ஜனவரி 30 - மகாத்மா காந்தி நினைவு தினம்! அண்ணல் சுத்தப்படுத்த விரும்பிய பாரத தேசம் ! - முருகபூபதி -
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்த குழந்தை காந்தி எப்படி மகாத்மாவானார்...? எவ்வாறு ஒரு தேசத்தின் பிதாவாக மாறினார் ....? என்பதற்கெல்லாம் வரலாறுகள் இருக்கின்றன. தற்காலக் குழந்தைகளுக்கும் இனிபிறக்கவிருக்கும் குழந்தைகளுக்கும் இப்படியும் ஒரு மனிதர் ஆசியாக்கண்டத்தில் ஒரு காலத்தில் பிறந்து - வாழ்ந்து - மறைந்தார் என்று சொல்லிக்காண்பிப்பதற்கு காந்தி பற்றிய திரைப்படங்களும் ஆங்கிலத்திலும் அனைந்திந்திய மொழிகளிலும் இருக்கின்றன.
இந்திய சுதந்திரத்திற்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதப்போர்களையும் மௌனத்துடன் உப்புச்சத்தியாக்கிரகப் போராட்டங்களையும் நடத்தி நேற்று வரையில் இந்தப்போர்களை எதற்காகவும் தொடரலாம் என்ற முன்னுதாரணத்தையும் அன்றே விதைத்துவிட்டுச்சென்றவர் ! 1869 அக்டோபர் மாதம் 2 ஆம் திகதி பிறந்த காந்தி எந்தத்தேசத்தின் விடுதலைக்காக அறவழியில் போராடினாரோ... அதே தேசத்தின் குடிமகன் ஒருவனால் 1948 இல் ஜனவரி 30 ஆம் திகதி வன்முறையினால் கொல்லப்பட்டார்.
ஈஸ்வர அல்லாஹ் தேரே நாம்... எனப்பாடி இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டு அந்த ஒற்றுமைக்காகவே தொடர்ந்தும் குரல்கொடுத்தமைக்காக ஒரு இந்துவான நாதுராம் கோட்சேயினால் சுட்டுக்கொல்லப்பட்டார். கோட்சேயின் கழுத்தில் தூக்குக்கயிறு தொங்குவதற்கு முன்னர் உனது இறுதி விருப்பம் என்ன ? – என நீதிமன்றில் கேட்டபொழுது, “பாரதத்திலிருந்து பிரிந்துபோன பாக்கிஸ்தானிற்குள் ஓடிக்கொண்டிருக்கும் சிந்து நதி என்றைக்கு மீண்டும் பாரதத்திற்குள் திரும்பி வருகிறதோ அதற்குப்பின்னர்தான் தனது அஸ்தி (சாம்பல்) கரைக்கப்படவேண்டும். அதுவே எனது கடைசி விருப்பம் . “ எனச்சொல்லியிருக்கிறான். அதனால் - அவனது அஸ்தி இன்னமும் கரைக்கப்படவில்லை என்றும் தகவல் உண்டு.