் யாழ் மாநகரசபையின் முன்னாள் மேயரான செல்லன் கந்தையா அவர்களுடன் நடாத்திய நேர்காணலிது. இது பற்றி முகநூலில் காரசாரமாக விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் சூழலில் வெளிவந்திருப்பதால் இதற்கொரு முக்கியத்துவமுண்டு. இந்த நேர்காணல் பல விடயங்களை வெளிக்காட்டியுள்ளது. அவை:
* யாழ் முன்னாள் மேயர் செல்லன் கந்தையன் அவர்களின் அரசியல் குருக்கள் தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர்கள். உடுப்பிட்டி எம்.பி. சிவசிதம்பரம் பல வழிகளில் அவருக்கு உதவியுள்ளார். தனது பதவியைப்பாவித்து 3000 ரூபா கடனெடுத்துக் கொடுத்து உதவியுள்ளார். தமிழர் கூட்டணித் தலைவர்கள் பலர் தந்தை செல்வா, அமிர்தலிங்கமுட்படப் பலர் அவரது திருமணத்தில் கலந்துகொண்டிருக்கின்றார்கள். தந்தை செல்வாவின் கையாள் என்று சொல்லக்கூடிய ஒருவர்தான் இவரது அண்ணர் தேவராசன். ஆலாலசுந்தரம், ஆனந்தசங்கரி போன்றவர்கள் எல்லோரும் இவருக்கு மிகவும் நெருக்கமானவர்கள். தந்தை செல்வாவின் ஈமக்கிரியைகளின்போது அவரது தலைமாட்டிலிருந்து விசிறிக்கொண்டிருந்தவர் இவரே. இவையெல்லாம் எவ்வளவுதூரம் அவர் கூட்டணியின் தீவிர ஆதரவாளராக இருந்திருக்கின்றார் என்பதைப் புலப்படுத்துகின்றன. அதுதான் கூட்டணித்தலைவர்கள் இவரிடம் காட்டிய நெருக்கத்துக்கு மிக முக்கிய காரணமாக எனக்குத்தோன்றுகின்றது.